Tuesday, August 17, 2010

இளமை என்னும் பூங்காற்று

பாடல் : இளமை என்னும் பூங்காற்று

படம் : பகலில் ஓர் இரவு
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இசைஞானி

இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்,
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை

தனிமைச் சூழ்நிலையில், ஒரு இளம்பெண்ணும், வாலிபனும், உணர்ச்சி வசப்பட்டு, உருகும் (?) சூழலில் ஒலிக்கும் பாடல். Guitar, Violin, Flute ஆகியவற்றின் அற்புதக் கலவையில் இசைஞானி உருவாக்கிய அழகு Melody! இந்தப் பாடலின் Orchestration மற்றும் Chorus-க்காகவே, இதை இசைக்காத மெல்லிசைக் குழுக்களே இல்லை என்று சொல்லலாம்.

பல்லவியின் முதல் வரியில் ‘பூங்காற்றில்’ இணையும் Chorus சஞ்சாரம், பல்லவி முடியும் தருவாயில் ‘சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்’ என்று எஸ்.பி.பி. கீழிறங்கி வரும் பகுதியில், ‘ஆ..ஆ…ஆ..’ என்று மேலேறிப் போகும் உழற்சி, செவிகளுக்குப் போதை! முதல் Interlude-ன் பிற்பகுதியில் பாடலுடன் வரும் Drums ஒலி தேய்ந்த பின் உதிக்கும் மெல்லிய Tabla, இசைஞானியின் செப்படிவித்தை! இந்த இடத்தில் புல்லாங்குழலின் வினாக்களுக்கு Chorus குரல்கள் பதில் சொல்கின்றனவா அல்லது Vice-Versa-வா என்று பட்டிமன்றமே நடத்தலாம். இரண்டாவது Interlude-ல் Rhythm Section-க்கு இசைஞானி Short Leave கொடுத்து அனுப்பி வைத்து விட்டு, Guitarist-க்கு Overtime கொடுத்து வேலை வாங்கி இருக்கிறார். மூன்றாவது Interlude-ல் மாறும் Rhythm Pattern… ஒரே பாடலின் இடையிசையில் எவ்வளவு Variation, Variety?? சரணத்தில், ‘தேக சுகத்தில் கவனம்’, ‘காட்டு வழியில் பயணம்’ ஆகிய பதங்களின் பின்னணியில் இசைஞானி வரைந்திருக்கும் கோரஸ் குரலோவியம், கேட்கக் கேட்கத் திகட்டாத் தாலாட்டு! மொத்தத்தில் பாடலின் நளினத்தைக் கெடுக்காமல் Chorus எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் இந்தப் பாடல்!

“மங்கை இனமும், மன்னன் இனமும், குலம் குணமும் என்ன?, தேகம் துடித்தால் கண்ணேது?” ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் இச்சித்து விட்டால் அவர்களின் மோகத்தை உலகில் எதுவும் தடை செய்து விட முடியாது என்ற செய்தியை கவியரசர் அழகாக வார்த்தைகளில் வடித்திருப்பார். இசைஞானி இந்தப் பாடலைப் போல வெகு அபூர்வமாக பாடல்களில் மூன்று சரணங்கள் அமைத்து அழகு செய்வார். மூன்று சரணங்கள் என்பதால், முதல் இரண்டு சரணங்கள் முடிந்து பல்லவி முழுவதுமாக பாடப்படாமல், ‘இளமை எனும் பூங்காற்று…. என்று முடிந்து விடுகிறது (இதுதான் துண்டு பல்லவி எனப்படுவதோ?). மூன்றாவது சரணம் முடிந்து பல்லவி முழுமையாகப் பாடப்படும்பொழுது மீண்டும் Chorus தேவதைகளின் குளிர்ச்சியான Lullaby-யுடன் பாடலின் நிறைவு, அற்புதம்!

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, கல்லூரி ஆண்டு விழாவிற்கு இசைக்குழுவில் இந்தப் பாடலை இசைத்தோம் (Scale C Sharp Minor). நாங்கள் decipher செய்த அளவிற்குப், பாடலுக்கான Chords Progression-ஐக் கீழ்க்காண்க:-

/இளமை எனும் /C#m பூங்காற்று, /E பாடியது /F# ஓர் பாட்டு
/E ஒரு பொழுது /F# ஓர் ஆசை,
/E சுகம் சு/G#7 கம் அதி/ C#m லே ஒரே சுகம் !
ஒரே வீ/ G# ணை ஒரே ரா/ C# கம்…

1. / தன்னை மறந் /C#m து மண்ணில் விழுந்து,
இளமை மல/G# ரின் மீது,
/E கண்ணை இழந் /Bத / C#mவண்டு,
/தேக சுகத் /G#தில் கவனம்,
/ C#m காட்டு வழி/Aயில் பயணம்,
/A கங்கை நதிக்/F# mகு /F#மண்ணில் அணை/B யா? / C#m (Break)

‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இந்தப் பாடல் பிறந்த கதை குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“இளமை என்னும் பூங்காற்று” பாடலுக்கான Composing பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலை எழுதினார்.

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். கவியரசர் – எம்.எஸ்.வி. இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

முதல் அடி தொடங்க அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும். உதாரணமாக,

‘எட்டடுக்கு மாளிகையில்,
ஏற்றி வைத்த என் தலைவன்,
விட்டு விட்டுச் சென்றானடி,
வேறுபட்டு நின்றானடி’.

‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல,
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல’

[முதல் வரியின் ராகத்தில் இரண்டாவது வரியையும், இரண்டாம் வரியின் ராகத்தில் முதல் வரியையும் பாடிப் பாருங்கள். அட்சரம் பிசகாமல் அழகாகப் பொருந்தும்! இசைஞானி குறிப்பிட்ட ‘லட்சண அமைப்பு!!]. இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும். இதை நான் மாற்ற எண்ணினேன். ஒரு அடி போல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், ‘இங்கே தான் நிறுத்த வேண்டும், இங்கே நீட்ட வேண்டும்’ என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டும்’ என்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

“இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்”

இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது” என்று குறிப்பிடுகிறார்.

நல்ல ஒரு Audio System அல்லது FM-ல் கேட்க வேண்டிய பாடல். தொலைக்காட்சியில் தப்பித்தவறி இந்தப் பாடல் ஒளிபரப்படும்பொழுது வீட்டில் குழந்தைகள் இருந்தால் Channel மாற்றிவிடுவது உத்தமம்!

பாடலின் ராகம் ‘கர்ணரஞ்சனி’-யாம் [S R2 G2 M1 G2 D2 S / S N2 D2 P M1 G2 R2 S]. இது கர்னாடக இசை தெரிந்தவர்களுக்கு! தவறாயிருப்பின் மன்னிக்க!

காதலர்கள் கட்டிக் கொண்டால், கொஞ்சினால், சந்தித்தால், பிரிந்தால், ஊடல் கொண்டால், கூடினால், மெளனித்தால், மரித்தால், … எந்த மாதிரி Situation கொடுத்தாலும், இசைஞானியின் ஆர்மோனியத்தில் இருந்து வற்றா நதி போல், ராகங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. அது சரி! அவரின் உள்ளிருந்து வரும் இசையென்னும் ‘கங்கை நதிக்கு, மண்ணில் அணையா?’

Monday, August 9, 2010

அம்மா ஆகாயம் விட்டு

http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo

பாடல் : அம்மா ஆகாயம் விட்டு
பேழை : The Real Salute
பாடியவர்கள் : இசைஞானி
எழுதியவர் : இசைஞானி
இசை : இசைஞானி

அம்மா ஆகாயம் விட்டு,
மண்ணில் வந்ததேனோ?
மண்ணில் வந்ததேனோ?

அந்தோ! என் அன்னை தேகம்,
காயம் கொண்டதேனோ?
காயம் கொண்டதேனோ?

யார் துளைத்தது உன் நெஞ்சம் தன்னையே?
காண்பதற்கு ஓர் நாதியில்லையே?

அம்மா ஆகாயம் விட்டு,
மண்ணில் வந்ததேனோ?
மண்ணில் வந்ததேனோ?

1. வெஞ்சிறையில் வெந்ததெல்லாம்,
துன்பமென்று சொல்லுவதா?
முன்பிருக்கும் இந்த நிலை
இன்பம் என்று கொள்ளுவதா?
உன் கொடியைத் தூக்கி வந்தால்,
உயிர் பறிப்பார் ஓடியபின்,
கண்கள் தனைக் கந்தல் என்று,
காணும் ஒரு துன்பமும் ஏன்?
அடடா! அனாதையைப் போல் அன்னை மண்ணிலே,
கிடந்தால் உன் பிள்ளை நெஞ்சம்
பற்றியெரியாதோ? - அம்மா

2. உயிருடனே நடை பிணமாய்,
வாழ்ந்திருந்து பழகியதால்,
கொல்லும் உந்தன் கோலம் கண்டும்
உயிர் பிரியாதாடுதம்மா!
நேற்று அமாவாசைதனில்,
விடியல் வரும் என்றிருந்தோம்!
நாளும் அமாவாசைகளே
ஞாயிறையும் மூடிடவோ?
அம்மா உன் பாரம் தன்னை கீழே இறக்குவேன்!
நெஞ்சில் நீரோடும் உன்னை
வானில் ஏற்றி வைப்பேன்! - அம்மா

ஒரு சில வருடங்களுக்கு முன் இசைஞானி இசையில் வெளிவந்த இந்தப் பாடல் அதிகம் கவனிக்கப் படாமல் போயிற்று. தொலைக்காட்சியிலும் கூட ஒரு சில முறை மட்டுமே ஒளிபரப்பப்பட்ட ஞாபகம்! [பாடலைப் பார்க்க http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo என்ற தளம் செல்க! 3:48-ல் இசைஞானியின் முன்னுரையுடன் பாடல் துவங்குகிறது]. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இந்தப் பாடலில் கிரண் பேடி ஐ.பி.எஸ். நடித்திருக்கிறார். அலாதியான Orchestration இல்லை! வியப்பூட்டும் இடையிசையும் இல்லை! இந்தப் பாடலின் உள் எட்டிப்பார்க்க வழி செய்யும் ஒற்றைச் சாளரம், உயிரை அறுக்கும் இசைஞானியின் குரல் மட்டுமே! சுதந்திர தினத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் இந்தச் சூழலில், இந்தப் பாடலை இதுவரைப் பார்த்திராத இசைஞானி பக்தர்களுக்காகப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! வந்தே மாதரம்!

Monday, August 2, 2010

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

பாடல் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்

படம் : கவிக்குயில்
பாடியவர்கள் : பால முரளி கிருஷ்ணா
எழுதியவர் :
இசை : இசைஞானி

சின்னக் கண்ணன் அழைக்கிறான் (2)
ராதையை பூங்கோதையை,
அவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,
சின்னக் கண்ணன் அழைக்கிறான் (2)
ராதையை பூங்கோதையை,
அவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

1. கண்கள் சொல்கின்ற கவிதை,
இளம் வயதில் எத்தனை கோடி? (2)
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே!
புதுமை மலரும் இனிமை,
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை! – சின்ன

2. நெஞ்சில் உள்ளாடும் ராகம்,
இதுதானா கண்மணி ராதா? (2)
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகில் இளமை ரதமே,
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்! - சின்ன

‘கண்ணன்-ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம்!! இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க!!

தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.

நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே?”

ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

‘என்ன டியூன்’? என்றார்.

பாடிக் காட்டினேன்.

ஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.

பாடலைப் பாடியவர், ‘இதுதான் புதிது! சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே? அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே!’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது!’ என்கிறார்.

சமீபத்தில் ஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை! என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே?’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம். அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான்! அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது. “உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள். ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.

இசைஞானியின் ‘அன்றும் இன்றும் என்றும்’ Concert-ல் இந்தப் பாடலைப் பாடகர் கார்த்திக்கும், யுவன் ஷங்கர் ராஜாவும் பாடி முடிக்க, இசைஞானி யுவனைப் பார்த்து ‘யுவன் என்ன இந்த மாதிரி பாடிட்ட? உன்னுடைய பாட்டு மாதிரி பாட வேண்டியது தானே?’ என்று சொல்லி மூச்சைப் பிடித்துக் கொண்டு, அடிவயிற்றில் இருந்து, தலையை ஆட்டிக் கொண்டே ‘ச்சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று பாடிக்காட்டியது, தற்கால இசையைப் பார்த்த அவரின் கேலிப் (?) புன்முறுவல்! இந்தக் காட்சியைப் பார்க்க http://www.youtube.com/watch?v=oQ1hhq4aS18 தளம் சென்று 1:45-ல் கவனிக்க!!

ரீதிகெளளையைத் தேடி வலையுலா வந்தபொழுது \SG2R2G2M1N2D2M1N2N2S
\ SN2D2M1G2M1PM1G2R2S என்று தகவலுடன், “Tough to dilute ராகம்” ரீதிகெளளை, என்ற பொடி சங்கதியும் தெரிந்தது! இதே ராகத்தில் அமைந்த இசைஞானியின் மற்றொரு பாடல் ‘தலையைக் குனியும் தாமரையே’ (படம்: ஒரு ஓடை நதியாகிறது). எவ்வளவு tough ஆன ராகமாக இருந்தாலும், இசைஞானியின் ஆர்மோனியத்தில் நுழைந்து வெளிவந்தால், ‘அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்’ என்ற வரிகளுக்கேற்ப கேட்பவர்களை மயக்கி, புலன்களைப் பரவசப்படுத்தத்தானே செய்யும்?