Monday, June 7, 2010

பாடல் : தென்றல் வந்து தீண்டும்போது

படம் : அவதாரம்
பாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி
எழுதியவர் :
இசை : இசைஞானி

தென்றல் வந்து தீண்டும்போது
என்ன வண்ணமோ மனசில!
திங்கள் வந்து காயும்போது
என்ன வண்ணமோ நெனப்புல!
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா!
எண்ணங்களுக் கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா!
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே!

1. எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது!
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்கிது!
ஓட நீரோட இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல!
நெலையா நில்லாது நினைவில் வரும் நெறங்களே!

2. ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது!
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது!
குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அதக் கதையா பேசுதம்மா!
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்!

இந்தப் பாடலின் Orchestration-ம் Chorus Harmony-யும் முழுக்க முழுக்க ஒரு Western Classical Number கேட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு தெருக்கூத்துக் கலைஞன் பாடினால் எப்படிப் பாடுவானோ அப்படி ஒரு மண் மணத்துடன் இசைஞானி பாடியிருப்பார். உதாரணத்திற்கு அவரின் தமிழ் உச்சரிப்பை ‘குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா’ இந்த வரிகளில் கவனியுங்கள். ‘இசையா’ என்பதை ‘எசையா’ என்று பாடியிருப்பார். இதில் தான் Situation, பாடலின் தளம், பாடலைப் பாடும் Character-ன் குணாதிசயம், அவ்வளவையும் இசைஞானி ஒரு பாடலைப் பாடும் முறையில் சொல்லும் ஆற்றல் நமக்கு விளங்கும்.

இசைஞானி அவர்கள் பி.பி.சி. வானொலியின் “பாட்டொன்று கேட்டேன்” நிகழ்ச்சியில், இந்தப் பாடலைக் குறித்து, ‘எப்படி நாட்டுப்புற இசையையும், Western இசையையும் இணைக்கும் பாணி உங்களுக்கு வசமாகிறது?’ என்ற கேள்விக்கு பதில் கூறும்பொழுது,

“எல்லா இசையும் ஒண்ணுதான். அதை நாம எப்படி use பண்றோம், எந்தக் களிமண்ணை எடுத்து எதனுடன் சேர்த்து எப்படி உருவாக்குகிறோம் என்பதுதான் அதில இருக்கிற Technique. அது ஒரு ஏமாத்து வேலைதான். ஒரு ஏமாத்துறவனுக்கு, ஒரு மாங்காயை மூடி வைத்து ஒரு புறாவைப் பறக்க விடுபவனுக்குத் தான் என்ன பண்ணுகிறோம் என்பது தெரியும். நிஜம்மா மாங்காய் புறாவாக மாறப் போவது இல்லை. ஏமாறுபவன் Audience. இது ஏழு Note Combination-தான். இந்த ஏழு Note Combination-ல் இது வரை வராத Route என்ன என்ன இருக்கிறது? இன்றைக்கு இருக்கக் கூடிய சினிமா பாடல்களை, எத்தனைப் பாடல்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு Pattern-க்குள் அதைக் கொண்டு வந்து விடலாம். அப்படி Patternise பண்ண முடியாத Song இது என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஒரு பாட்டு இருக்கிறதா என்று கேட்டால், இந்த மாதிரி ஒரு பாட்டு இல்லை. இந்த ஒரே ஒரு பாட்டுத் தான். ‘தம்தன நம்தன தாளம் வரும்’ ஒரே பாட்டுத் தான். ‘அந்தி மழை பொழிகிறது’ ஒரே ஒரு பாட்டுத் தான். என்னைப் பொருத்த வரையில் அந்த ஒரே ஒரு பாட்டு மாதிரி நிற்பது தான் படைப்பு. நான் ஒவ்வொரு படத்திலும் அதை Try பண்ணுவதுண்டு. ஆனால் டைரக்டர்கள் ஓகே சொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களுக்காக நாம் கீழே இறங்கி வர வேண்டியதுள்ளது. ஒரு டைரக்டர் புதிய பாடலைக் கொடுத்து விட முடியாது. அல்லது புதிய ஓசையை, புதிய pattern of music-ஐ create பண்ணுவதற்கு ஒரு டைரக்டருக்கு knowledge இல்லை. Music Director-தான் Create பண்ணியாக வேண்டும். So ஒரு Music Director தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு ‘நீ இப்படிப் போ, அப்படிப் போ’ என்று சொல்லி ஒரு இடத்திற்குப் போய் இறங்கி விட்டு ‘நான் தான் இங்கு வந்தேன்’ என்று சொல்வதைப் போல ‘இந்த இசை என்னால் வந்தது’ என்று சொல்லக் கூடிய டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. அவர்கள் சொல்லக் கூடிய Statement இருக்கட்டும், நமக்கு படைப்பு வந்து விட்டது. இந்தப் பாடல் நாசர் கேட்டு நான் கொடுக்கவில்லை. நானாகத்தான் போட்டேன். Situation சொல்லும் பொழுது எப்படி சொல்லிவிட முடியும்? ‘ஒரு கிராமத்தான் ஒரு குருட்டுப் பெண்ணிற்கு வண்ணங்களை Explain பண்றான்’. அவ்வளவுதான் சொல்லியிருக்க முடியும். இந்த Situation எனக்குப் பாட்டைக் கொடுக்குமா? கொடுக்காது. அது எனக்குள் இருக்கும் Fire. In fact இந்த tune-ஐ நான் அவருக்கு வாசித்தே காட்ட வில்லை. அவதாரத்தில் வந்த அத்தனை பாடல்களையும் நான் அவரிடம் வாசித்தே காட்ட வில்லை. Straight-ஆக Record பண்ணிவிட்டுக் காட்டும் பொழுதுதான் ‘சார்! இப்படியெல்லாம் இருக்கா?’ என்று கேட்டார்” என்று கூறினார்.

பாடலின் ராகம் ‘சிந்து பைரவி’ [S R2 G2 M1 G2 P D1 N2 S | N2 D1 P M1 G2 R1 S N2 S]. [ஐயோ! Carnatic படிக்காமல் போய் விட்டோமே?]

ஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திருமதி. உமா ரமணன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது, “இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், பெரிய சங்கதிகள் எதுவும் இல்லாமல், Straight Notes, Gliding Notes மட்டும் இருக்கும் ஒரு ஆரவாரமில்லாத பாட்டு! But அவ்வளவு ஒரு அழகான பாடல்” என்று கூறுகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா ஒரு முறை ஒரு Interview-வில் “’தென்றல் வந்து தீண்டும் போது’ மாதிரி ஒரு பாட்டை நான் Compose பண்ணாத வரையில் நான் எதுவுமே achieve பண்ணவில்லை” என்று கூறினார்.

சமீபத்தில் Vijay TVயின் Coffee with Anu நிகழ்ச்சியில் டைரக்டர் வெங்கட் பிரபு (திரு. கங்கை அமரன் அவர்களின் மகன்), கார்த்திக் ராஜா, ப்ரேம்ஜி அமரன் ஆகியோருடன் இந்தப் பாடலைப் பாடி அதன் பின் சிலிர்த்துப் போய் இப்படிக் கூறினார். ‘இது என்னுடைய Favourite Song. Extra Ordinary Orchestration! அவ்வளவு Complicated. அதை அவ்வளவு Beautiful-ஆ.. இன்னும் கேட்டால் அப்படியே Love பண்ணணும்-னு தோணும். Beautiful Song. அப்டியே பெருமையா இருக்கு! இந்தப் பாட்டெல்லாம் எங்களுடையது!! We are all Gifted! Blessed!’ என்று கூறினார்.

வெங்கட் பிரபு மட்டும் தானா? “என் தலைவனைத் தவிர வேறு யாராலும் இந்த மாதிரி ஒரு பாட்டைக் Compose செய்து விட முடியுமா?” என்று இசைஞானி பக்தர்கள் அனைவரும் பெருமையுடன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

2 comments:

  1. கருநாடக இசை கற்றிருந்தால் ராஜா சாரின் இசையை ரசிக்கமுடியும் தான். ஆனால் கருநாடக இசை வித்யார்த்திகளே அதிசயித்துப் பார்க்கும் இசை விஞ்ஞானி அல்லவா நம் ராஜா சார்.

    ReplyDelete