Monday, June 21, 2010

செந்தூரப் பூவே

பாடல் : செந்தூரப் பூவே

படம் : பதினாறு வயதினிலே
பாடியவர்கள் : எஸ். ஜானகி
எழுதியவர் : கங்கை அமரன்
இசை : இசைஞானி

செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக் காற்றே!
என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?
நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே!

1. தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே!
என்ன இனிக்கிது அந்த நினைவதுவே!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே!
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!

2. நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!
கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!
காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே!
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!

16 வயதினிலே! செயற்கையான Sets போட்டு ஸ்டுடியோவுக்குள் கதை சொல்லிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் Formula-வை உடைத்து, கிராமத்துப் புழுதியிலும், வயல் வரப்பிலும் ரசிகர்களை இழுத்துச் சென்று கதை சொன்ன இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம்! இந்தப் படத்தின் கதையை பாரதிராஜா முதன் முதலில் சொன்னது தனது நண்பன் எஸ்.பி.பி-யிடம்! பத்மஸ்ரீ எஸ்.பி.பி. அவர்கள்தான் படத்தை (அப்பொழுது பாரதிராஜா படத்திற்கு யோசித்து வைத்திருந்த பெயர் ‘மயிலு’) முதலில் தயாரிப்பதாக இருந்து, பின் பல்வேறு காரணங்களால் முடியாமல் போனது. முகம் நிறைய அப்பிய மேக்-அப் உடன் ஹீரோக்களும், ஹீரோயின்களும் வலம் வந்து கொண்டிருந்ததை மட்டுமே அதுவரை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களை, அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டு, வாய் நிறைய புகையிலை எச்சிலுடன், காலை இழுத்து இழுத்து நடந்து வந்த ‘சப்பாணியை’-யும் ஹீரோவாக ஏற்றுக் கொண்டு ரசிக்க வைத்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா! படம் Box Office-ல் சக்கை போடு போட்டதாக ‘வரலாற்றுச் சுவடுகள்’ தெரிவிக்கின்றது. ‘அன்னக்கிளி’ படத்திற்குப் பிறகு இசைஞானி ஏக பிஸியான நேரத்தில் ஒப்புக் கொண்ட படம் ’16 வயதினிலே’!.

‘மயில்’ (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மன நிலையில் பாடும் பாட்டு’. ‘செந்தூரப் பூவே’ பாடலுக்காக இசைஞானியிடம் இயக்குனர் கூறிய Situation இவ்வளவுதான். இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி மேலும் கூறும் பொழுது ‘அப்போதெல்லாம் எந்த Director-ம் இசையமைப்பாளரிடம் ‘இப்படி இருக்கலாம்! அப்படி இருக்கலாம்!’ என்று அபிப்ராயமோ ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கி விட்டு அப்படியே விட்டு விடுவார்கள்’. இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். தேவைப்படும் சிறு சிறு மாற்றங்களை அதன் பின் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். இந்தப் பாடலுக்காக சில Tune-களைப் போட்டேன்! எதுவும் பாரதிக்குப் பிடித்த மாதிரி தெரியவில்லை! அதன் பின்னர் ஒரு Tune-ஐப் போட்டு ‘பாரதி! இது நன்றாக இருக்கும்’ என்று வற்புறுத்தினேன். அதுதான் “செந்தூரப் பூவே” பாடல் மெட்டு” என்கிறார். (ஆதாரம்: ‘தினத்தந்தி - வரலாற்றுச் சுவடுகள்’).

இந்தப் பாடலை யாரை வைத்து எழுத வைக்கலாம் என்று யோசித்த பொழுது, பாரதிராஜாதான் கங்கை அமரனின் பெயரை இசைஞானியிடம் சிபாரிசு செய்திருக்கிறார். இதைக் குறித்து ‘Zee தமிழ்’ தொலைக்காட்சிக்கு கங்கை அமரன் கொடுத்த பேட்டியில் ‘நான் பல்லவியை எழுதி முடித்ததும் பாரதிராஜா தான் ‘சரி! சரணம் எழுதுடா பார்ப்போம்’ என்றார். நான் உடனே ‘தென்றலைத் தூது விட்டு’ சரணத்தை எழுதினேன். அவர் கடைசியில் ‘அதுவே இருக்கட்டும்’ என்று OK செய்து விட்டார். என் பெயரையும் ‘அறிமுகம்’ என்று திரையில் காண்பித்தார். அதன் பின்னர் வரிசையாக அவர் படங்களுக்கு பாடல்கள் எழுதினேன்’ என்று குறிப்பிடுகிறார். சில வருடங்களுக்கு முன், ‘செந்தூரப்பூ’ என்று ஒரு பூவே கிடையாது! அது பாடலுக்காக எழுதப்பட்டது!’ என்று திரு. கங்கை அமரன் அவர்கள் மற்றொரு Interview-வில் குறிப்பிட்ட ஞாபகம். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தப் பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இந்தப் பாடலைக் குறிப்பிட்டுள்ளார்.

திருமதி எஸ். ஜானகி அவர்களுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த இந்தப் பாடலை நிறைய மேடைகளில் அவர் பாடிக் கேட்டிருக்கிறேன். எத்தனை உச்ச ஸ்தாயியில் பாடினாலும் முகத்தில் ஒரு சின்ன புருவ உயர்த்தல் கூட இல்லாமல் பாடலில் அவர் கொடுக்கும் Expression.. அது Nightingale of South India-வினால் மட்டுமே முடிந்த ஒரு கலை! (ஆண்களில் இப்படிப் பாடக்கூடிய பாடகர் திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள்). ஒரு காலத்தில் ‘ஜில்லென்றக் காற்றே’ முடிவில் வரும் Bass Guitar-ன் மூன்று Notes-களுக்காக மட்டுமே Tape Recorder-ல் ஏகப்பட்ட முறை அந்த வரியை Rewind செய்து Cassette-ஐ நாசமாக்கிய நினைவு!

ஜெயா டி.வி.யின் ‘அன்றும் இன்றும் என்றும் Maestro Live in Concert’-ல் இசைஞானி அவர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பாடல்களின் பங்களிப்பு பற்றி விளக்கினார். ஒரு தாய் பாடும் ஆரிராரோ தாலாட்டு, பின் குழந்தை வளர்ந்ததும் அவள் பாடும் ‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு’ பாடல், ‘சடுகுடு’ விளையாட்டுப் பாடல், வயலில் பாடப்படும் அறுவடைப் பாடல், காதல் பாடல், காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தவிக்கும் பொழுது பாடப்படும் பாடல், இப்படி பல நிலைகளில் பாடப் படும் பாடல்களை விளக்கிக் கொண்டே வந்த அவர் ‘விரக தாபம்’ என்ற உணர்வைக் குறிக்கும் வகையில் திரைப்படங்களில் வந்த பாடல்களை விளக்கத் துவங்கினார். “விரக தாபம் என்ற உணர்வைச் சொல்ல எவ்வளவோ Composers எவ்வளவோ அழகான Melodies எல்லாம் போட்டு இருக்கிறார்கள். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்’, Shankar Jaikishan இசையமைத்த ‘Ye Shaam Ki Thanhaayiyaan’ (லதா மங்கேஷ்கர் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசைஞானி Hum மட்டும் செய்து காண்பித்தார்! என்ன படம் என்று தெரியவில்லை!). அந்த Influence-ல் நான் போட்ட பாட்டு! Influence என்றால், ‘விரக தாபம்’ என்ற உணர்வுக்கு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை என்ற உணர்வுக்கு நான் போட்ட பாடல்” என்று இசைஞானி கூறி முடிக்க, Keyboard Bells உடன் ‘செந்தூரப் பூவே’ Prelude-ஐக் கலைஞர்கள் இசைக்கத் துவங்கினர். இசைஞானி Music conduct செய்த காண்பதற்கரிய ஒரு தருணம் அது. Keyboard bells முடிந்து வயலின்களின் ஆர்ப்பாட்டமான Orchestration துவங்கவும் பாடலை அடையாளம் கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கூட்டத்தில் ஏகக் கரகோஷம். ஆனால் இசைஞானி முகத்தில் திருப்தியில்லை. ‘Wait’! என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் நிறுத்தியவர், மீண்டும் இசைக்கச் சொன்னார். மீண்டும் Violin Orchestration துவங்க, திருப்தியில்லாதவராய் மீண்டும் நிறுத்தியவர், Violinists பக்கம் திரும்பி.. நி..ச..ப..ப.. C Sharp, D, A என்று திருத்தங்களைக் கூறத் துவங்கினார். அதன் பின் 1-2-3 1-2-3 சொல்லி அவர் ஆரம்பிக்கவும் கலைஞர்கள் மீண்டும் இசைக்கத் துவங்கினர். இவ்வளவும் மேடையிலேயே பல ஆயிரம் மக்களின் முன்னால் நிகழ்கிறதே என்று இசைத்துக் கொண்டிருந்த கலைஞர்கள் எல்லோரும் நெளிய, ‘பரவாயில்லை! அவங்க (Audience) முன்னாடி Rehearsal பண்ண மாதிரி இருக்கட்டும்’ என்று சிரித்தார் இசைஞானி.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு எங்கள் வீட்டு சமையலைறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. ஒரு நாள் ஏகப் பசியில் சமையலறைக்குள் நுழைந்தேன். அடுப்பில் சாம்பார் தயாராகக் கொதித்துக் கொண்டிருந்தது. எனக்கோ கொலைப் பசி. ‘பசிக்குதும்மா!’ என்று நான் சொல்லவும் ‘கொஞ்சம் இருடா’ என்றவர், கொஞ்சம் சாம்பாரை கரண்டியில் சிறிதளவு எடுத்து, தன் கையில் ஊற்றி சுவைத்து பார்த்து, அதன் பின் தனது அஞ்சரைப் பெட்டியில் இருந்த மசாலாக்களில் ஒன்றை (அதில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி தவிர எனக்கு ஒன்றன் பெயரும் தெரியவில்லை) ஒரு சிட்டிகை அள்ளி அதில் போட்டு கலக்கி, பின் மீண்டும் சுவைத்துப் பார்த்து, அதன் பின் மீண்டும் பிறிதொரு வஸ்துவை இரு விரல்களில் கிள்ளி அதனுள் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பார்த்து… இப்படியே ஒரு 3 நிமிடங்களுக்கு சாம்பாருடன் போராடிக் கொண்டிருந்தார். ‘இந்த ஒரு சின்ன சிட்டிகை மசாலா அப்படி என்ன சாம்பாரின் சுவையைக் கூட்டவோ குறைக்கவோ போகிறது’? என்று எனக்கு ஏக எரிச்சல் (பசி?). அதன் பின்னர் யோசித்துப் பார்த்த பொழுது எனக்கு ஒரு விஷயம் விளங்கியது. இது நம் எல்லோர் வீட்டின் சமையலறையிலும் நம் அம்மாக்கள் தினம் தினம் அரங்கேற்றும் ஒரு நர்த்தனம்!

இந்தக் காட்சியை நான் இசைஞானி தன் இசைக் கலைஞர்களுடன் Music Conduct செய்து கொண்டிருந்த அழகுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். சுவையான ஒரு உணவைத் தன் பிள்ளைகளுக்குத் தர ஒரு தாய் சமையலறையில் நடத்தும் ஒரு போராட்டத்தைப் போல நல்ல இசையைத் தன் ரசிகர்களுக்குத் தர இசைஞானி மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். உணவு விஷயத்தில் ஒரு தாயும், இசையில் நம் இசைப் பிதாவும் 99.9% Output-ஐ அறவே வெறுக்கும் Perfectionists என்ற விஷயம் எனக்கு விளங்கியது.

பாடல்களை download செய்வது இசைஞானிக்கு அறவே பிடிக்காத விஷயம் என்பதாலும், இதைக் கண்டித்து அவர் பல முறை பேசியிருப்பதாலும் இந்தப் பக்கத்தில் அவர் பாடல்களின் download links எதையும் தருவது இல்லை. இருப்பினும் இசைஞானி Conduct செய்யும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை அதைப் பார்க்காதவர்கள் Miss செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் Youtube link-ஐ கீழ்க்காண்க! http://www.youtube.com/watch?v=KXf1AxdK0oc. இசைஞானி மன்னிப்பாராக! [முழு Concert-ம் CD-க்களில் கிடைக்கிறது! வாங்கிக் கண்டு, கேட்டு மகிழ்க!]. இந்தப் பாடலின் Prelude-ன் முடிவில் Flute போல இசைக்கப்படும் ஒரு Wind Instrument, Flute போல பக்கவாட்டில் இருக்கும் துளையில் காற்றை ஊதாமல், குழலின் ஒரு முனையில் வாய் வைத்து ஊதப்படுகிறது. இதன் பெயர் Recorder என்று நினைக்கிறேன். இது First Interlude-ன் துவக்கத்திலும் ஒலிக்கிறது. சரணத்தில் ‘என்ன இனிக்கிது அந்த நினைவதுவே’ வரியில் எஸ்.ஜானகி அவர்கள் தன் குரலில் ஒரு Softness கலந்து decorate செய்து பாடும் அழகு ‘விரக தாபம்’ என்ற உணர்வின் tantalizing display!

Chords Progression, பாடலின் Carnatic Raga தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!!

இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் அவர்கள் இசைஞானியைக் குறித்துக் கூறியதாக வலையில் படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது. “இசைஞானி என்று அவரை அழைப்பதை விட இசை விஞ்ஞானி என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்!!”

Monday, June 14, 2010

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு


பாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
படம் : மண் வாசனை
பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு!
பூத்திருச்சு வெக்கத்த விட்டு!
பேசிப்பேசி ராசியானதே!
மாமன் பேரச்சொல்லி சொல்லி ஆளானதே!
ரொம்ப நாளானதே!!

1. மாலையிடக் காத்து அல்லி இருக்கு!
தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு!
இது சாயங்காலமா? மடி சாயும் காலமா?
முல்லப் பூச்சூடு! மெல்ல பாய் போடு!
அட வாட காத்து சூடு ஏத்துது!! - பொத்தி வச்ச

2. ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்!
வெக்க நெறம் போக மஞ்சக்குளிச்சேன்!
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா?
இல்ல முதுகு தேய்க்கவா?
அது கூடாது! இது தாங்காது!
சின்னக் காம்பு தானே பூவத் தாங்குது! - பொத்தி வச்ச

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’. பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் இருக்கும் டீக்கடைகளில் எல்லாம் அப்பொழுது இந்தப் பாடல்தான். இசைஞானி இசைத்த இந்த Melody-ல் total தமிழ்நாடும் கிறங்கிக் கிடந்த நாட்கள் அவை!

1980கள்! தமிழக கிராமங்களில் வயதுக்கு வந்த ஒரு ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவதென்பது கூட மிகவும் Taboo ஆக பார்க்கப் பட்ட காலம் அது! அப்படி இருக்கையில் ‘மண் வாசனை’ மிகுந்த ஒரு குக்கிராமத்தில் தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை ஒரு ஆண் தனியே சந்தித்து பேசும்பொழுது எப்படி இருக்கும்? அப்பொழுது எழும் ஒரு “Having broken the Rule” thrill mood-ஐ இந்தப் பாடல் முழுவதும் இசைஞானி வார்த்து ஊற்றியிருப்பார்.

Rhythm எதுவும் இல்லாமல் ஒரு Solo Violin Piece உடன் ஆரம்பிக்கும் Prelude, Keyboard Bells, Flute, Bass Guitar என வகை வகையான வாத்தியங்களை கை பிடித்து அழைத்து வந்து Main Flute Piece ஆரம்பிக்கும் இடத்தில் Tabla Rhythm வந்தவுடன் விடைபெற்றுக் கொள்கிறது. [Prelude ஆரம்பித்த பத்தாவது வினாடியில் ஜோதியில் கலக்கும் Instrument-ன் பெயர் என்ன? Synth??].

பல்லவியில் “நாளானதே” என்ற எஸ்.ஜானகி பாடியவுடன் ஒரு “ஆஹாங்?” உடன் எஸ்.பி.பி. இணைந்து கொள்கின்றார். “ரொம்ப நாளானதே” பாடி முடிக்க, எஸ்.பி.பி.யின் தனது Trade Mark “ம்ஹூம்”… சிரிப்புடன் ‘பொத்தி வச்ச மல்லிகை’ பல்லவியில் ஐக்கியமாகிறார். பல்லவியில் நன்றாக கவனியுங்கள்! எஸ்.ஜானகி “மல்லிகை மொட்டு” என்று சுத்தத் தமிழில் பாடியிருப்பது ஒரு அழகென்றால், எஸ்.பி.பி. பேச்சுத் தமிழில் ‘மல்லிக மொட்டு’ என்று பாடியிருப்பது இன்னும் அழகு.

ஒரு கிராமத்து சூழலில் பாடப்படும் இந்தப் பாடல் இவ்வளவு Melodious ஆக ஆரம்பித்து அப்படியே சென்று கொண்டிருந்தால் எப்படி? ஒரு Rural Touch, மண்ணின் மணம் எங்கேனும் இருக்க வேண்டுமே? அது தானே இசைஞானியின் முத்திரை? முதல் பல்லவி முடிந்து வரும் 1st Interlude-ன் பிற்பகுதியில் இசைஞானி ஒலிக்க விட்டிருக்கும் நாகஸ்வரமும், மேளச் சத்தமும் பாடலின் Melody-ஐ, Flow-வை உடைக்காமல், ஒரு Village Effect-ஐக் கொடுத்து, சற்றே நம்மை கிராமத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பாடலில் வந்து விட்டுச் செல்லும்.

‘அட வாடக் காத்து சூடு ஏத்துது!’ என்று எஸ்.ஜானகி பாடி முதல் சரணத்தை முடித்து வைக்க, அதன் பின் Rhythm நின்று போய், பல்லவி ஆரம்பிக்கும் இடத்தில் அழகான தாளத்தில் கைத்தட்டல்கள்!! Rhythm நின்று போனதாலோ என்னவோ பின்னால் ஒலிக்கும் Bass Guitar-ம், Strings-ம் இன்னும் தெளிவாக, அழகாக ஒலிக்கின்றன. இரண்டாவது Interlude ஒரு Solo Flute உடன் துவங்க, அதனுடன் வரும் Keyboard Punches, Rhythm Section-ன் வேலையை எடுத்துக் கொள்கிறது. முத்தாய்ப்பாய் இதன் பின் வரும் பிரம்மாண்ட Violin Orchestration இசைஞானியின் Signature!!

இது ஒரு சாதாரண 3/4 Beat-ல் அமையப் பெற்ற பாடல் என்று யாராவது சொன்னாலோ அல்லது Rhythm என்ன என்று deliberate-ஆக கவனித்தாலோ தான் தெரியும். அப்படி அழகான ஒரு Rhythm Pattern-ஐ Tabla-வில் பின்னி இருப்பார் இசைஞானி.

ஜெயா டி.வி.யில் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒருமுறை Contestants பாடி முடிக்க, பத்மஸ்ரீ எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலைக் குறித்து, “இந்த மாதிரி ஒரு பாட்டு வேற யாராவது பண்ண முடியுமா? என்ன Orchestration-யா? I feel like Crying! என்ன ஒரு Composition? Orchestration? இளையராஜாவை வேறு யாரும் Touch பண்ணவே முடியாது!” என்று கூறினார். பாடல் பாடப்பட்ட முறை பற்றி அவர் விளக்கும்போது “பேசிப் பேசி ராசியானதே ஏ ஏ…” அந்த வரி முடியும் வரை முழுவதும் ஒரே மூச்சில் வர வேண்டும். இல்லன்னா பிரம்பால அடிப்பான் (இசைஞானி). அவன் ஒரு Headmaster மாதிரி!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

“பொத்தி வச்ச மல்லிகை மொட்டு! பூத்திருச்சு வெக்கத்த விட்டு!” அடடா! “ஒரு பெண் பூப்பெய்தி விட்டாள்” என்ற fragile-ஆன செய்தியை கவிஞன் விவரிக்கும் அழகே அழகு. பாடலை எழுதிய வைரமுத்து அவர்கள் “இந்தப் பாடல் எழுதி முடித்த பின்னரே இசைஞானி இசையமைத்தார். இது மெட்டுக்கு எழுதப்பட்ட பாட்டு அல்ல! பாட்டுக்குப் போடப்பட்ட மெட்டு!” என்று கூறியதாக எதிலோ படித்த ஞாபகம்.

இசைஞானி பின்னர் இசையமைத்த “Aur Ek Prem Kahani” (இது ‘மண்வாசனை’-யின் Remake-ஆ என்று தெரியவில்லை) என்ற Hindi படத்திலும் இதே பாடலை உபயோகித்துள்ளார். “Hona Hai Tho Ho Bhi Jaayegaa” என்று துவங்கும் அந்தப் பாடலை ஹிந்தியில் எஸ்.பி.பி. அவர்களுடன் ஆஷா போஸ்லே பாடியிருக்கிறார்.

இனி Keyboard, Guitar வாசிப்பவர்களுக்காக. B Flat Minor Scale-ல் அமைந்திருக்கும் இந்தப் பாடலின் Chords Arrangement-ஐ (என் செவிகளுக்கு ஒலித்த வகையில்) கீழ்க்காண்க:-

/Bbm பொத்தி வச்ச /Fm மல்லிகை /Bbm மொட்டு!
/Bbm பூத்திருச்சு /Fm வெக்கத்த /Bbm விட்டு!
/Bbm பேசிப் /Ebm பேசி /C# ராசி /Ab யான/C# தே/ Ab!
/Bbm மாமன் /Ebm பேரச் /C# சொல்லி /Ab சொல்லி /C#ஆ/Abளான /Bbmதே!
ரொம்ப /C# நா /Ab ளான /Bbm தே!!

1. /Bbm மாலையிடக் காத்து /C# அல்லி இருக்கு!
/Bbm தாலி செய்ய நேத்து /C# சொல்லி இருக்கு!
/Ebm7 இது /Fசாயங் /F#கால /Bbmமா? /Ebm7மடி /Fசாயும் /F#கால/Bbmமா?
முல்லப் /Ebm7 பூச்சூ/Abடு! மெல்ல /Ebm7 பாய் போ/Abடு!
அட /Bbm வாட /Abகாத்து /F#சூடு /Fஏத்து/Fmது!!


இன்னும் Advanced Chords ஒலிப்பது உங்கள் செவிகளுக்குப் புலப்பட்டால் பின்னூட்டத்தில் (Comments) தெரிவிக்கவும். Keyboard Chords உங்களுக்காக இணைக்கப் பட்டுள்ளன.

பாடலின் ராகமும் கூட “சுத்த தன்யாசி” என்றது ஒரு தளம். Not at all! இது “ஹிந்தோளம்” என்றனர் வேறு சிலர். தெரிந்தவர்கள் விளக்குங்கள் ஐயா!!

வலைத்தளம் ஒன்றில் படித்த செய்தி ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் Symphony இசைப்பேழையை பிரதமர் Dr. மன்மோகன் சிங்-இடம் கொடுக்க இசைஞானியை அழைத்துச் சென்றார் திரு. வைகோ அவர்கள். அப்போது, 'Sir! இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று அவரை அறிமுகப்படுத்தினார் வைகோ. ‘இசைஞானி நம் கலாச்சாரத்தின் குரல்’!! எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

Tuesday, June 8, 2010

அடி ஆத்தாடி








பாடல் : அடி ஆத்தாடி

படம் : கடலோரக் கவிதைகள்
பாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி
எழுதியவர் :
இசை : இசைஞானி

அடி ஆத்தாடி ………….

அடி ஆத்தாடி!
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதானா?
அடி அம்மாடி!
ஒரு அல வந்து மனசில அடிக்கிது அதுதானா?
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்!! – அடி ஆத்தாடி

1. மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
ஒன்னப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ?
இப்படி நான் ஆனதில்ல! புத்தி மாறிப் போனதில்ல!
முன்னப் பின்ன நேர்ந்ததில்ல! மூக்கு நுனி வேர்த்ததில்ல!
கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்ட கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சிப் பார்த்தாயோ?
இசை கேட்டாயோ? ஓ ஓஓ….

2. தாகப் பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம்!
உண்மை சொல்லு பொண்ணே என்ன என்ன செய்ய உத்தேசம்?
வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டு மரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன?
கட்டுத்தறி காள நானே! கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே! ஏ ஏஏ…. – அடி ஆத்தாடி.

வழக்கமாகப் ஒரு Prelude உடன் ஆரம்பிக்கும் எல்லாப் பாடல்களைப் போல் இல்லாமல் எஸ்.ஜானகியின் “அடி ஆத்தாடி..”-யுடன் பாடல் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் Prelude துவங்குகிறது. [இசைஞானி Prelude-ல் Main Piece-க்கு என்ன Instrument உபயோகித்திருக்கிறார்? Oboe?? தெரியவில்லை! இப்படி இந்தப் பாடல் முழுவதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் எனக்கு! தெரிந்தவர்கள் விளக்குக!]. Prelude-ன் முடிவில் வரும் Keyboard Bells Piece, Keyboard வாசிப்பவர்களுக்கான சிறந்த Fingering Exercise. பல்லவி துவங்கி முதல் வரி முடிந்தடும் “இள மனசொண்ணு” வரியில் Female Chorus Voices சேர்ந்து கொள்கின்றன. அதன் பின்னர் ‘அடி அம்மாடி!-யில் இடைவெளி விட்டு, மீண்டும் “ஒரு அல வந்து” வரியில் Female Chorus. ஒவ்வொரு Voice-ஐயும் உற்றுக் கேட்டால், எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த Harmony-ஐ ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. [ஆனால் இசைஞானி Just like that!!! ஒரு நிமிஷத்தில் அவ்வளவு Voices-க்கும் Notation எழுதி இருப்பார் என்பது நிச்சயம்!!]. இதே போல் Male Chorus Voices எல்லாம் இசைஞானியின் குரலாகவே எனக்குக் கேட்கிறது! [எல்லா parts-ம் அவரே பாடியிருக்கிறாரோ?] அதே போல் “உயிரோடு” என்று இசைஞானி ஆரம்பிக்கும் இடத்தில் Rhythm almost நின்று விடுகிறது. அதன் பின்னர் மீண்டும் ‘அடி ஆத்தாடி’-யில் தான் Rhythm சேர்ந்து கொள்கிறது. [Rhythm Section-ல் தபலாவுடன் ஒலிக்கும் மற்றொரு தோல் வாத்தியம் என்ன? என் அறிவுக்கு எட்டவில்லை] “இவன் மேகம் ஆக யாரோ காரணம்!!” என்ற வரியில் ‘யாரோ’ என்ற இடத்தில் ஒலிக்கும் Bass Guitar-ஐ கேட்கும்போதெல்லாம் காற்றில் மிதக்கத் துவங்கி விட்டேனோ, என்று எனக்குத் தோன்றும்.

இந்தப் பாடல் அமையப் பெற்றிருக்கும் Pattern-ல் இசைஞானி செய்திருக்கும் மற்றொரு Experimentation Second Interlude. வழக்கமாக முதல் பல்லவி முடிந்து 1st Interlude வரும். அதன் பின் முதல் சரணம், அது முடிந்து மீண்டும் பல்லவி, அதன் பின் 2nd Interlude. அதன் பின் இரண்டாம் சரணம் பாடி பல்லவி வந்து பாடல் முடியும். இந்தப் பாடலில் சற்றே வித்தியாசமாக முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவிக்குப் பாடல் செல்லாது. நன்றாகக் கவனித்தால் முதல் சரணம் முடிந்த உடனேயே, ஒரு Flute Bit-க்குப் பின்னர் ல..ல. ல..ல..லா…. என்று எஸ். ஜானகி ஒரு Humming-ஐ ஆரம்பிக்க (ஹம்மிங் முழுவதிலும் Female Voices-ன் மயங்க வைக்கும் Harmony), அதன் பின்னர் Direct-ஆக 2nd Interlude துவங்கி, இரண்டாம் சரணம் பாடப்படும். அது முடிந்த பின்தான் மீண்டும் பல்லவி பாடப் படும்.

அதே போல சரணத்தின் முடிவில் “சொல் பொன்மானே” என்று இசைஞானி பாடி முடித்து ஏ!ஏ! ஏ!!... என்று ஒவ்வொரு Note-ஆக கீழே இறங்கி வரும் இடத்தில் பின்னால் ஓடி வரும் Violin-கள் அவர் குரலுடன் இணைந்து (Contrast-ஆக?) ஒவ்வொரு Note-ஆக மேலே ஏறிச் செல்லும் அழகு அற்புதம்!!

C Minor Scale-ல் அமையப் பெற்றிருக்கும் இந்தப் பாடலில் புதிதாகக் கற்றுக் கொள்ள எனக்கு இரண்டு Chords கிடைத்தன. ஒன்று G 4th ! மற்றொன்று C Minor 6th !! [இசை தெரிந்தவர்கள் என்னைப் பார்த்து நகைக்க வேண்டாம்! என் Level-க்கு இவை இரண்டும் ரொம்ப Advanced Chords]. இனி கொஞ்சம் Guitar அல்லது Keybaord வாசிப்பவர்களுக்காக இந்தப் பாடலில் எனக்குத் தெரிந்த வரையிலான Chords Application-ஐக் கீழ்க்காண்க:-

அடி / Cm ஆத்தாடி!
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதா / G4th னா?
அடி / Cm அம்மாடி!
ஒரு அல வந்து மனசில அடிக்கிது அதுதா / G4th னா?
/ உயி / Cm6 ரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் / Cm மேகம் ஆக /G# யாரோ கார / Cm ணம்!!

/Cm மேலே போகும் / D# மேகம் எல்லாம் கட்டுப்பட்டு / Cm ஆடாதோ?
ஒன்னப் பாத்து / D# அலைகள் எல்லாம் மெட்டு கட்டி / Cm பாடாதோ?
/ Cm இப்படி நான் / Cm6 ஆனதில்ல! / Cm புத்தி மாறிப் / Cm6 போனதில்ல!
/ Cm முன்னப் பின்ன / Cm6 நேர்ந்ததில்ல! / Cm மூக்கு நுனி / Cm6 வேர்த்ததில்ல!
/ G கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள /G# கத்திச் சண்ட / Cm கண்டாயோ?
/ G படபடக்கும் நெஞ்சுக்குள்ள /G# பட்டாம் பூச்சிப் / Cm பார்த்தாயோ?
இசை / Am கேட்டாயோ? / Cm ஓ ஓஓ….

எங்கேனும் தவறுகள் இருந்தால், அல்லது இன்னும் Advanced Chords apply ஆவதாக உங்களுக்குத் தோன்றினால் Comment செய்யவும். உங்களுக்காக Keyboards Chords-ஐ Picture Files-ஆக இணைத்துள்ளேன்.

பாடலின் ராகம் தேடி அலைந்த பொழுது இரண்டு விதமான விடைகள் கிடைத்தன. “விஜய நாகரி! இது 59ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தர்மவதி’யின் ஜன்ய ராகமாகும். உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகத்தைப் பாட அதிகாலை நேரம் உகந்ததாகும்” என்றது ஒரு தளம். இல்லை இல்லை! “சிவரஞ்சனி” [S R2 G2 P D2 S I S D2 P G2 R2 S] என்றது மற்றொரு வலைத்தளம். இரண்டும் ஒன்றா? அல்லது Sister Ragas-ஆ? எது சரி? அதுவும் விளங்கவில்லை.

எது எப்படியோ! இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் மனதில் உண்டாவது திண்ணம்!!

Monday, June 7, 2010

ஊரு விட்டு ஊரு வந்து

பாடல் : ஊரு விட்டு ஊரு வந்து

படம் : கரகாட்டக்காரன்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், கங்கை அமரன்
எழுதியவர் : கங்கை அமரன் (?)
இசை : இசைஞானி

ஊரு விட்டு ஊரு வந்து, காதல் கீதல் பண்ணாதீங்க!
பேரு கெட்டு போனதின்னா நம்ம பொழப்பு என்னாகுங்க?
விட்டுடு தம்பி! இது வேணாம் தம்பி!
இத்தன பேரு வீடு ஒங்கள நம்பி! – ஊரு விட்டு

1. அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக எண்ண வேணாம்!
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்!
ஊருல ஒலகத்துல எங்க கத
போலெதும் நடக்கலையா? (ரப்பப் பப்பப்பா!)
வீட்டையும் மறந்துபுட்டு வேற ஒரு
நாட்டுக்கு ஓடலையா? (ரப்பப் பப்பப்பா!)
மன்மத லீலையை வென்றவருண்டோ?
இல்லே! இல்லே! ஏ!
மங்கையில்லாதொரு வெற்றியும் உண்டோ?
இல்லே! இல்லே! ஏ!
மன்மத லீலையை வென்றவருண்டோ?
மங்கையில்லாதொரு வெற்றியும் உண்டோ?
காதல் ஈடேற பாடு என் கூட – ஊரு விட்டு

2. ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்!
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்?
வாழ்க்கைய ரசிக்கணுன்னா வஞ்சிக்கொடி
வாசன பட வேணும்! (ரப்பப் பப்பப்பா!)
வாலிபம் இனிக்கணுன்னா பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்! (ரப்பப் பப்பப்பா!)
கன்னிய தேடுங்க கற்பன வரும்!
ஆமா ! ஆமாமா!
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்!
ஆமா ! ஆமாமா!
கன்னிய தேடுங்க கற்பன வரும்!
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்!
காதல் இல்லாம பூமி இங்கேது? – ஊரு விட்டு

மனதளவில் நான் எப்பொழுதெல்லாம் ரொம்ப depressed-ஆக feel பண்ணுகிறேனோ அப்பொழுதெல்லாம் இந்தப் பாடலை ஒரு முறை கேட்பேன். Prelude Rhythm Patternஐக் கேட்ட உடனேயே, அப்படி ஒரு Energy உடலில் வந்து விடும். பாடலின் Prelude-ஐ இசைஞானி அமைத்திருக்கும் விதமே ரொம்ப Peculiar!! நாட்டுப்புற மேளச் சத்தமும், Western Drums-ம் கலந்து ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு 8 Bar-க்கு ஒலிக்க, அதன் மேல் பின்னர் Keyboard Chord உடன் துவங்கி, ஒரு பக்காவான Folk Style-ல் Rhythm Pattern அதனுடன் கைகோர்க்க, நாகஸ்வரத்தில் (?) Prelude Piece!! அந்த Piece-ஐ கேட்டவுடனேயே உடலில் தூங்கிக் கொண்டிருக்கும் Cells எல்லாம் படாரென்று முழித்துக் கொள்ளும்.

பல்லவி முழுவதும் இசைஞானி அமைத்திருக்கும் “பப்பப்பா!” Male Chorus ஒரு Typical Western Harmony. சரணத்தில் மேளச் சத்தம் குறைந்து Tabla-வில் Rhythm Pick up ஆகி பாடலுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. பின்னர் மீண்டும் பல்லவி வரும்பொழுது Tabla விடை பெற்றுக் கொள்ள, மேளம் சேர்ந்து கொள்ளுகிறது. 2nd Interlude-ஐ நன்றாக கவனியுங்கள். மேளத்திற்கும் Drums-க்கும் இடையில் நடக்கும் ஒரு Naughty Conversation அற்புதம்!!

ஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு கங்கை அமரன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது:-

‘கரகாட்டக்காரன்’ படத்தில் ‘இந்த மான் எந்தன் சொந்த மான்’ பாட்டில் தான் உங்களுக்கு Electronic Keyboard Bells சத்தம் கேட்கும். மற்றபடி எல்லாப் பாடல்களுக்கும் இசைஞானி Original Instruments-ஐ பயன்படுத்தினார். அந்த நேரத்தில் அண்ணன் (இசைஞானி) செய்த எல்லா படங்களிலும் Western Beats எல்லாம் mix பண்ணிக் கொடுப்பார்! கரகாட்டக்காரனில் அது total-ஆக இருக்கக் கூடாது, Real Instruments (Manual Instruments) வேண்டும் என்று சொல்லி பாடல்களை அமைத்தோம். இந்தப் பாடலைப் பொருத்தவரையில் ‘பக்கத்து ஊர் திருவிழாவிற்கு ஒரு Band Group போய்கொண்டிருக்கும்! அவர்களை நிறுத்தி வைத்து இந்தப் பாட்டைப் பாடுகிறார்கள்’ ஒரு Western Orchestra மாதிரி இதை பண்ணலாம்’ என்றுதான் முதலில் யோசித்து வைத்திருந்தோம். அதன் பின் அண்ணன் (இசைஞானி), ‘வேண்டாம்! அது Colour மாறி விடும்’ என்று சொல்லி, பாடுபவர்கள் (ராமராஜன் & கோ) சங்கீதக்காரர்கள் என்பதால் பின்னால் ‘பப்பப்பா..’ Humming எல்லாம் அமைத்துக் கொடுத்தார். இந்தப் பாடல் ஒரு Folk Song-ஆக இருந்தாலும், இதன் பின்னால் வரும் ‘பப்பப்பா..’ Humming பக்காவாக Western-ல் கொடுத்தார்” என்று கூறினார்.

வழக்கம்போல் ராகம் தேடி நெட்டுலாவியபொழுது, பாடல் ‘ஷண்முகப்ரியா’ என்றது ஒரு வலைத்தளம் [S R2 G2 M2 P D1 N2 S | S N2 D1 P M2 G2 R2 S]. அதிலும் இந்த ராகம் ‘Best Suited for Devotional Feel’ என்று விளக்கம் வேறு! (உ.ம். பழம்பெரும் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் ‘திருவிளையாடல்’ படத்திற்காக இசையமைத்த ‘பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!”). ஆனால் இசைஞானி இந்த ராகத்தை ஒரு Folk Song-ல் பயன்படுத்தி, அதனுடன் Western Chorus Harmony-ஐ கலந்து கொடுத்தது, பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி தேனில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்த சுவை!!

ஓ பட்டர்ஃப்ளை

பாடல் : ஓ பட்டர்ஃப்ளை

படம் : மீரா
பாடியவர்கள் : எஸ்.பி.பி., Asha போஸ்லே
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!
ஏன் விரித்தாய் சிறகை? வா வா !
ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!
ஏன் விரித்தாய் சிறகை?
அருகில் நீ வருவாயோ?
உனக்காக திறந்தேன் மனதின் கதவை!

ஆஹா ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!
ஏன் விரித்தாய் சிறகை? வா வா !
எனையும் தான் உனைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்!

1. நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்!
நிழலைப் போலத் தொடரும் என்னை மறந்து போகிறாய்!
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே!
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே!
உனை நான் சந்தித்தேன்! உனையே சிந்தித்தேன்!
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ?
பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை! - ஆஹா ஓ! பட்டர்ஃப்ளை!

2. மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே!
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே!
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே!
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே!
உனை நான் கொஞ்சத்தான்! மடிமேல் துஞ்சத்தான்!
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ?
பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை! - ஓ! பட்டர்ஃப்ளை!

Guitar, Violin மற்றும் Flute-ன் அற்புதக் கலவையில் இந்தப் பாடலை இசைஞானி அளித்திருக்கிறார். Guitar (?) உடன் ஆரம்பிக்கும் Prelude-ன் பிற்பகுதியில் Flute ஒலிக்கும்பொழுது அதனுடன் வரும் Guitar-ன் Single Note touches magic உடன் பாடல் துவங்குகிறது. இந்தப் பாடலின் மற்றொரு அற்புதம் Bass Guitar Work. அதிலும் பல்லவியின் முதல் வரியிலேயே, “ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!” & “ஏன் விரித்தாய் சிறகை?” வரிகளுக்கு இடையே ஒலிக்கும் Bass Guitar-ன் மூன்றே மூன்று Notes அற்புதமான கலவை. Bass Guitar-ன் அந்த மூன்று Notes-ம் இல்லாமல் பல்லவியின் முதல் இரண்டு வரிகள் சத்தியமாக பூரணம் பெறாது. பல்லவியில் Rhythm-ம் கூட ரொம்ப Soft-ஆக, ஒவ்வொரு Bar-ன் முடிவிலும், மெல்லிய மணியோசையுடன், பாடலின் அழகுக்கு மிகுந்த இடம் விட்டு இசைஞானி அமைத்திருப்பார். ஒரு Simple-ஆன 1-2-3 Waltz Beat-ஐ இசைஞானி ஒருவரால் மட்டுமே இவ்வளவு அழகாக, variety-ஆக Pattern அமைக்க இயலும்.

இந்தப் பாடலில் இசைஞானி Select செய்திருக்கும் Singers!! S.P.B & Asha Bhosle  ! எஸ்.பி.பி.-யின் “Oh Butterfly” Pronounciation-க்கும் Asha Bhosle-வின் “Oh Butterfly” Pronounciation-க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். எஸ்.பி.பி. ரொம்ப Style-ஆன Accent-ல் அதைப் பாடி இருக்க, Asha-வின் “பட்டர்ஃப்ளை” (பட்-டர்-ஃப்ளை) ஒரு மழலையின் கொஞ்சல்.

1st Interlude-ல் வரும் Violin-களின் Orchestration-ஐப் பற்றி எழுத்தில் வர்ணிக்க கண்டிப்பாக இயலாததால் மன்னிக்க!

2nd Interlude ஒரு Keyboard Harp (?) Sound-உடன் ஆரம்பிக்க (அது அந்த Interlude முடியும் வரையில் உடன் பயணிக்கிறது), பின் Flutes overlap செய்ய, பின் இரண்டுடனும் சேர்ந்து ஒரு Solo Violin Piece… அதன் பின் பல வயலின்களின் Harmony, இசைஞானியின் Typical overlapping style.

D Minor Scale-ல் அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கான Guitar Chords பற்றி என் School Guitar Master ஒருமுறை விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது D Minor 9th என்று ஒரு Chord இந்தப் பாடலில் Apply செய்யப் பட்டிருப்பதின் அழகை சொல்லிக் கொடுத்தார். “பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!” என்று பல்லவி முடியும் Bar-ல், இந்த Chord Application அவ்வளவு ரம்மியம். 3 Chord Theory-உடன் பாடல்களை Guitar-ல் வாசிக்கத் துவங்கி இருந்த எனக்கு இந்த Chord ரொம்ப அழகாகத் தெரிந்தது. [Guitar வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு – முதல் மூன்று Frets-ல் D Minor Chord பிடித்து வாசிப்போம் இல்லையா? இதில் 1st String-ல் முதல் Fret-ல் உள்ள (Note F) விரலை மட்டும் எடுத்து அந்த String-ஐ open-ஆக வாசியுங்கள்! அது தான் D Minor 9th]. முடிந்தால் Guitar-ஐ எடுத்து பல்லவி முடியும் Bar-ல் இதை இசைத்துப் பாருங்கள்!

சமீபத்தில் KZSU Stanford University Campus FM-ன் ஒரு பழைய நிகழ்ச்சி ஒன்றை வலையில் கேட்க நேர்ந்தது. Mr. Dasarathi என்ற அன்பர் இசைஞானியின் பல்வேறு Style of Music பற்றி பலவித ஆராய்ச்சிகள் செய்து அவற்றை விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்தப் பாடலைப் பற்றிக் கூறி இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் முடிந்து மறுபடியும் பல்லவி வரும்பொழுது அதனுடன் பின்னால் ஒலிக்கும் Violins & Flutes usage குறித்து சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “பாடகர்கள் கடைசியில் பல்லவியைப் பாடும்பொழுது Listen to What the Violins and Flutes are doing! That’s a very classical technique used in Western Music known as Chromaticism. This flowing melody is one of those techniques which not a lot of Music Directors use. Ilayaraja is unique in this sense that he has not just used it in one song, but some of the other songs as well. One of the other song in which this appears is “புத்தம் புது காலை! பொன் நிற வேளை”. Another song in which this technique is used is a song sung by உமா ரமணன், “ஆனந்த ராகம், கேட்கும் காலம்” என்று கூறினார். அவர் சொன்னது அழகாக விளங்கினாலும் அது என்ன “Chromaticism” என்று யோசித்து, அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் Wikipedi-னேன். “Chromaticism is a compositional technique interspersing the primary diatonic pitches and chords with other pitches of the chromatic scale. Chromaticism is in contrast or addition to tonality or diatonicism (the major and minor scales). Chromatic elements are considered, "elaborations of or substitutions for diatonic scale members." என்று விடை கிடைத்தது. சத்தியமாக எனக்கு விளங்கவில்லை. இந்த definition இசை தெரிந்தவர்களுக்கு!

ஒரு மாலை வேளையில் மழை பெய்து கொண்டிருக்கிறது! வீட்டில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்! ஜன்னலின் அருகில் அமர்ந்து தேங்காய் சட்னியுடன் உளுந்து வடை சாப்பிட்டுக் கொண்டே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! பூமியின் வாசம் எங்கும் நிறைந்திருக்கிறது! இந்தச் சூழலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்!!  ! Great is the Maestro!

காதல் கவிதைகள் படித்திடும்

பாடல் : காதல் கவிதைகள் படித்திடும்

படம் : கோபுர வாசலிலே
பாடியவர்கள் : எஸ்.பி.பி., சித்ரா
எழுதியவர் :
இசை : இசைஞானி

Yes I love this Idiot! I love this lovable Idiot!!!!!!!!!!!!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்!
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்!
இதயம் இடம் மாறும்! இளமை பரிமாறும்!
அமுதும் வழிந்தோடும்! அழகில் கலந்தாட! - இதந்தரும் காதல்..

1. கைவீசிடும் தென்றல்! கண் மூடிடும் மின்னல்!
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ?
பண் பாடிடும் சந்தம்! உன் நாவினில் சிந்தும்!
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ?
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி!
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி!
இது தொடரும் வளரும் மலரும்!
இனி கனவும் நினைவும் உனையே ! தொடர்ந்திடும் - காதல்

2. பூமாலைகள் கொஞ்சும்! பாமாலைகள் கெஞ்சும்!
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை!
தோள் சேர்ந்திடும் கங்கை! செவ்வாழையின் தங்கை!
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை!
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா?
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ?
இனி வருவாய் தருவாய் மலர்வாய்!
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்! தினந்தினம் – காதல்

காதலியின் ‘Yes I Love this Idiot..” அலறலுடன் இந்தப் பாடல் துவங்குகின்றது. தன் மனதிற்குள் மறைத்து வைத்திருந்தக் காதலை, காதலன் கண்டுபிடித்துவிட்ட ஆனந்த அதிர்ச்சியில், பலர் முன்னிலையில் தன் காதல் வெளிப்பட்டு விட்ட வெட்கத்தில், காதலி அலறிக் கொண்டு காதலைச் சொல்லும் ஒரு அற்புதமான Situation. ‘I love this Lovable Idiot!!!!!!!!!!’ கதறலுக்குப் பின், நம் மனதில் வரையப்போகும் இசைக் கோலத்திற்கு இசைஞானி வயலின்களைத் தெளித்து அழகூட்டியிருப்பார். வயலின்களின் தெளிப்பு முடிந்து, புல்லாங்குழல் Piece உடன் புள்ளி வைத்து, கோவில் மணியோசையுடன் (என்ன Instrument-ஓ தெரியவில்லை) இசைக் கோலம் உயிர் பெறத் துவங்கும். இப்பாடலின் Prelude-ல் இசைஞானி அமைத்திருக்கும் Grand Orchestration.. வாய் பிளந்து கேட்கத்தான் முடியும். வர்ணிக்க முடியாது.

பல்லவியை எஸ்.பி.பி பாடி ‘இதம் தரும்’ என்ற வரியில் முடித்து ‘காதல் கவிதைகள்’ பதத்தின் “கா….”வை மட்டும் பாடி, சித்ராவிடம் கொடுக்க, அவர் ‘காதல் கவிதைகள்’ என்று ஆரம்பிக்கும் அந்த Transition.. முகத்தில் முத்தமிடும் மெல்லிய சாறல்!

First Interlude Keyboard ‘க்ளிங் க்ளிங்’ உடன் ஆரம்பிக்கிறது. சரியாக 5 வினாடிகள் மட்டுமே வரும் இந்த சாதாரண Keyboard ‘க்ளிங் க்ளிங்’-கிற்கு இசைஞானி அமைத்திருக்கும் Counterparts-களில் அவரின் மெனக்கெடல், இசை மீது அவர் கொண்டுள்ள காதல்!! அதன் பின் Flute-ம் Synthesizer-ம் ஒன்றுடன் ஒன்று கரம் பற்றி, சிரித்துக் கொண்டே குதித்தோடும் Conversation, இசைஞானி மட்டுமே கையாள இயலும் ஒரு வித்தை. இது முடிந்து வரும் வயலின் Piece… Icing on the Cake.

இரண்டாவது Interlude வெறும் தாளத்துடன் (வேறு Rhythm Pattern-ல்) ஆரம்பிக்கிறது (Congo என்று நினைக்கிறேன்). அதன் பின் வரும் Flute Piece முடிந்து வரும் ஒரு சின்ன Keyboard Bit, இசைஞானியின் அழகு Shift.

பாடல் அமையப் பெற்றிருக்கும் ராகம் மாயாமாளவகெளளை! [S R1 G3 M1 P D1 N3 S | S N3 D1 P M1 G3 R1 S]. ‘அரண்மனைக் கிளி’ படத்தில் வரும் ‘என் தாயென்னும் கோயிலை’ பாடலில் ‘சோகம்’ சொல்ல இந்த ராகத்தை உபயோகித்த இசைஞானி இந்தப் பாடலில் ‘காதல்’ சொல்ல உபயோகித்திருக்கிறார். மாயாமாளவகெளளையில் இசைஞானி பின்னியிருக்கும் இந்த இசைச்சரம் வெளிப்படுத்தும் காதல் குஷிதான் எத்தனை? காதலித்துக் கொண்டிருந்தால் காதலியின் மடியில் படுத்துக் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அவள் உங்கள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த ரம்மியமான சூழலில் இந்தப் பாடலைக் கேளுங்கள். ஒரு முறை கேட்டு நிறுத்த இயலாது. மீண்டும் கேளுங்கள். காதலில் மூழ்குங்கள்! பாடலைக் கேட்டு முடிக்கும்பொழுது இன்னும் அதிகமாக அவளைக் நேசிக்கத் துவங்கியிருப்பீர்கள்.

காதல் ஓவியம்

பாடல் : காதல் ஓவியம்

படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடியவர்கள் : இசைஞானி, ஜென்சி
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஓம்…. ஷதபானம் பவதி ஷதாயுப் புருஷத்
ததேந்த்ரியா ஆயுஷ் தேவேந்த் ரிதே ப்ரதி திஷ் டதி!!

ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம். ஓ ஓ…

1. தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன்! காதல் பாடகன்!
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம் – காதல்

2. தாங்குமோ என் தேகமே?
மன்மதனின் மலர்கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே! வா என் அருகிலே!
உள்ளம் கோயில்! கண்கள் தீபம்! பூஜை காணலாம் – காதல்

Director பாரதிராஜா Situation சொல்லும்பொழுது இசைஞானியிடம் எப்படிச் சொல்லியிருக்க முடியும்? படத்தின் கதையைச் சொல்லி, “ஒரு பிராமணக் குடும்பத்தின் பையனும், ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் பெண்ணும் காதலிக்கிறார்கள். ஒரு Duet Song வேண்டும்!” என்று சொல்லியிருக்கக் கூடும். இதில் இசைஞானி செய்திருக்கும் வேலைகளைக் கவனியுங்கள். பாடல் ஒரு ஸ்லோகத்துடன் துவங்குகிறது. அதன் பின்ணனியில் ஒரு கோவில் மணியோசை கேட்கிறது. ஸ்லோகம் முடிந்தவுடன் வேறு எந்த Lead-ம் இல்லாமல், Choral Voices… அதனுடன் Counterparts…Harmony!! எல்லாம் சேர்ந்து ஒரு Church Effect கொடுப்பதற்காக Chorus முடிவில் ஒரு ஆலய மணியோசை. அதன் பின் வீணையில் ஒரு சின்ன Piece. படத்தின் மொத்தக் கதையையும் இந்த Prelude-ல் இசைஞானி சொல்லி முடித்திருப்பார்.

இந்தப் பாடலின் Rhythm Pattern…!! Keyboard வைத்திருப்பவர்கள் உங்களது Keyboard-ன் “Style” Folder-ஐ திறந்து அதில் “Bossa Nova” என்று ஒரு Rhythm இருக்கும். தேடிப் பாருங்கள்! Normal-ஆக திரை இசையில் இந்த Rhythm-ஐ வேறு எந்தப் பாடலிலும், யாரும் Use பண்ணியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அழகான ஒரு Pattern. அதை இசைஞானி அவ்வளவு அழகாகப் பிரயோகித்திருப்பார்.

நான் College-ல் படிக்கும்பொழுது, Annual Day-ன் போது Orchestra-வுடன் இந்தப் பாடலைப் இசைத்தோம். Keyboard-ல் நான்!! Keyboard வாசிக்கும் வேலையுடன், பாடலின் முதலில் வரும் ஸ்லோகம், Choral Voices-ல் வரும் ஒரு Counterpart, அதன் பின் “தேன் சிந்தும் பூஞ்சோலை”-யின் பின் வரும் Humming (False Voice-ல் – ஒரு பெண் குரல் Effect உடன்), Interludes-ல் வரும் Chorus Humming (இதுவும் False Voice-ல்), இவை அனைத்தையும் சேர்ந்து பாட வேண்டியது என் வேலை. (எங்கள் குழுவில் இருந்தது ஒரே ஒரு Female Singer! எனவே இந்த Chorus எல்லாம் எங்கள் குழுவின் Guitarist-ல் இருந்து, Drummer வரை அனைவரும் சேர்ந்து பாடியாக வேண்டிய கட்டாயம்) எல்லாம் ஒரு வழியாக practice செய்து முடித்து விட்டாலும், இந்தப் பாடலின் முதலில் வரும் ஸ்லோகம் ஆரம்பிக்கும் Note-ஐ எப்படி எடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். ஏனென்றால் அந்த ஸ்ருதியைப் பிடித்துத்தான் அதன் பின் வரும் Chorus Harmony பாடப்படும். Keyboard-ல் Key-ஐத் தொடாமல், சரியாக அந்த Note-ல் ஸ்லோகத்தை ஆரம்பிக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது, எங்கள் குழுவில் அடிக்கடி வந்து உதவி செய்யும் ஒரு Guitarist அண்ணன் எனக்கு ஒரு Trick-ஐ சொல்லிக் கொடுத்தார். Prelude-ல் வரும் Chorus Voices-ல் நான் பாட வேண்டிய Counterpart ஆரம்பிக்கும் முதல் Note-ல் ஸ்லோகத்தை ஆரம்பித்தால், சரியாக இருக்கும் என்பதுதான் அது. அதையே பின்பற்றி நான் ஆரம்பிக்க பாடல் மிக சிறப்பாக வந்தது.

இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம் Bass Guitar! முக்கியமாக பல்லவியில் “என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்” என்ற வரியில், “ஆனந்தம்” “பேரின்பம்” என்ற வார்த்தைகளின் பின்னால் இசைக்கப்படும் Bass Guitar-ஐ கவனித்துக் கேளுங்கள். வெறும் நான்கு Notes தான். அது அந்த வரிக்கு என்ன அழகு சேர்க்கிறது! ஒரு பாடலை Blank-ஆகக் கேட்பதற்கும், இசைஞானியின் Orchestration-உடன் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வெறும் சோறு சாப்பிடுவதற்கும், அம்மா கையால் சோறு சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான். 1st Interlude ஆரம்பிப்பதே Bass Guitar-ல் தான். அதன் பின் குயில் கூவுவது போலப் புல்லாங்குழலில் ஒரு Note ஒலித்துக் கொண்டேயிருக்க, அதன் பின்னால் இசைஞானி அமைத்திருக்கும் Bass Guitar சரம்.. அதேபோல் 2nd Interlude-ல் வீணையுடன் Bass Guitar-ல் அமைத்திருக்கும் Orchestration.. சரவெடி.. அதை வார்த்தைகளில் விளக்குவது இயலாத காரியம்.

டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா ஒரு முறை இசைஞானியைப் பற்றி ஸ்லாகித்து இப்படிக் கூறியதாக ஒரு Online Community-ல் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். “As far as I am concerned, Ilayaraja is the Composer of the Century. If there is one single authority on ‘orchestration’, it can only be Ilayaraja” [“எனக்குத் தெரிந்த வரையில், இளையராஜா இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர்! ‘Orchestration’ என்ற விஷயத்திற்கு ஒரு அதிபதி உண்டென்றால், அது இசைஞானி இளையராஜாவாக மட்டும் தான் இருக்க முடியும்”]. சத்தியமான வார்த்தைகள்!!

காதலின் தீபம் ஒன்று

பாடல் : காதலின் தீபம் ஒன்று

படம் : தம்பிக்கு எந்த ஊரு?
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஆஹா ஆஹா ஆஹா ஹே ஹோ ஹூம்ம் ஹும்ம்ம்

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன? காதல் வாழ்க!!

1. நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆ… ஆஆ…
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்லவா? - காதலின்

2. என்னை நான் தேடித்தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும் ஆஆ… ஆஆ…
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா? - காதலின்

காதல் வயப்பட்டிருக்கிறீர்களா? காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கிறீர்களா? காதலியிடம் காதலைச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்கிறீர்களா? காதலி சம்மதம் சொல்லிவிட்டாளா? அல்லது காதலி உங்கள் காதலை மறுத்து விட்டாளா? காதலி பிரிந்து சென்று விட்டாளா? காதலியுடன் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்ணோடு கண் நோக்க காதலில் லயித்தபடி அமர்ந்திருக்கிறீர்களா? காதலியுடன் யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றி விட்டு, வீட்டில் வந்து படுத்து, விட்டத்தைப் பார்த்து அந்த நாளின் இனிய நிகழ்வுகளை மனதிற்குள் அசை போட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? காதலில் ஏதோ பிரச்சனை வந்து அவள் உங்கள் மடியில் படுத்து அழுது கொண்டு இருக்கிறாளா? அல்லது நீண்ட நாட்களாக அவளைப் பிரிந்து செல்ல நேரிட்டு அவள் நினைவில் வாடிக் கொண்டிருக்கிறீர்களா? எந்த Situationக்கும் பொருந்தும் இசைஞானியின் இந்த இனிய இசை மாலை. அத்தனை உணர்வுகளும் இந்த ஒரு பாடலில் அடக்கம்.

1st Interlude-ல் வரும் Flute piece-ன் மேல் இசைஞானி அமைத்திருக்கும் வயலின் Orchestration காதல் வயப்பட்டிருக்கிறவனை குஷிப்படுத்தும். காதலியைப் பிரிந்திருப்பவனை அமைதிப் படுத்தும். சரணம் முழுவதும் உடன் பயணிக்கும் வயலின்கள், ஒரு Uphill பயணத்தின் பொழுது முகத்தில் முத்தமிடும் மெல்லியப் பூங்காற்று.

இந்தப் பாடலின் ராகம் சாருகேசி [S R2 G3 M1 P D1 N2 S | S N2 D1 P M1 G3 R2 S] (தவறாயிருப்பின் மன்னிக்க). இதே ராகத்தில் இசைஞானி ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் இசையமைத்திருக்கும் ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ பாடலும் கிட்டத்தட்ட இதே Feel-ஐக் கொடுக்கும். ஒரு அற்புதமான படைப்பை வர்ணிக்க “இப்படி ஒன்றைச் செய்ய இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்” என்று சொல்வார்கள். ஆனால் இப்படி ஒரு பாடலை Compose செய்ய இனி ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது என்பது என் கருத்து.

இளைய நிலா பொழிகிறதே

பாடல் : இளைய நிலா பொழிகிறதே

படம் : பயணங்கள் முடிவதில்லை
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே (2)

1. வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும் - இளைய நிலா

2. முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ?
நீலவானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்?
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்? - இளைய நிலா

இசையார்வமும் தமிழார்வமும் இருக்கும் யாருக்கும் இந்தப் பாடலின் வரிகள் மனப்பாடமாய் இருக்கும். ஒரு இரவு நேரத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து கதாநாயகன் Guitar இசைத்துப் பாடும் இந்தப் பாடலைக் கேட்டு Guitar வாசிக்கப் பழகியவர்கள் ஏராளம் [அதில் நானும் ஒருவன்! ஹி ஹி..:)] Guitar வாசிக்கப் பழகிக் கொண்டு இருக்கும் எவருக்கும் இந்தப் பாடலின் BGM-களை வாசித்து முடிப்பதென்பது ஒரு கனவாகவே இருக்கும். அப்படி வாசிக்க முடிந்து விட்டால் “அடடா நாமும் ஒரு Guitarist!” என்ற ஒரு பூரண உணர்வு வந்து நிறையும். Sampler-களில் இருந்து உருவப்படாத மெல்லிய, Simple-ஆன, ஜீவன் நிறைந்த, செவிக்கும் மனதுக்கும் நிறைவான ஒரு Rhythm Pattern. Rhythm எதுவும் இல்லாமல் பாடலின் துவக்கத்தில் பல்லவியை திரு. எஸ்.பி.பி அவர்கள் பாடும்பொழுது இசைஞானி அமைத்திருக்கும் வெறும் Hollow Guitar Plucking-ன் அழகிற்கு முன், இயந்திரக் கலவையுடன் வரும் எந்த இசைக்கருவியின் இசையும் (ஓசையும்?) நிற்க முடியாது. அதன் பின் பாடல் முழுவதும் வரும் Electric Guitar-ன் Chords accompaniment-ம் கூட, பாடலுடன் பயணிக்கும் செவிகளை உறுத்தாத மெல்லியப் பூங்காற்று. முதல் Interlude ஒரு Guitar piece உடன் ஆரம்பிக்கிறது. பின் ஒரு Flute Bit வருகிறது. இரண்டிற்கும் இடையே Bass Guitar-ல் மூன்றே மூன்று Note-ஐ மட்டும் இசைஞானி அமைத்திருப்பார். அதன் பின் ஒரு Bar-க்கு ஒரு Guitar plucking. ‘இசைக்கோர்வை’ என்ற பதத்திற்கு Dictionary of Music-ல் இந்த இடத்தைக் குறிப்பிடலாம்.

பல்லவி, First Interlude, சரணம் முடிந்து Section Interlude (Guitar Piece) துவங்கும் போது மாறும் Rhythm Pattern-ஐக் கவனியுங்கள். என்ன ஒரு அழகான மாற்றம்? இரண்டாவது சரணத்தில் ‘அழுதிடுமோ அது மழையோ?’ என்ற வரிகளில் ‘அது’ என்ற வார்த்தையில் திரு எஸ்.பி.பி. அவர்களின் சிரிப்பு அவரது Trade Mark. “நீலவானிலே வெள்ளி ஓடைகள், போடுகின்றதே என்ன ஜாடைகள்?” அடடா! ‘வானத்தில் மின்னல் தோன்றுகிறது’ என்ற ஒரு Simple-ஆன Message-ஐ ஒரு கவிஞன் பார்க்கும் அழகே அழகு.

இந்தப் பாடலைப் பாடிய திரு. எஸ்.பி.பி அவர்கள் ஜெயா டி.வி.யின் ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ நிகழ்ச்சியில் ஒரு முறை இப்படிக் கூறினார் “இது ரொம்ப Difficult Composition! நிறைய பேர் சரணம் பாடிவிட்டு, பல்லவிக்கு வரும்பொழுது வேறு சுருதிக்கே போய் விடுவார்கள்!’ அந்த மாதிரி ராஜா போட்ட ரொம்ப Beautifully composed Song! அவர் ஏற்கெனவே Guitarist-ஆக இருந்ததினால் Recording Theatre-ல் அந்த Background scores எல்லாம் அவர் வாசித்துக் காண்பிக்கும் பொழுது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது” என்றார். பின்னர் உடன் வாசித்த இசைக் கலைஞர்களைப் பார்த்து, “இன்னிக்கி இந்தப் பாடலை நிறைய, 100 முறை கேட்டு நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள். ஆனால் Compose பண்ணும் பொழுதே அவர் (இசைஞானி) வாசித்த விதம் கேட்கும்பொழுதே ரொம்ப அழகாய் இருந்தது!” என்று கூறி, “இந்தப் பாடலின் ஒவ்வொரு Note-ம் ரொம்ப முக்கியம். இந்தப் பாடலை பதிவு செய்ய மொத்தம் 23 Take ஆனது! அவ்வளவு கஷ்டமான பாட்டு” என்று குறிப்பிடுகிறார்.

Guitar வாசிக்கப் பழகிக் கொண்டு இருக்கிறீர்களா? கேட்பவர் வியக்கும் வண்ணம் ஒரு Piece வாசிக்க ஆசையா? எந்த Site-க்கும் போய் எந்த Notations-ம் download பண்ணி, அதைத் தடவித் தடவி Practice பண்ணி, பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டாம். நமக்காக இசைஞானி, உலகத்தின் எந்த guitar tutor-லும் இல்லாத வகையில் இலவசமாக, அற்புதமான Guitar Pieces-ஐ இந்தப் பாடலில் compose செய்து கொடுத்து இருக்கிறார். இந்தப் பாடலின் BGM-களை அட்சர சுத்தமாக வாசித்துப் பழகுங்கள். இசைஞானியின் இந்த அற்புத Composition உங்களுக்கான Very Advanced Exercise. All the Best!
பாடல் : தென்றல் வந்து தீண்டும்போது

படம் : அவதாரம்
பாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி
எழுதியவர் :
இசை : இசைஞானி

தென்றல் வந்து தீண்டும்போது
என்ன வண்ணமோ மனசில!
திங்கள் வந்து காயும்போது
என்ன வண்ணமோ நெனப்புல!
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா!
எண்ணங்களுக் கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா!
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே!

1. எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது!
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது!
ஓட நீரோட இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல!
நெலையா நில்லாது நினைவில் வரும் நெறங்களே!

2. ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது!
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது!
குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அதக் கதையா பேசுதம்மா!
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்!

இந்தப் பாடலின் Orchestration-ம் Chorus Harmony-யும் முழுக்க முழுக்க ஒரு Western Classical Number கேட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு தெருக்கூத்துக் கலைஞன் பாடினால் எப்படிப் பாடுவானோ அப்படி ஒரு மண் மணத்துடன் இசைஞானி பாடியிருப்பார். உதாரணத்திற்கு அவரின் தமிழ் உச்சரிப்பை ‘குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா’ இந்த வரிகளில் கவனியுங்கள். ‘இசையா’ என்பதை ‘எசையா’ என்று பாடியிருப்பார். இதில் தான் Situation, பாடலின் தளம், பாடலைப் பாடும் Character-ன் குணாதிசயம், அவ்வளவையும் இசைஞானி ஒரு பாடலைப் பாடும் முறையில் சொல்லும் ஆற்றல் நமக்கு விளங்கும்.

இசைஞானி அவர்கள் பி.பி.சி. வானொலியின் “பாட்டொன்று கேட்டேன்” நிகழ்ச்சியில், இந்தப் பாடலைக் குறித்து, ‘எப்படி நாட்டுப்புற இசையையும், Western இசையையும் இணைக்கும் பாணி உங்களுக்கு வசமாகிறது?’ என்ற கேள்விக்கு பதில் கூறும்பொழுது,

“எல்லா இசையும் ஒண்ணுதான். அதை நாம எப்படி use பண்றோம், எந்தக் களிமண்ணை எடுத்து எதனுடன் சேர்த்து எப்படி உருவாக்குகிறோம் என்பதுதான் அதில இருக்கிற Technique. அது ஒரு ஏமாத்து வேலைதான். ஒரு ஏமாத்துறவனுக்கு, ஒரு மாங்காயை மூடி வைத்து ஒரு புறாவைப் பறக்க விடுபவனுக்குத் தான் என்ன பண்ணுகிறோம் என்பது தெரியும். நிஜம்மா மாங்காய் புறாவாக மாறப் போவது இல்லை. ஏமாறுபவன் Audience. இது ஏழு Note Combination-தான். இந்த ஏழு Note Combination-ல் இது வரை வராத Route என்ன என்ன இருக்கிறது? இன்றைக்கு இருக்கக் கூடிய சினிமா பாடல்களை, எத்தனைப் பாடல்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு Pattern-க்குள் அதைக் கொண்டு வந்து விடலாம். அப்படி Patternise பண்ண முடியாத Song இது என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஒரு பாட்டு இருக்கிறதா என்று கேட்டால், இந்த மாதிரி ஒரு பாட்டு இல்லை. இந்த ஒரே ஒரு பாட்டுத் தான். ‘தம்தன நம்தன தாளம் வரும்’ ஒரே பாட்டுத் தான். ‘அந்தி மழை பொழிகிறது’ ஒரே ஒரு பாட்டுத் தான். என்னைப் பொருத்த வரையில் அந்த ஒரே ஒரு பாட்டு மாதிரி நிற்பது தான் படைப்பு. நான் ஒவ்வொரு படத்திலும் அதை Try பண்ணுவதுண்டு. ஆனால் டைரக்டர்கள் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களுக்காக நாம் கீழே இறங்கி வர வேண்டியதுள்ளது. ஒரு டைரக்டர் புதிய பாடலைக் கொடுத்து விட முடியாது. அல்லது புதிய ஓசையை, புதிய pattern of music-ஐ create பண்ணுவதற்கு ஒரு டைரக்டருக்கு knowledge இல்லை. Music Director-தான் Create பண்ணியாக வேண்டும். So ஒரு Music Director தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு ‘நீ இப்படிப் போ, அப்படிப் போ’ என்று சொல்லி ஒரு இடத்திற்குப் போய் இறங்கி விட்டு ‘நான் தான் இங்கு வந்தேன்’ என்று சொல்வதைப் போல ‘இந்த இசை என்னால் வந்தது’ என்று சொல்லக் கூடிய டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அவர்கள் சொல்லக் கூடிய Statement இருக்கட்டும், நமக்கு படைப்பு வந்து விட்டது. இந்தப் பாடல் நாசர் கேட்டு நான் கொடுக்கவில்லை. நானாகத்தான் போட்டேன். Situation சொல்லும் பொழுது எப்படி சொல்லிவிட முடியும்? ‘ஒரு கிராமத்தான் ஒரு குருட்டுப் பெண்ணிற்கு வண்ணங்களை Explain பண்றான்’. அவ்வளவுதான் சொல்லியிருக்க முடியும். இந்த Situation எனக்குப் பாட்டைக் கொடுக்குமா? கொடுக்காது. அது எனக்குள் இருக்கும் Fire. In fact இந்த tune-ஐ நான் அவருக்கு வாசித்தே காட்ட வில்லை. அவதாரத்தில் வந்த அத்தனை பாடல்களையும் நான் அவரிடம் வாசித்தே காட்ட வில்லை. Straight-ஆக Record பண்ணிவிட்டுக் காட்டும் பொழுதுதான் ‘சார்! இப்படியெல்லாம் இருக்கா?’ என்று கேட்டார்” என்று கூறினார்.

பாடலின் ராகம் ‘சிந்து பைரவி’ [S R2 G2 M1 G2 P D1 N2 S | N2 D1 P M1 G2 R1 S N2 S]. [ஐயோ! Carnatic படிக்காமல் போய் விட்டோமே?]

ஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திருமதி. உமா ரமணன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது, “இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், பெரிய சங்கதிகள் எதுவும் இல்லாமல், Straight Notes, Gliding Notes மட்டும் இருக்கும் ஒரு ஆரவாரமில்லாத பாட்டு! But அவ்வளவு ஒரு அழகான பாடல்” என்று கூறுகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா ஒரு முறை ஒரு Interview-வில் “’தென்றல் வந்து தீண்டும் போது’ மாதிரி ஒரு பாட்டை நான் Compose பண்ணாத வரையில் நான் எதுவுமே achieve பண்ணவில்லை” என்று கூறினார்.

சமீபத்தில் Vijay TVயின் Coffee with Anu நிகழ்ச்சியில் டைரக்டர் வெங்கட் பிரபு (திரு. கங்கை அமரன் அவர்களின் மகன்), கார்த்திக் ராஜா, ப்ரேம்ஜி அமரன் ஆகியோருடன் இந்தப் பாடலைப் பாடி அதன் பின் சிலிர்த்துப் போய் இப்படிக் கூறினார். ‘இது என்னுடைய Favourite Song. Extra Ordinary Orchestration! அவ்வளவு Complicated. அதை அவ்வளவு Beautiful-ஆ.. இன்னும் கேட்டால் அப்படியே Love பண்ணணும்-னு தோணும். Beautiful Song. அப்டியே பெருமையா இருக்கு! இந்தப் பாட்டெல்லாம் எங்களுடையது!! We are all Gifted! Blessed!’ என்று கூறினார்.

வெங்கட் பிரபு மட்டும் தானா? “என் தலைவனைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி ஒரு பாட்டைக் Compose செய்து விட முடியுமா?” என்று இசைஞானி பக்தர்கள் அனைவரும் பெருமையுடன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

சொர்க்கமே என்றாலும்

பாடல் : சொர்க்கமே என்றாலும்

படம் : ஊரு விட்டு ஊரு வந்து
பாடியவர்கள் : இசைஞானி
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஏ…தந்தன தந்தன தந்தா…

சொர்க்கமே என்றாலும், அது நம்மூரப் போல வருமா?
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா? - சொர்க்கமே

1. ஏரிக்கரக் காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்க ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
வெத்தலையக் மடிச்சி மாமன் அதக் கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சி முங்கி முங்கி குளிச்சி
ஆட ஒரு ஓடையில்லையே
இது ஊரு என்ன ஊரு? நம்மூரு ரொம்ப மேலு!
அட ஓடும் பல காரு! வீணாடம்பரம் பாரு!
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு?

2. மாடு கன்னு மேய்க்க மேயிரதப் பாக்க
மந்தவெளி இங்கு இல்லையே!
ஆடு புலியாட்டம் போட்டு விளையாட
அரச மர மேடையில்லையே!
காள ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே!
தோழிகள அழைச்சி சொல்லி சொல்லி ரசிச்சி
ஆட்டம் போட முடியலையே!
ஒரு எந்திரத்தப் போல அட இங்கே உள்ள வாழ்க்க
இத எங்க போயி சொல்ல? மனம் இஷ்டப் படவில்ல
நம்மூரப் போல ஊரும் இல்ல!

‘ஜன கன மண’ எங்கு ஒலித்தாலும் நம் உடம்பில் தூங்கிக் கொண்டிருக்கும் நரம்புகள் எல்லாம் விழித்துக் கொண்டு ‘சுர்ர்ர்..’ என்று ஒரு உணர்வு கிளம்பி எழுந்து நிற்போம் அல்லவா? அத்தகைய ஒரு உணர்வை இந்தப் பாடல் கொடுக்கும். யாருக்கு?

வெளி நாடுகளிலும், வெளி ஊர்களிலும் வேலை பார்த்து விட்டுப் பல மாதங்களோ, வருடங்களோ, கழித்து ஊருக்கு வருகிறோம். சென்னை சென்ட்ரலிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையத்திலோ வந்து இறங்குகிறோம். ஒரு Call Taxi அல்லது ஒரு Auto-வில் ஏறி உட்காருகிறோம். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... சென்னை நகர வீதிகளில் ஆட்டோ அதிர்ந்த படி பறக்கிறது. வெளியே பார்வையை மேய விடுகிறோம்.

‘சுடிதார் போட்டு, கனகாம்பரம் தலையில் மணக்க.. TVS 50-ல் பெண்கள்’…………..

‘டீக்கடை வாசலில் தம் அடித்தவாறு பேப்பர் படிக்கும் அன்பர்கள்..............

‘தெருவையே அடைக்கப் போட்டிருக்கும் மார்கழி மாதக் கோலங்கள்..............

'கட்டம் போட்ட மடிசாரில், கையில் பூக்கூடையுடன் கோவிலுக்குச் செல்லும் மாமிகள்.......

'நெற்றியில் இட்ட விபூதியுடன் அப்பா ஸ்கூட்டர் பின்னால் உட்கார்ந்து ஸ்கூல் செல்லும் பையன்'…..

‘முன்னால் துளசி மாடம் வைத்த வீட்டின் உள்ளிருந்து 'கற்பூர நாயகியே கனக வள்ளி...."

‘அழுக்குச் சேலையில், குடிசை முன் அமர்ந்து இட்லிக் கொப்பரையின் மூடியைத் திறந்து, வெந்து விட்டதா என்று விரலால் குத்திப்பார்க்கும் ஆயா...’

'கூட்டம் பிதுங்கும் அதிகாலைப் பேருந்துகள்' ……..

‘சிகப்புக் கலரில் பட்டை பட்டையாய் கோடு போட்ட கோவில் சுவற்றின் உள்ளிருந்து 'பாதமிரண்டில் பன்மணிச்சதங்கை... காக்க காக்க......'

'ச்சே... எவ்வளவு விஷயம் மிஸ் பண்றோம்...? மனதுக்குள் சலித்தவாறு.. அதிகாலைச் சென்னையின் அழகை ரசித்தவாறு பயணிப்போம் அல்லவா?

அப்பொழுது FM-ல் இந்தப் பாடலின் முன் வரும் Strings Prelude மட்டும் ஒலித்து, இசைஞானி ‘ஏ.. தந்தன தந்தன தந்தா…’, என்று ஆரம்பித்து விட்டால், கண்டிப்பாக ஒரு ‘ஜன கன மண’ Range-க்கு Feeling வருவது தவிர்க்க முடியாத ஒன்று. இது என்னைப் போல ‘பிறக்க ஒரு ஊர்! பிழைக்க ஒரு ஊர்! தமிழ் நாட்டு மக்களின் தலையெழுத்துக்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன?” என்று பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களுக்கு மட்டுமே விளங்கும் ஒரு உணர்வு.

1st Interlude-ல் ஒலிக்கும் Violin Piece, வயலின் வாசிக்கப் பழகும் அனைவருக்கும் ஒரு அழகான Fingering Exercise.

Sharjah Cricket Ground-ல் சில வருடங்களுக்கு முன் இசைஞானி இந்தப் பாடலைப் பாடும்பொழுது (கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பானது), சரணத்தின் வரிகளை இப்படி மாற்றிப் பாடினார்.

1. இங்கிலாந்தில் மின்னும் கோஹினூரு வைரம்
அங்கிருந்து போனதில்லையா?
சாஃப்ட்வேரில் இன்று யாரு நம்பர் ஒண்ணு?
நம்ம ஊருக் காரன் இல்லையா?
மல்லிகையப் போல பிச்சிப் பூவப் போல
எந்த நாட்டுப் பூ மணக்குது?
வள்ளுவரப் போல பாரதியப் போல
எந்த நாட்டுப் பாட்டினிக்கிது?
பல நாயன்மார்கள் என்ன? அட சித்தர்களும் என்ன?
இல்லறமும் என்ன? அட நல்லறமும் என்ன?
இது போலச் சொல்ல நேரம் இல்ல! – சொர்க்கமே என்றாலும்

2. காலை எழும்போதே கோவில் மணியோச
ஞாபகம்தான் வந்து போகுது!
மாலை நேரக் காற்றில் நாதஸ்வரம் கேட்கும்
இங்கு அதற்கெங்கு போவது?
ஆற்றில் துள்ளிக் குதிச்சி ஆடும் விளையாட்டு
அப்போ அப்போ தோணுதில்லையா?
அம்மா கையில் சமையல் சின்னதான போதும்
எண்ணிப் பார்க்க இன்பம் இல்லையா?
விளையாடுகின்ற மீதி அட வெட்டிப் பேச்சு சேதி
சொன்னால் நிக்குது பாதி! இனி நெஞ்சில் உண்டு மீதி!
என் பாட்டில் சொல்ல நேரம் இல்ல! – சொர்க்கமே என்றாலும்

இந்தப் பாடல் என்ன ராகம்? வழக்கம் போல நெட்டுலாவினேன்! “சாரங்க தரங்கினி” என்று விடை கிடைத்தது. ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ (தென்றலே என்னைத் தொடு), ‘இசையில் தொடங்குதம்மா’ (ஹே ராம்) ஆகிய பாடல்களும் இதே ராகமாம். [S R2 M2 P D2 N3 S | S N3 D2 P M2 R2 S கர்னாடக இசை தெரிந்தவர்களுக்காக]

“பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?” என்று இசைஞானி பாடும் அழகு, “ஐயா! பல தேசம் முழுதும் பேசும் பல விதமான தமிழும் உன் தமிழ் போல் இனித்திடுமா?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பாடு நிலாவே

பாடல் : பாடு நிலாவே

படம் : உதய கீதம்
பாடியவர்கள் : எஸ்.பி.பி, ஜானகி
எழுதியவர் : மு. மேத்தா.
இசை : இசைஞானி

பாடு நிலாவே! தேன் கவிதை, பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே! தேன் கவிதை, பூ மலர

1. நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் ஒன்றாக ஊர்கோலமோ?
என் வீடு வாராமல் ஏன் கோபமோ?
கைதானபோதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளே போதும்
என் ஜென்மமே ஈடேறவே!

பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே

2. ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் இந்நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர தூண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே!

பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே! தேன் கவிதை, பூ மலரே

திருமதி. எஸ். ஜானகியின் “ஆ.ஆ…” Humming உடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் என் சிறு வயது ஞாபகம் வந்து போகும். நான் School-ல் படித்துக் கொண்டிருந்த போது வந்த படம் இது. அப்பா அம்மாவுடன் நான் Theatre-க்கு சென்று பார்த்த முதல் படம். இசைஞானியின் இசை அறிமுகம் இந்தக் காலகட்டங்களில் தான் எனக்கு ஏற்பட்டது. படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த சில நாட்களில், Radio-வில் இந்தப் பாடலை ஒலிபரப்பும் முன் அறிவிப்பாளர் “அடுத்த பாடல் உதய கீதம் படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது’ என்று கூற, விஷயம் தெரியாத நான் ‘என்னப்பா? Mohan-ம், Revathy-யும் தானே பாடுவாங்க! ஏன் வேற பெயர்களை சொல்றாங்க?” என்று அப்பாவிடம் அப்பாவியாகக் கேட்க, அவர் “இல்லடா! அவங்க வாயசைப்பாங்க! இதை actual-ஆ பாடினது எஸ்.பி.பி-யும், ஜானகியும் தான்” என்று விளக்கம் சொன்ன ஞாபகம். மனிதர்கள் மட்டுமே அழுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்தப் பாடலின் “ஆ…ஆ…” Humming-க்குப் பின் வரும் Violin Piece-ஐக் கேளுங்கள். இசைஞானி கொடுத்த Notation-ஐப் பார்த்து Violinist இந்த Piece-ஐ இசைத்திருப்பார். மன்னிக்கவும். அழுது இருப்பார். அப்படி ஒரு சோகத்தை அந்த Violin இசை நமக்குச் சொல்லும்.

எஸ்.பி.பி அவர்கள் சமீபத்தில் கலைஞர் டிவியின் ‘வானம்பாடி’ நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பற்றிக் கூறும்பொழுது:-

“இந்தப் பாடலில் அவர் (இசைஞானி) செய்த Experimentation-ஐ எத்தனை பேர் கண்டு பிடித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சின்ன காந்தாரம், ஒரு சின்ன தைவதம் வைத்து, அந்த தைவதம் கூட Lower Octave-ல் use பண்ணும்போது ஒருவிதமாக இருக்கிறது. மேலே use பண்ணும் பொழுது ஒருவிதமாக இருக்கிறது. பெரிய காந்தாரத்தில் இருந்து, சின்ன காந்தாரத்திற்கு வரும்பொழுது அந்த Colour மாற்றம்… வேறு யாரும் கையாள முடியாது. அது மட்டுமில்லாமல் 3rd BGM-ல் ஒரு கிரஹபேதம்.. ஒரு Modulation கொண்டு வந்து இரண்டு Bar-க்குள் Original Scale-க்கு கொண்டு வந்து விடுவார். ரொம்ப Easy-ஆ இருக்கும் Explain பண்ணுவதற்கு. அவர் சிரமம் கூட படவில்லை. C Sharp போய், உடனடியாக, வேற ராகத்தில் இருந்து within two bars, நமக்கு ஒரு confusion கூட இல்லாமல், அந்த Chord, Correct-ஆக சரணம் பாடுவதற்கு.. என்ன மாதிரி Experimentation அது? ச..ரி..க..ப…த…ச… மோகன ராகத்தில், ‘உன் பாடலை நான் கேட்கிறேன்’ இந்த இடத்தில் .. ஒரு காந்தாரம் ஒரு தைவதம் இரண்டு Note add பண்ணிக்கொண்டு, பாட்டு Colour-ஐயே Change பண்ணி விடுவார். எந்தவிதமான Classical Expertise இருந்தாலும் கூட இப்படி compose பண்ண முடியாது என்று நான் உறுதியாக சொல்கிறேன். ஒரு Pandit கேட்டார் என்றால், உட்கார்ந்து Answer பண்ணக்கூடிய தகுதி இருக்கக்கூடிய Music Director-தான் Music Director. அதுதான் இளையராஜா. I feel very proud to talk about him” என்கிறார்.

சத்தியமாக எஸ்.பி.பி அவர்கள் விளக்கியதில் எனக்கு “இரண்டு Bar-க்குள் Original Scale-க்கு வருவதைத்” தவிர மீதி விளங்கவில்லை என்றாலும் ஒன்று மட்டும் கண்டிப்பாக விளங்கியது. காலங்கள் தாண்டி இதயங்களை வருடப் போகும் உன்னத இசையை உருவாக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஒப்பற்றக் கலைஞன் வாழுகின்ற காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது தான் அது.

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

பாடல் : நான் தேடும் செவ்வந்திப் பூவிது

படம் : தர்ம பத்தினி
பாடியவர்கள் : இசைஞானி,
எழுதியவர் :
இசை : இசைஞானி

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்! போவோம் இனி காதல் தேசம் (2)

1. பறந்து செல்ல வழியில்லையோ?
பருவக் குயில் தவிக்கிறதே?
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தவிக்கிறதே!
பொன் மானே என் யோகம் தான்
பெண்தானோ சந்தேகம் தான்!
என் தேவீ! ஆ…..
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
உன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு! ராஜாவே யார் மூச்சு?

2. மங்கைக்குள் என்ன நிலவரமோ?
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ?
இன்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண் மேகம் நான்
எந்நாளும் உன் வானம் நான்!
என் தேவா ஆ………
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்!
தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை

இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், வள்ளுவரின்,

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற குறளை சற்றே மாற்றி,

“இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார்
இசைப்பினும் இசைக்காமை நன்று”

என்று வாசிக்கத் தோன்றும். காலையிலோ மாலையிலோ Walking போய்க்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பாடலின் Prelude-க்கு முன் இசைஞானி பாடும் அந்த “ஆ…ஆ..ஆ..” ஆலாபனை ஏதோ ஒரு டீக்கடையில் ஒலிக்கக் கேட்கிறது. இப்பொழுது உங்கள் கால்கள் நிற்கவில்லையென்றால், நீங்கள் இன்னும் “வாழவே துவங்கவில்லை” என்று அர்த்தம். அந்த ஆலாபனை முடிந்து துவங்கும் Prelude-ல் ஒலிக்கும் Violin-களும், மற்ற Strings-ம், முக்கியமாக Bass Guitar-ம், தற்கொலை செய்து கொள்ளப் போய்க்கொண்டிருப்பனுக்குக் கூட ‘அடடா! வாழ்க்கை எவ்வளவு அழகானது?’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, வாழ்கின்ற ஆசையையும் நம்பிக்கையையும் கொடுக்கும். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பாக நான் பார்ப்பது இசைஞானியின் தமிழ் உச்சரிப்பு. ‘உன் விழி ஓடையில்’, ‘உன் கனி விழுமென’ ஆகிய வரிகளில் இசைஞானியின் ‘ழகர’ உச்சரிப்பு அனைத்து பாடகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தவிர பாடல் முழுவதும் ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு தெளிவாக, சுத்தமாக உச்சரித்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார் இசைஞானி.

இந்தப் பாடலைக் கேட்பவனுக்கு வாழத் தோன்றும் என்பது என் கருத்தாக இருந்தாலும், நடிகர் பார்த்திபன் சற்றே வித்தியாசப் படுகிறார். ஜெயா டி.வி.யின் ‘அன்றும் இன்றும் என்றும் Maestro Live in Concert’-ல் இந்தப் பாடலுக்கு முன் அவர் பேசும் பொழுது,

“சிலருடைய Voice காதுக்கு இதமாயிருக்கும்! சிலருடைய Voice இதயத்துக்கு இதமாயிருக்கும்! ஆனால் மிகச் சிலருடைய Voice தான் Soul-க்கு இதமாயிருக்கும். Company-க்கெல்லாம் Sole Proprietor இருக்கிற மாதிரி இசைக்கு Sole Proprietor திரு. இளையராஜா அவர்கள். சந்தோஷத்திலயே பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? நான் மணிரத்னம் சார் Direction-ல ஒரு Serial ஒண்ணு Act பண்ணேன். திருமதி. சுஹாசினி மணிரத்னம்-தான் என்னுடைய மனைவியாக Act பண்ணாங்க. அதில ஒரு Scene-ல நான் அவங்க கிட்ட கேட்பேன். “சந்தோஷமா இருக்கா?”னு. அதுக்கு அவங்க சொல்லுவாங்க “செத்துரலாம் போல இருக்கு”ன்னு. அதாவது சந்தோஷத்தோட உச்சத்தில் அப்படி ஒரு Feeling இருக்கும். ‘இப்படியே செத்துட்டா நல்லா இருக்கும் போல இருக்கே?” என்று. அது வந்து இந்தப் பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாப் பாடுவாரு. உண்மையிலேயே சொல்றேன். அப்படியே உயிரோட செத்துரலாம் போல இருக்கும். அப்படி ஒரு ஜீவன் அதில இருக்கும்”. என்றார்.

இந்தப் பாடல் என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது? என்று Net-ல் உலாவித் தேடிய பொழுது “ஹிந்தோளம் [S G2 M1 D1 N2 S | S N2 D1 M1 G2 S] (Mixes Chandrakouns's Ni3)” என்று விடை கிடைத்தது. சரியோ? தவறோ? எனக்குத் தெரியாது. ஆனால் Bracket-க்குள் இருக்கும் “Mixes Chandrakoun’s…” மட்டும் “Mixes இசைஞானியின் ஜீவன்” என்று இருந்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று மட்டும் தெரிந்தது.

நினைவோ ஒரு பறவை

பாடல் : நினைவோ ஒரு பறவை

படம் : சிகப்பு ரோஜாக்கள்
பாடியவர்கள் : கமல்ஹாசன், எஸ். ஜானகி
எழுதியவர் :
இசை : இசைஞானி

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

1. ரோஜாக்களில் பன்னீர் துளி
வடிகின்றதேன்? அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்?
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன் – நினைவோ

2. பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ?
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ?
நீதான் இனி நான் தான் - நினைவோ

ஒரு மெல்லிய Female Humming-உடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் அழகு என்னைப் பொருத்த வரையில் பாடலுடன் பயணிக்கும் Soft Rhythm. Manual Drums-ன் அழகைப் புரிந்து கொள்ள இந்தப் பாடல் ஒன்று போதும். Electronic Rhythm Pad-களின் ஓசையில் இல்லாத ஒரு ஜீவன், இந்தப் பாடலில் ஒலிக்கும் மெல்லிய Manual Drums-லும், ஒவ்வொரு Bar-ன் முடிவிலும் ஒலிக்கும் அதனினும் மெல்லிய மணியோசையிலும் இருக்கும். பொதுவாக பாடலின் பின்னால் Violin-களை தெளித்து அழகு சேர்க்கும் இசைஞானி இந்தப் பாடலில் சற்று வித்தியாசமாக உச்ச ஸ்தாயியில் “பா… ப.. ப.. ப. பா..ப…பா” என்று ஒரு Humming சேர்த்து அழகூட்டியிருப்பார். நன்றாகக் கவனியுங்கள். அந்த Humming-ம் கூட “நினைவோ ஒரு பறவை” என்ற வரியில் “பறவை” என்ற சொல்லில் ஆரம்பிக்கும். அப்படியே ஒரு பறவை சிறகை விரித்து பறக்கத் துவங்குவது போன்ற ஒரு உணர்வு இதில் ஏற்படும். அப்படியே அந்த Humming பறவை சிறகடித்து வானில் மெலிதாகப் பறந்து உச்ச ஸ்தாயிக்கு சென்று, “பறக்கும் அது கலக்கும் தன் உறவை” என்ற வரிகளில் மெதுவாக கீழிறங்கி அழகாக Land ஆகி விடும்.

இந்தப் பாடலைப் பாடிய திரு. கமல்ஹாசன் அவர்கள் இந்தப் பாடலைத் தான் பாடியதைக் குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது:-

“Cinema Express Function-ல் ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, தலைகீழாகக் கூட நிற்கத் தயாராக இருந்தேன். ஆனால் Audience-க்கு முகம் சரியாகத் தெரியாமல் போய் விடும் என்று அதை Try பண்ணவில்லை. அப்பொழுது English பாட்டு பாடலாமே என்று யோசித்து, “One is the Lonliest Number” என்று ஒரு பாட்டு உண்டு. அதை உச்ச ஸ்தாயியில் கத்தி விடலாம். பிசிறானால் கூட English-காரன் பாட்டு இப்பிடிதான் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன்”. (இந்தப் பாடலைக் கேட்க விரும்புபவர்கள் Youtube-ல் ‘One is the lonliest number” search பண்ணவும் அல்லது http://www.youtube.com/watch?v=pUlw3ACdN5s என்ற முகவரியில் இந்தப் பாடல் இருக்கிறது). அதை அந்த Function-ல் பாடி விட்டேன். முன்னாடி ராஜா உட்கார்ந்திருக்கிறார். அது தெரியாமல் பாடி விட்டேன். அடுத்த நாள் Recording Theatre-ல் ‘என்ன நேத்து என்னமோ பாட்டெல்லாம் பாடினீங்க?” என்று கேட்டார். “ஐயைய்யோ சார்! நீங்க கேட்டீங்களா?” என்றேன். “ஆமா! நல்லாயிருந்திச்சி! இந்தப் பாட்டில அதே மாதிரி ஒரு Part வருது! அதப் பாடுங்க.. அப்பிடியே பாட்டையும் பாடிடலாம் இல்ல?” என்றார். அதில் வந்ததுதான் நான் பாடினது. “உங்களுக்கு என்ன வருமோ அதைப் பாடுங்கள்”, என்றார். “சார்! சார்! வேண்டாம் சார்!” என்றேன். “நேத்து நீங்க பாடின மாதிரியே இதில ஒண்ணு போட்டிருக்கேன். பாடுங்க!” என்றார். அதுதான் பாடலின் கூட வரும் “பா… ப.. ப.. ப. பா..ப…பா Humming” என்றார்.

ஊரை விட்டு எங்காவது தொலை தூர பயணம் செல்லும்பொழுது பஸ்ஸிலோ, இரயிலிலோ ஜன்னல் அருகில் அமர்ந்து குறைந்த Volume-ல் உங்கள் Walkman-லோ, CD Player-லோ இந்தப் பாடலைக் கேளுங்கள். அந்த சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது. இசை மேதைகள், இசை அறிவாளிகள், இசை வல்லுனர்கள், இசைக் கலைஞர்கள் என்று எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால் “இசைஞானி” என்று ஏன் அவர் அழைக்கப் பெறுகிறார்? ஞானம் என்பது இறைவனிடம் இருந்து வருவது. தனக்கு மிகவும் பிரியமான ஒருவனுக்கு இறைவன் விரும்பி அளிப்பது. அந்த ஞானம் நிறையப்பெற்ற இசையமைப்பாளர் “இசைஞானி” ஒருவரே.

ஏரியிலே எலந்த மரம்

பாடல் : ஏரியிலே எலந்த மரம்

படம் : கரையெல்லாம் செண்பகப்பூ
பாடியவர்கள் :
எழுதியவர் : பஞ்சு அருணாசலம்
இசை : இசைஞானி

ச ரி க ம ப த நி ச (2)
தன்னன்ன நாதின தன்னன்னன்னா ….

ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வச்ச மரம் (வச்ச மரம்)
தங்கச்சி வச்ச மரம் (வச்ச மரம்)
ஒரு காயும் இல்ல பூவும் இல்ல
ஒன் தங்கச்சி வச்ச மரம்
(வச்ச மரம்) காயும் இல்ல பூவும் இல்ல
ஒன் தங்கச்சி வச்ச மரம்
ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வச்ச மரம்

1. வெள்ளி மலையில தேனருவி!
(தேனருவி! தேனருவி! தேனருவி! தேனருவி)
வேப்ப மரத்தில பூங்குருவி!
(பூங்குருவி! பூங்குருவி! பூங்குருவி! பூங்குருவி!)
வெள்ளி மலையில தேனருவி!
வேப்ப மரத்தில பூங்குருவி!
வாழை எலயில ஓடுற காத்து ஆடுற கூத்து காணலையோ?
அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளாம் வேலிகளாம் (2)
செண்டுக மேல வண்டுக வந்து
உண்டது தேன போதையில
ஆனந்தம் தானே போகையில (2) – ஏரியிலே

2. அல்லிக் கொளத்தில தாமரையாம்!
(தாமரையாம்! தாமரையாம்! தாமரையாம்! தாமரையாம்!)
முல்லைக் கொடியில செண்பகமாம்!
(செண்பகமாம்! செண்பகமாம்! செண்பகமாம்! செண்பகமாம்!)
அல்லிக் கொளத்தில தாமரையாம்!
முல்லைக் கொடியில செண்பகமாம்!
தென்ன மரத்தில மாங்கா தேடும்
மடையன் சொன்னா கேட்டுக்கடா!
வளர்ந்து விட்ட வாத்துக்களே,
ஓடுற பக்கம் ஓடுங்களே (2)
வந்தது மாலை காலையிலே
சென்றது மேகம் பூமியிலே (2)

இசைஞானி ரசிகர்களின் Collections-ல் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு பாடல். தொலைக்காட்சிகளிலோ வானொலி அலைவரிசைகளிலோ அதிகம் ஒளி/ஒலிபரப்பப்படாத மிகவும் அபூர்வமான ஒரு பாடல். ஒரு Folk Song-ல் Western Music Harmony புகுத்தினால் அந்தப் பாடலின் அழகும், மண் மணமும் தேயுமா? கண்டிப்பாகத் தேயும் என்று நீங்கள் எண்ணினால் இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தப் படத்தில் Prathap Bothan இசை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வருவார். அந்த ஊரில் இருக்கும் சிறுவர்களை அழைத்து, வயல் வெளியில், Guitar போட்டு பாடுவது போன்ற ஒரு காட்சியமைப்பு. அவர் அந்தச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் முறை, Cassette-லோ அல்லது Audio CD-யிலோ இருக்காது. ‘வச்ச மரம்’ ‘வச்ச மரம் கீழே’ …என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து இந்தப் பாடல் ஆரம்பிக்கும். இந்த ஒரு பாடலுக்காகவே இந்தப் படத்தின் DVD எங்காவது கிடைக்காதா என்று நான் இன்று வரை கடை கடையாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சரணத்தில் வரும் ‘பூங்குருவி பூங்குருவி’ Chorus-க்கு இசைஞானி எழுதி இருக்கும் Harmony-க்காகவே அவர் கரங்களைப் பிடித்து முத்தமிடத் தோன்றுகிறது.

ஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு கங்கை அமரன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது:-
“இந்தப் பாடலில் Rhythm Guitar play பண்ணியது நான்தான். அந்தக் காலகட்டங்களில் maximum எல்லா songs-க்குமே நான் Guitar வாசிச்சிருப்பேன். இந்தப் பாட்டு Bangalore Woodlands Hotel-ல் வைத்து Compose பண்ணியது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் (இந்தப் படத்தின் கதை அவருடையது) Bangalore-ல் Work பண்ணியபோது, நான், பஞ்சு அண்ணன் (திரு. பஞ்சு அருணாசலம்), எல்லோரும் அங்கே சென்று தங்கி இந்தப் படத்தின் பாடல்களை உருவாக்கினோம். அதாவது ஒரு விஷயத்தைக் Create பண்ணும்பொழுது, நாம் ஒரு percent நினைத்தால் அதை Hundred percent ஆக்குவதென்பது ஒரு பெரிய விஷயம். இந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு பாடல் ஆராய்ச்சிக்காக அந்த ஊருக்கு வருகிறார். அங்கே வந்து அந்த ஊரில் பாடும் பாடல்களைக் கேட்டு ‘ஐயோ! இவ்வளவு அழகான பாடலா? இவ்வளவு அருமையான Orchestration இருக்கிறதே? இதனுடைய Counterparts எல்லாம் இப்படி இருக்கிறதே?’ என்று நினைக்கக் கூடிய இசை ஆராச்சியாளன் அவன். அவன் அங்கு வரும்பொழுது, அந்த இசை ஆராச்சியாளன் இளையராஜா Mind-க்குள்ள போயிட்டாரு! Recording போகும்வரை எங்களுக்கு முதலில் வரும் ச-ரி-க-ம எல்லாம் தெரியாது. அங்கு சென்ற பிறகு அதை சேர்த்து, அதனுடன் Chorus சேர்த்து, அந்தப் பாடலை காலையில் ஆரம்பித்து ஏறக்குறைய மாலை நான்கு மணிக்கு பதிவு செய்து முடித்தோம். அப்பொழுதெல்லாம் தனித்தனி Tracks கிடையாது. ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்த பாடல்களில் இது ஒன்று. இந்தப் பாடல் எப்படி வரும் என்றே எங்களுக்குத் தெரியாது. முழுக்க முழுக்க Song கேட்கும்பொழுது தான் இளையராஜாவினுடைய கற்பனைகள் தெரிந்தது. Compose பண்ணும்பொழுது இரண்டு Part இருந்தால் எப்பொழுதும் இளையராஜா ஒன்று பாடுவார். ‘நீ இந்தப் Part பாடுடா’ என்று ஒன்றை என்னிடம் கொடுத்து பாடச் சொல்வார். நாங்கள் அதைப் பாடிப் பார்த்து Sounding எப்படி வருகிறதென்று Check பண்ணுவது வழக்கம். இளையராஜாவை பொருத்த வரையில் இந்தப் பாடல் மேடையில் பாடக்கூடிய கலைஞர்களுக்கு ஒரு Practice. ஏனென்றால் ஒருவர் ஒரு Note பாடுவார். மற்றொருவர் வேறொரு Note பாடுவார். இவர் அதைக் கவனிக்கக் கூடாது. இது தனி Meditation. இந்த Route-ல ஒருவர் பூஜை பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். கும்பாபிஷேகத்தில் ஹோம குண்டம் மாதிரி. அவங்க மந்திரத்தை அவங்க Correct-ஆ சொல்லணும். இவங்க மந்திரத்தை இவங்க Correct-ஆ சொல்லணும். அந்த மந்திரத்தை கவனிச்சாங்கன்னா இவங்க மந்திரம் போயிடும். அதைப்போல இந்தப் பாடலைப் பாடுபவர்கள் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட Note-லும் Route-லும் தான் Travel பண்ண வேண்டும். அந்த Time-ல ரொம்பக் கஷ்டம் அது. மறக்க முடியாத ஒரு பாடல்” என்கிறார்.

“ஒரு Folk Song-ல் Western Music-ல் இருக்கும் Harmony-யைப் புகுத்தி, எல்லா Chorus Singers-க்கும் அதை சொல்லிக் கொடுத்து, Practice செய்ய வைத்து, Harmonise செய்து… ஒரு சாதாரணப் பாடலுக்கு எதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும்?”, என்று நினைக்கும்பொழுது ஒரு வலைத்தளத்தில் இசைஞானியைப் பற்றி ஒருவர் இப்படி எழுதியிருந்ததுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ‘That is the Joy of Creation”.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

பாடல் : சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

படம் : மைக்கேல் மதன காம ராஜன்
பாடியவர்கள் : கமல்ஹாசன் & எஸ். ஜானகி
எழுதியவர் : வாலி
இசை : இசைஞானி

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு சேருன்ன நேரம்

1. ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணும்
மோகன ராகம் நின் தேகம், கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ? – நீ……..- சுந்தரன் நீயும்

2. சப்பர மஞ்சத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்ஙள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாரம்,
உலரி வரையில் நம்முட யோகம் – ஆ…- சுந்தரி நீயும்

பாட்டெங்கும் மலையாள வாசம் வீசும் இந்தப் பாடல் ஆரம்பத்தில் Prelude-ன் முன் ஒலிக்கும் Drums Rhtyhm-ஐ கவனியுங்கள். முதல் முறை கேட்ட பொழுது என் சிற்றறிவுக்கு கொஞ்சமும் பிடிபடவில்லை. இது நாலா? எட்டா? பதினாறா? உலகின் எந்த Sampler-லும் இப்படி ஒரு Pattern இருக்குமா என்று தெரியவில்லை. அதனோடு சேர்த்து Chorus Voices!! அந்த Chorus Voices முடிந்த அடுத்த Bar-ல் Rhythm Pattern மாறுவது, இசைஞானி மட்டுமே நிகழ்த்தக் கூடிய ஒரு அற்புதம்.

இப்பொழுது முதலாவது BGM (Interlude). முதல் நான்கு Bar-க்கு ஒரு Instrument-ல் ஒரு Bit (Keyboard என்று நினைக்கிறேன்) இசைத்து, பின் அடுத்த நான்கு Bar-களுக்கு முதலில் வந்த Keyboard Bit தொடர்ந்து வர, அதன் மேல் மெல்லிய வயலின்களின் Harmony.. பின் அடுத்த நான்கு Bar-களுக்கு முதலில் வந்த Keyboard Bit-ம், பின்னர் வந்த வயலின் Harmony-ம் தொடர்ந்து வர, அதன் மேல் Female Chorus.. இவ்வளவு நுட்பமும் இசைஞானி ஒருவர் மட்டுமே ஆட இயலும் ஒரு இசைத்தாண்டவம்.

சரணத்தில், ‘ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணும்’ என்ற வரி முடிந்தவுடன் கேட்கும் ஒரு மெல்லிய ‘தண்டல்’ ஒலியைக் கேளுங்கள். ஒரு பாலக்காட்டு ஐயர் ஜோடி பாடும் பாடலின் Situation-க்கு தகுந்த Instrument-ஐ Select செய்து பிரயோகித்தது, டெண்டுல்கர் போல இசைஞானி அநாயசமாக ஆடிய ஒரு Elegant Cover Drive.

இந்தப் பாடல் ‘கேதார’ ராகத்தில் அமைந்திருப்பதாக ஒரு வலைப்பூவில் படித்த ஞாபகம் (தவறாயிருந்தால் Carnatic தெரிந்தவர்கள் விளக்கவும்).

இந்தப் பாடலைப் பாடிய திரு. கமல்ஹாசன், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் அரவிந்த் உடனான பேட்டியில், இந்தப் பாடல் பதிவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறும்பொழுது,

“முதல்ல நானும், சிங்கிதம் சீனிவாசராவும் ராஜா சாரிடம் கேட்டது ‘மார்கழித் திங்கள்’ அந்த மாதிரி ஒரு Tune-தான். அதுதான் ஓ.கே ஆகியிருந்தது. Lyrics எல்லாம் எழுதியபின்பு ராஜா அதில் ஒரு சின்ன மாற்றம் செய்தார். நாங்கள் கூட ‘எதற்கு மாற்றம் செய்கிறார்? அப்படியே ஆயிரம் வருஷத்து Tune இருந்து விட்டுப் போகட்டுமே’? என்றுதான் நினைத்தோம். ஆனால் Modern-ஆக ரொம்ப பெரிய Hit ஆக்கிவிட்டார். நான் பாடுவது கூட Last Minute-ல என்னை பாட வைத்தார். இந்தப் பாடல் Track Recording இல்லை. Live Orchestra-வுடன் record செய்யப்பட்டது. Recording முடிந்து வெளியே வந்து ‘ஹிட்டு Song’ அப்படின்னு வேற யாரோ போட்ட பாட்டு மாதிரி சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போய்விட்டார். அதற்குப் பின் தான் ஐயோ இவ்வளவு நல்ல பாடலை ஒழுங்காக எடுக்க வேண்டுமே என்று எங்களுக்கு Tension ஆரம்பம் ஆகி விட்டது” என்று கூறினார்.

இதைப் போன்ற பாடல்களைக் கேட்கும் பொழுது எல்லாம் எனக்குத் தோன்றுவது, ‘கடவுளே! ஒரு மனிதனின் மூளைக்குள் எப்படி இவ்வளவு ஞானத்தைத் திணித்தாய்?’ என்பதுதான்.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

பாடல் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி

படம் : தளபதி
பாடியவர்கள் : எஸ்.பி.பி, ஜானகி
எழுதியவர் : வாலி
இசை : இசைஞானி


சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி எந்நாள் நல்ல தேதி?
என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!


1. வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?
வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ? – என்னையே தந்தேன்


2. சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ? நீ எனை தீண்டினால்
காயங்களும் மாறாதோ? நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் – சுந்தரி கண்ணால்


ஒரு போர்க்களக் காட்சியும், போருக்குச் சென்ற காதலனும் அவனைப் பிரிந்த காதலியும் பிரிவுத் துயரில் பாடும் ஒரு சூழல். பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் மெல்லிய புல்லாங்குழலின் ஓசையில் இசைஞானி ஊற்றியிருக்கும் “உயிர்” எத்தனை Keyboard, Synthesizer, Sampler-களில் இசைத்தாலும் வராத ஒன்று. புல்லாங்குழலின் இசை முடியும் அந்தப் புள்ளியில், மெதுவாக வயலின்களும், கொஞ்சம் கொஞ்சமாக மற்றக் கம்பி வாத்தியங்களும் இணைவது, சிறிய நீரூற்றுக்கள் வழிந்து, இணைந்து, ஒன்றை ஒன்று தழுவி, மெல்லிய ஓடையாக உருவெடுக்கும் ஒரு உன்னத உணர்வு. பல்லவி துவங்குவதற்கு முன் 1st BGM-ன் (அல்லது Prelude-ன்) முடிவில் ஒலிக்கும் மெல்லிய மணியோசையும், அதனோடு சேர்ந்து ஒலிக்கும் மெல்லிய வயலின்களின் கொஞ்சலும், ஒரு உன்னதக் கலைஞன் தன் ஜீவனை ஊதி உருவாக்கிய பாடலை நம் இதயங்களில் நிரப்புவதற்கு ஒரு Precursor. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, இந்த வரி முடிந்ததும் ஒலிக்கும் Flute Bit (இந்த இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட Flutes ஒலிப்பதை நன்றாக உற்று கவனியுங்கள்), அடுத்த வரியான “சொல்லடி எந்நாள் நல்ல தேதி”-யை இணைக்கும் ஒரு பாலம். சரணங்களுக்கு முன் ஒலிக்கும் BGM-களும் Chorus Voices-ம், ஓடைகள் ஒன்றாய் இணைந்து காட்டாற்று வெள்ளமாய் உருவெடுக்கும் பிரவாகம்.


இந்தப் பாடலுக்கான இசை பதிவானது மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில். எஸ்.பி.பி அவர்கள் ஜெயா டிவியின் ‘அன்றும் இன்றும் என்றும்’ நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடிய பின், இந்தப் பாடல் பதிவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் இப்படி நினைவுகூறுகிறார்:-


“இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் மும்பையில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்தோம். திரு. ஆர்.டி.பர்மன் அவர்களுடைய இசைக்குழுவில் இருக்கும் கலைஞர்கள்தான் இந்தப் பாடலுக்கு வாத்தியம் இசைத்தார்கள்; இளையராஜா Notes கொடுத்த உடனே, 1st BGM வாசித்து முடிந்தவுடன் எல்லோரும், Instruments-ஐ கீழே வைத்து விட்டு, எழுந்து நின்று, they started clapping!! அது பெரிய விஷயம் இல்லை! அவர் இசைக்கு எங்கே இருந்தாலும் பாராட்டுக்கள் கிடைக்கும்! அந்த ரெக்கார்டிங் எல்லாம் முடிந்தவுடன் ஒரு Musician என்னிடம் வந்து “அந்த ஆளு பாம்பே வந்து Music பண்ண வேண்டாம்யா!” என்று சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு அவர் “நாங்கள்-லாம் இங்க ஏதோ Jingles மாதிரி வாசிச்சிகிட்டு போய்கிட்டு இருக்கோம். அந்த ஆளு compose பண்ணத எல்லாம் வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்-யா! அந்த ஆள Madras-லயே இருக்க சொல்லு!” என்று சொன்னார். இளையராஜா Madras-ல இருந்து உலகத்தையே ஆளுகிறார். He is a Blessed Person”.

இசைஞானி அவர்கள் பி.பி.சி. வானொலியின் “பாட்டொன்று கேட்டேன்” நிகழ்ச்சியில், இந்தப் பாடலைக் குறித்து கூறும்பொழுது,

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி! சொல்லடி எந்நாள் நல்ல தேதி?” இது ஒரு கவிதையா? என்று கேட்டால் இல்லை. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி! சொல்லடி எந்நாள் நல்ல தேதி?” “நானுனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்”, இதை நீங்கள் எப்படிச் சொன்னாலும், எத்தனை விதமாக சொன்னாலும், கேட்கிறவனை உங்கள் உணர்வுகளுக்குள் நீங்கள் கொண்டு வர முடியாது. ஆக, வெறும் வார்த்தைகள் உணர்த்தாத ஒரு விஷயத்தை ஒரு இசை உணர்த்த வேண்டும். இந்த வார்த்தைகளில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடலில் ‘மற்ற வார்த்தைகள் வேண்டாம்; இந்த வார்த்தைகள் போதும்’ என்று முடிவெடுத்தாரே; அது தான் இதில் சிறப்புடையது’. ‘எண்ணமோ ஓராயிரம் வந்தால், என்னடி நான் செய்வது அன்பே?’ என்று அவர் எழுதியிருக்கலாம். ஆனால் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி!’ என்று அந்த மெட்டுக்குப் பொருத்தமான வார்த்தைகளை அவர் எழுதியிருப்பதுதான் இதில் சிறப்பு. ஒரு கவிஞனுக்கு எந்த வார்த்தைகளை எழுதக் கூடாது என்று தெரிய வேண்டும். ஒரு சிற்பிக்கு எப்படி வேண்டாத கற்களை நீக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறதோ, எந்தக் கல்லை நீக்கினால் இந்தச் சிலை தோன்றும் என்று தோன்றுகிறதோ, அப்படி ஒரு பாடல் ஆசிரியனுக்கும், கவிஞனுக்கும் ‘இந்த வார்த்தைகள் இந்த இசைக்குப் பொருத்தம் அல்ல’ என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தவர்கள் ரொம்பக் குறைவு’ என்று கூறுகிறார்.

இந்தப் பாடல் ‘கல்யாணி’ ராகத்தில் இயற்றப்பட்டுள்ளது என்று விஷயம் தெரிந்த ஒருவர் சொன்னபோது, ‘அடடா! Carnatic Music படித்து இருந்தால் இசைஞானியை இன்னும் ஆழமாக ரசித்திருக்கலாமே?’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என்ன ஒரு பாடல்? இந்தப் பாடலின் BGM-களில் இருக்கும் Orchestration… ஒரு நல்ல Music System ஒன்றில் தனியறையில் அமர்ந்து, ஒரு மாலைப் பொழுதில், மனதில் வேறு எந்த சஞ்சலமும், சிந்தனையும் இல்லாமல் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு மயிர்க்கூச்செறியவில்லை யென்றால், உங்களுக்குள் இசை இல்லை என்று அர்த்தம்.