Monday, July 26, 2010

கண்மணி அன்போடு

பாடல் : கண்மணி அன்போடு படம் : குணா
பாடியவர்கள் : கமல்ஹாசன்,
எழுதியவர் :
இசை : இசைஞானி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!
பொன்மணி உன் வீட்டில் செளக்யமா ?
நான் இங்கு செளக்யமே!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது!
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது!

1. உண்டான காயம் எங்கும்
தன்னாலே மாறிப் போன மாயம் என்ன
பொன்மானே? பொன்மானே!
என்ன காயம் ஆனபோதும்,
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே!
என் காதல் என்னவென்று,
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்,
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!
அதையும் தாண்டிப் புனிதமானது!

அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே!
அதுவும் உனக்குப் புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா?
உனக்குப் புரியுமா?

லால லா லாலால லாலலா…

குணாவும், தளபதியும் ஒரே தீபாவளிக்கு வெளிவந்த ஞாபகம் எனக்கு! அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். இசைஞானியின் இசையில் ‘ராக்கம்மா கையத் தட்டு’-வும் ‘கண்மணி அன்போடு’-வும் தமிழக டீக்கடைகளில் போட்டி போட்டுக் கொண்டு சக்கை போடு போட்டன!! படம் வெளிவந்த இதே வருடத்தில் தான் முதல் முறையாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நடைமேடைக்கு ஒன்றாக நான்கைந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப் பட்ட நினைவு! தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அதிகம் இல்லாத அந்த நாட்களில், பல நிமிட விளம்பரங்களுக்கு இடையே எப்பொழுதாவது இந்தப் பாடல்களைப் பேருந்து நிலைய தொலைக் காட்சிப் பெட்டிகளில் ஒளிபரப்புவார்கள்.

‘கண்மணி.. அன்போட…’ என்று குணாவின் கரகர குரல் கேட்டவுடன் பேருந்துகளுக்குக் காத்திருக்கும் அனைத்து மாணவர்களும் ஹோ..வென்ற கூக்குரலுடன் திமுதிமுவென்று ஓடிச் சென்று தொலைக்காட்சி முன் கூடிக் கண்டு களித்த நாட்கள் அவை!! ஒரு Girl Next Door சாயல் கொண்ட ‘குணா’-வின் அபிராமி ‘ரோஷினி’, இந்தப் படத்திற்குப் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை! பொதுவாக பாடல்களை Player-ல் ஒலிக்க விட்டு, ஒவ்வொரு வரியாக Pause செய்து செய்து தட்டச்சும் நான், இந்தப் பாடலை ‘கண்மணி’ துவங்கி ‘லாலலா’ வரை கேட்காமலேயே முழுவதுமாக அடித்து முடித்து விட்டேன். பல நூறு முறைக் கேட்டுக் கேட்டு, அப்படி மனதில் பதிந்து விட்டப் பாடல்களுள் ஒன்று இது.

ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் இயக்குனர் சந்தான பாரதி, பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஆகியோர் அந்தப் பாடலின் Situation-ஐ இசைஞானிக்கு விளக்க, அவர் Tune போடும் Composing Session குணா படத்தின் Audio Cassette-ல் இருக்கும் (இது இப்பொழுது கிடைக்கும் குணா Audio CD-க்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை!). அதிலிருந்து ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு முன் உள்ள உரையாடல் கீழே. இதுவரைக் கேட்டிராதவர்கள் வாசித்து (?)  மகிழ்க! .

சந்தானபாரதி: Situation என்னன்னா ஹீரோவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது! இப்போ யாருக்காவது லெட்டர் எழுதணும்னா கூட, இப்போ எனக்கு எழுதணும்னா, நான் எழுதி அவருக்கு சொல்லுவேன். அந்த மாதிரி ஒரு Character!

இசைஞானி: ம்??

சந்தானபாரதி: So அவர் என்ன பண்றார்னா.. காதலிக்கு லெட்டர் எழுதணும்னு ஆசைப்படுறாரு! So காதலிகிட்டயே சொல்லி அவ திருப்பி…

கமல்ஹாசன்: அதாவது கிராமத்தில எழுதப் படிக்கத் தெரியாதவங்க ஒரு ஆளக் கூப்பிட்டு என் மாமனுக்கு லெட்டர் எழுதணும்னு சொல்லுவாங்க! இல்ல என் காதலிக்கு லெட்டர் எழுதணும்னு சொல்லுவாங்க!

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: அத மாதிரி கதாநாயகன் ஒரு தற்குறி! காதலிக்கு லெட்டர் எழுதணும்! படிக்கத் தெரிஞ்ச பொண்ணுங்கிறது அந்த காதலி மட்டும் தான்! அவளுக்கு எழுதுற காதல் கடிதத்தை அவளை விட்டே எழுத சொல்ற மாதிரி ஒரு வித்தியாசமான பாட்டு…

இசைஞானி (ஹார்மோனியத்தில் சுருதி மீட்டுக்கொண்டே): ம்ஹும்ம்?? லெட்டர் எழுதணுமா பாட்டுல? ‘அன்புள்ள அத்தான் வணக்கம்’ மாதிரி??

எல்லோரும் சிரிக்கின்றனர். இசைஞானி தனது ஹார்மோனியத்தை இசைத்தவாறு பாடத்துவங்குகிறார்.

அன்பே அன்பே! நலம்தானா அன்பே அன்பே!
நலம்தானா அன்பே அன்பே.. தன்னே நன்னே…. ….

கமல்ஹாசன்: சிக்கலான விஷயம்.. இது நல்லா இருக்கு! இன்னொரு இது என்னன்னா இதில அன்பே, நலமா, நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா, அந்த சாயல் வராம ஒரு யதார்த்தமா..

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: ஒண்ணு ரெண்டு வார்த்த நல்ல தமிழ்ல வரலாம்! ஒரு … படிக்கத் தெரியாதவனுடைய மொழி மாதிரி இருக்கணும்..

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: இசையும் ரொம்ப அலாதியா, அற்புதமான கமகங்களோட இல்லாம, Simple-ஆ இருக்கணும்…

இசைஞானி: ம்! இப்போ ஒரு Character-க்கு ஒரு குணாதிசயம் இருக்கு இல்லையா? அவர் டயலாக் பேசுற … … …

கமல்ஹாசன் (இடைமறித்து): ஆங்.. டயலாக் பேசுற மாதிரி ஆரம்பிச்சி எப்ப பாட்டு ஆரம்பிச்சதுன்னு தெரியாம ஆரம்பிக்கணும். அதாவது நான் இப்ப குணாவா பேசும்பொழுது.. கண்மணி .. அன்போட … காதலன் நான் … எழுதும் …

இசைஞானி: ஓஹோ?

கமல்ஹாசன்: … … .. லெட்டர்! லெட்டர் வேணாம்! லெட்டர்னு சொல்லத் தெரியாது.. கடிதம்…. இல்ல அவனுக்கு எத சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறான் இல்லையா?

இசைஞானி: ம்??

கமல்ஹாசன்: … ஏன்னா அடுத்தவங்கள எழுத சொல்றது இது.. அதக் கூட ஈசியா மாத்திட்டு கடிதம்.. லெட்டர்… இருக்கட்டும்... கடிதம் போட்டுக்கலாம்..

இசைஞானி: ஒஹோ? (சற்று நேர அமைதிக்குப் பின்) நீங்க மேல ரெக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க!

கமல்ஹாசன்: ஆங்??

இசைஞானி (சிரித்தவாறு): எம் மேல நம்பிக்கை இருக்கு இல்லையா?

கமல்ஹாசன்: நம்பிக்கை இருக்கு! “விக்ரம்”-னு ஒரு பாட்டு! ‘அடுத்த நாளைக்கி வாங்க! பண்ணிக்கலாம்-னு சொன்னீங்க! பெரிய ஹிட் சாங் அது! திடீர்னு அன்னிக்கி மத்யானம் ரெக்கார்டிங்! காலைல என்ன பண்ணப் போறோம்னு தெரியாது! நாலஞ்சு பேர் தான் இருந்தாங்க ஆர்கெஸ்ட்ராவில! அதினால எனக்கு நம்பிக்கை உண்டு!

இசைஞானி: ம்??

சந்தானபாரதி: நேரா ரெக்கார்டிங் தியேட்டர்னா பாடுறதுக்கு யார சொல்லணும்?

இசைஞானி: கமல் சாரே பாடட்டும்! ஏன்னா அந்த characterization-க்கு அவரே பாடிட்டார்னா better-ஆ இருக்கும்!

கமல்ஹாசன் (சிரித்தவாறு): தெரியாத்தனமா விக்ரம் உதாரணம் சொல்லி மாட்டிகிட்டேன். (சிரிக்கிறார் .. மூவரும் சிரிக்கின்றனர்). இல்ல! நல்லா வரணும் பாட்டு! அதினால வேற யாராவது…. … … …

இசைஞானி: அதினால என்ன? இந்தப் பாட்டுக்கு நீங்க நல்லா பாடுவீங்கன்ற நம்பிக்கை எனக்கு… … … எம் மேல நீங்க எவ்வளவு நம்பிக்கை வச்சீங்க இல்ல??? …

கமல்ஹாசன் (சிரித்தவாறு): அது நான் வைக்கலாம்! நியாயமான நம்பிக்கை! என் மேல வைக்கலாமா? (மீண்டும் சிரிக்கிறார்). உங்க மேல நம்பிக்கை வச்சி என்ன நீங்க பாட வச்சீங்கன்னா பாடுறேன்.

இசைஞானி: உங்க மேல இருக்கிற நம்பிக்கைய சொல்லட்டா? Open-ஆ சொல்லட்டா?

கமல்ஹாசன்: சொல்லுங்க!

இசைஞானி: உங்க கிட்ட இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சமாசாரங்கள் எக்கச்சக்கமா இருக்குது! அதெல்லாம் பண்ணாம உங்கள நான் விட மாட்டேன் (சிரிக்கிறார்).

கமல்ஹாசன்: சரி! இவ்வளவு நம்பிக்கையா நீங்க சொல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமா நான்.. … …

இசைஞானி: ஒரு Song.. நீங்க பாடினீங்க பாத்தீங்களா? என்னுடைய மியூசிக்-ல? கவிதாலயா படத்தில? அந்த அளவுக்கு பாலு கூட பாடல!

கமல்ஹாசன் (சிரித்தவாறு): ஐயைய்யோ!

இசைஞானி: அது பாட முடியாது! மத்த Song அவர் பாடலாம்! But Particularly அந்த Song-அ அந்த voice dimension-ஓட பாட முடியாதுங்கிறது என்னுடைய கருத்து! (இதில் எந்த பாடலை இசைஞானி குறிப்பிட்டார் என்று தெரியவில்லை! ‘சிங்காரவேலன்’ படத்தின் ‘போட்டு வைத்தக் காதல் திட்டம்’ பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்) நீங்க ஒரு சகலகலா வல்லவர் என்பது என்னுடைய கருத்து! உங்கள நேரா புகழ்ந்து ….

கமல்ஹாசன் (சிரித்தவாறு): … … … ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல..

இசைஞானி (சிரித்தவாறு): ஆங்!! … … … ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல..இருந்தாலும் உங்களப் பத்திய அபிப்ராயத்த சொல்ல வேண்டிய கடமை இருக்கு எனக்கு! அதினால பயப்படாம நீங்க வர்றீங்க!

இதன் பின்னர் ‘கண்மணி அன்போடு’ பாடல் துவங்கும்! பொதுவாக Prelude - பல்லவி - 1st Interlude – முதல் சரணம் – பல்லவி - 2nd Interlude – இரண்டாவது சரணம் – பல்லவி என்ற Format-ஐ உடைத்து, பத்மஸ்ரீ கமல்ஹாசன் கேட்ட விஷயங்களை மட்டுமே உள்ளடக்கி இந்தப் பாடலை அற்புதமாக உருவாக்கி இருப்பார் இசைஞானி. ‘நான் எழுதும் கடிதமே..’ வரி முடிந்து ‘பொன்மணி உன் வீட்டில்…’ வரி துவங்கும் முன்னால் 2 Bar-க்கு ஒரு சின்ன gap ஒன்று இருக்கும். பொதுவாக இப்படி கிடைக்கும் Gap-களில் Violin-களை இழைத்து அழகு சேர்க்கும் இசைஞானி, இந்த இடத்தில் Guitar-ஐக் குழைத்து மெருகேற்றியிருப்பார். இந்த Guitar, ‘கண்மணி துவங்கி ‘வார்த்தை முட்டுது’ வரை பல்லவி முழுவதும் பின்னாலேயே Bass Guitar Styleல் ஓடி வருவது Exquisite! இது Bass Guitar-தானா அல்லது வேறு ஏதும் Guitar ஒலியா என்று தெரியவில்லை! Violin Orchestration இல்லாமல் இசைஞானி Melody-யா? சரணத்தில் ‘உண்டான காயம் எங்கும்’ துவங்கி ‘தாங்காது செந்தேனே’ வரையில் பாடலின் பின்னால் இசைஞானி முடைந்திருக்கும் Violin Orchestration, செவிகளில் சுகமான முத்தங்களைத் தந்து, மறுபடியும் ‘மனிதர் உணர்ந்து கொள்ள’ துவங்கி சரணம் முடியும் மட்டும் இதயத்தை வருடிச் செல்கிறது. நன்றாகக் கவனித்தால் கலைஞானி பாடும் ‘அபிராமியே தாலாட்டும்….’ பல்லவியில், அபாரமான அலுக்கல்களோ, சங்கதிகளோ இல்லாமல், ரொம்ப வெள்ளந்தியான, Plain-ஆன, அபிராமியைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஒரு innocence, அவரது குரலில் தெரியும். பாடலின் ‘லாலலா’ Climax-லும் கூட இதே அப்பாவித்தனம் நிறைந்த ஒரு குரலில் அவர் பாடியிருப்பார்.

‘D Major’ Scale-ல் ரொம்ப Simple-ஆன Chords progression!! ஏதேனும் Advanced Chords-களை இசைஞானி பாடலில் வேறு எங்கேனும் பயன்படுத்தி இருப்பது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்! பாடலின் ராகம் சங்கராபரணம் [S R2 G3 M1 P D2 N3 S | S N3 D2 P M1 G3 R2 S] (The Raga with Western Flavour) என்கிறது ஒரு தளம்.

பாடல் வெளிவந்து ஏறக்குறைய 20 வருடங்கள் கடந்து விட்ட போதும், இப்பொழுது கேட்டாலும் செவிகளுக்கு Fresh ஆக இருக்கிறது! இசைஞானி ஒரு Inexhaustible Composer என்று அறியப்படுவதில் வியப்பொன்றுமில்லை!

2 comments:

  1. Thanks for remembering the golden days of Maestro Ilayaraja. Those are the times we daily bath and swim with IR songs. Now, it is really unfortunate to hear music with others. The people who had changed the trend had falled victim ,,, that is true

    ReplyDelete