Monday, June 7, 2010

சொர்க்கமே என்றாலும்

பாடல் : சொர்க்கமே என்றாலும்

படம் : ஊரு விட்டு ஊரு வந்து
பாடியவர்கள் : இசைஞானி
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஏ…தந்தன தந்தன தந்தா…

சொர்க்கமே என்றாலும், அது நம்மூரப் போல வருமா?
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா? - சொர்க்கமே

1. ஏரிக்கரக் காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்க ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
வெத்தலையக் மடிச்சி மாமன் அதக் கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சி முங்கி முங்கி குளிச்சி
ஆட ஒரு ஓடையில்லையே
இது ஊரு என்ன ஊரு? நம்மூரு ரொம்ப மேலு!
அட ஓடும் பல காரு! வீணாடம்பரம் பாரு!
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு?

2. மாடு கன்னு மேய்க்க மேயிரதப் பாக்க
மந்தவெளி இங்கு இல்லையே!
ஆடு புலியாட்டம் போட்டு விளையாட
அரச மர மேடையில்லையே!
காள ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே!
தோழிகள அழைச்சி சொல்லி சொல்லி ரசிச்சி
ஆட்டம் போட முடியலையே!
ஒரு எந்திரத்தப் போல அட இங்கே உள்ள வாழ்க்க
இத எங்க போயி சொல்ல? மனம் இஷ்டப் படவில்ல
நம்மூரப் போல ஊரும் இல்ல!

‘ஜன கன மண’ எங்கு ஒலித்தாலும் நம் உடம்பில் தூங்கிக் கொண்டிருக்கும் நரம்புகள் எல்லாம் விழித்துக் கொண்டு ‘சுர்ர்ர்..’ என்று ஒரு உணர்வு கிளம்பி எழுந்து நிற்போம் அல்லவா? அத்தகைய ஒரு உணர்வை இந்தப் பாடல் கொடுக்கும். யாருக்கு?

வெளி நாடுகளிலும், வெளி ஊர்களிலும் வேலை பார்த்து விட்டுப் பல மாதங்களோ, வருடங்களோ, கழித்து ஊருக்கு வருகிறோம். சென்னை சென்ட்ரலிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையத்திலோ வந்து இறங்குகிறோம். ஒரு Call Taxi அல்லது ஒரு Auto-வில் ஏறி உட்காருகிறோம். விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... சென்னை நகர வீதிகளில் ஆட்டோ அதிர்ந்த படி பறக்கிறது. வெளியே பார்வையை மேய விடுகிறோம்.

‘சுடிதார் போட்டு, கனகாம்பரம் தலையில் மணக்க.. TVS 50-ல் பெண்கள்’…………..

‘டீக்கடை வாசலில் தம் அடித்தவாறு பேப்பர் படிக்கும் அன்பர்கள்..............

‘தெருவையே அடைக்கப் போட்டிருக்கும் மார்கழி மாதக் கோலங்கள்..............

'கட்டம் போட்ட மடிசாரில், கையில் பூக்கூடையுடன் கோவிலுக்குச் செல்லும் மாமிகள்.......

'நெற்றியில் இட்ட விபூதியுடன் அப்பா ஸ்கூட்டர் பின்னால் உட்கார்ந்து ஸ்கூல் செல்லும் பையன்'…..

‘முன்னால் துளசி மாடம் வைத்த வீட்டின் உள்ளிருந்து 'கற்பூர நாயகியே கனக வள்ளி...."

‘அழுக்குச் சேலையில், குடிசை முன் அமர்ந்து இட்லிக் கொப்பரையின் மூடியைத் திறந்து, வெந்து விட்டதா என்று விரலால் குத்திப்பார்க்கும் ஆயா...’

'கூட்டம் பிதுங்கும் அதிகாலைப் பேருந்துகள்' ……..

‘சிகப்புக் கலரில் பட்டை பட்டையாய் கோடு போட்ட கோவில் சுவற்றின் உள்ளிருந்து 'பாதமிரண்டில் பன்மணிச்சதங்கை... காக்க காக்க......'

'ச்சே... எவ்வளவு விஷயம் மிஸ் பண்றோம்...? மனதுக்குள் சலித்தவாறு.. அதிகாலைச் சென்னையின் அழகை ரசித்தவாறு பயணிப்போம் அல்லவா?

அப்பொழுது FM-ல் இந்தப் பாடலின் முன் வரும் Strings Prelude மட்டும் ஒலித்து, இசைஞானி ‘ஏ.. தந்தன தந்தன தந்தா…’, என்று ஆரம்பித்து விட்டால், கண்டிப்பாக ஒரு ‘ஜன கன மண’ Range-க்கு Feeling வருவது தவிர்க்க முடியாத ஒன்று. இது என்னைப் போல ‘பிறக்க ஒரு ஊர்! பிழைக்க ஒரு ஊர்! தமிழ் நாட்டு மக்களின் தலையெழுத்துக்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன?” என்று பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களுக்கு மட்டுமே விளங்கும் ஒரு உணர்வு.

1st Interlude-ல் ஒலிக்கும் Violin Piece, வயலின் வாசிக்கப் பழகும் அனைவருக்கும் ஒரு அழகான Fingering Exercise.

Sharjah Cricket Ground-ல் சில வருடங்களுக்கு முன் இசைஞானி இந்தப் பாடலைப் பாடும்பொழுது (கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பானது), சரணத்தின் வரிகளை இப்படி மாற்றிப் பாடினார்.

1. இங்கிலாந்தில் மின்னும் கோஹினூரு வைரம்
அங்கிருந்து போனதில்லையா?
சாஃப்ட்வேரில் இன்று யாரு நம்பர் ஒண்ணு?
நம்ம ஊருக் காரன் இல்லையா?
மல்லிகையப் போல பிச்சிப் பூவப் போல
எந்த நாட்டுப் பூ மணக்குது?
வள்ளுவரப் போல பாரதியப் போல
எந்த நாட்டுப் பாட்டினிக்கிது?
பல நாயன்மார்கள் என்ன? அட சித்தர்களும் என்ன?
இல்லறமும் என்ன? அட நல்லறமும் என்ன?
இது போலச் சொல்ல நேரம் இல்ல! – சொர்க்கமே என்றாலும்

2. காலை எழும்போதே கோவில் மணியோச
ஞாபகம்தான் வந்து போகுது!
மாலை நேரக் காற்றில் நாதஸ்வரம் கேட்கும்
இங்கு அதற்கெங்கு போவது?
ஆற்றில் துள்ளிக் குதிச்சி ஆடும் விளையாட்டு
அப்போ அப்போ தோணுதில்லையா?
அம்மா கையில் சமையல் சின்னதான போதும்
எண்ணிப் பார்க்க இன்பம் இல்லையா?
விளையாடுகின்ற மீதி அட வெட்டிப் பேச்சு சேதி
சொன்னால் நிக்குது பாதி! இனி நெஞ்சில் உண்டு மீதி!
என் பாட்டில் சொல்ல நேரம் இல்ல! – சொர்க்கமே என்றாலும்

இந்தப் பாடல் என்ன ராகம்? வழக்கம் போல நெட்டுலாவினேன்! “சாரங்க தரங்கினி” என்று விடை கிடைத்தது. ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ (தென்றலே என்னைத் தொடு), ‘இசையில் தொடங்குதம்மா’ (ஹே ராம்) ஆகிய பாடல்களும் இதே ராகமாம். [S R2 M2 P D2 N3 S | S N3 D2 P M2 R2 S கர்னாடக இசை தெரிந்தவர்களுக்காக]

“பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?” என்று இசைஞானி பாடும் அழகு, “ஐயா! பல தேசம் முழுதும் பேசும் பல விதமான தமிழும் உன் தமிழ் போல் இனித்திடுமா?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment