Thursday, November 15, 2012

இசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997



     90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியின் ஒரு சில பத்திகளை Sathiya Keerthi  என்ற அன்பர் ஒருவர் தங்கிலீஷில் தட்டச்சு செய்து வெளியிட்டிருந்தார்.  முழு பேட்டியும் இணையத்தில் எங்கு தேடியும், தெரிந்த இசைஞானி ரசிகர்களிடம் கேட்டுப்பார்த்தும் கிடைக்காத நிலையில் தேடலை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டிருந்தேன். கடந்த மாதம், ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஒலிப்பேழை வெளியீட்டுவிழாவிற்குச் சேர்ந்து செல்லலாம் என்று நண்பர் ரவிசங்கரானந்த் அவர்களை இல்லத்திற்கு அழைக்க, தனது Hard disk’உடன் வீட்டிற்கு வந்தவர், நண்பர் அலெக்ஸ் தனது கணினியில் சேகரித்து வைத்திருந்த இசைஞானியின் புகைப்படங்கள், பேட்டிகள், பதிவுகள் அடங்கிய Folder ஒன்றை பெரியமனது பண்ணி, என் கணினியில் கொட்டிவிட்டுச்சென்றார்.

கிட்டத்தட்ட 1GB எடையுள்ள அந்த Folder’ன் உள்ளே, ‘Articles Collections, Raja’s Images, Rare Audio about Raja Sir’ என்று ஏகப்பட்ட Subfolder’கள். பொறுமையாக ஒவ்வொன்றையும் துழாவியதில் சிக்கியது 17.8.1997ல் வெளிவந்த இசைஞானியின் ‘கல்கி பேட்டி’. 

வழக்கமான பேட்டிகள் போல இல்லாமல், இசைஞானி பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே ஏகப்பட்ட குறுக்குக்கேள்விகள்… அத்தனை கணைகளையும் தனக்கேயுரிய பாணியில் ராகதேவன் ஸ்டைலாக சிக்ஸருக்குத் தூக்கியிருந்தது படிக்கப் படு சுவாரஸியம்..! முழுதாய் ஒன்பது பக்கங்களுக்கு நீளும் அந்த உரையாடலை இதுவரை வாசித்திராத இசைஞானி ரசிகர்களுடன் கண்டிப்பாய்ப் பகிரவேண்டும் எனத்தோன்றியதால், அப்படியே தட்டச்சு செய்து.. உங்கள் பார்வைக்காய்…!!

சை மட்டும்தான் இளையராஜாவின் மொழி என்பதில்லை.  அவர் கேமரா மூலமும் பேசுகிறார். ஆம். அவர் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.  அவர் பத்திரிகையாளர்களிடம் அதிகம் பேசுவதில்லை என்கிற எண்ணம் பொய்யாகும்படி நம்மிடம் சுமார் இரண்டரை மணி நேரம் பேசினார்.  தாம் எடுத்த புகைப்படங்களைக் காட்டினார்.  தமக்குப் பிடித்த பாடல்களையும் நம்மிடம் பாடிக்காட்டினார்…

கல்கி: ‘தேவதை’ படம் பார்த்தோம்.  ரீ-ரெக்கார்டிங்கிலேயே அப்படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறீர்கள்.  Fantasy விஷயங்கள் என்றாலே நீங்கள் நாலு கால் பாய்ச்சலில் பாய்கிறீர்கள்.. குறிப்பாக fantasyயின் மேல் உங்களுக்கு ஒருவித லயிப்பு வருவதற்கு என்ன காரணம்?

         Fantasy தவிர மற்ற விஷயங்களில் நான் நாலு காலில் பாயவில்லை என்கிறீர்களா?

கல்கி: அப்படிச் சொல்லவில்லை.  Fantasy மேல் உங்களுக்கு ஒரு தனி லயிப்பு இருப்பதாக உணர்கிறோம்.

         நீங்கள் வியக்கிற அளவுக்கு அதில் ஒரு வியப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இந்தப் பதில் உங்களுக்கு ஒரு மனநிறைவை அளிக்காது என்பது எனக்குத் தெரியும் (சிரிப்பு).  உண்மையைச் சொல்லப்போனால் ஒரே படத்துக்கு ஆயிரம் விதமாக இசையமைக்கலாம்.  நான் இப்போது செய்திருக்கிற படத்தில்தான் நாலுகால் பாய்ச்சலில் செய்திருக்கிறேன்.  மற்ற படங்களில் மூன்று கால் பாய்ச்சலில்தான் செய்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்வது உங்கள் மனக்கற்பனையே தவிர, வேறில்லை.  என்ன முடியும் என்ன முடியாது என்பதற்கு Sky is the limit to create something.. இசை என்பது வானம் மாதிரி ஒரு விரிந்த விஷயம்.  எந்த ஸ்வரத்தை – எந்த வாத்தியத்தை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் கையாளலாம்.

கல்கி: அப்படியானால் நாங்கள் உபயோகப்படுத்திய ”நாலு கால் பாய்ச்சல்” என்பதை எந்தப்படத்தில் நீங்கள் கையாண்டிருப்பதாக நீங்கள் சொல்வீர்கள்?

        இதுவரைக்கும் நான் அப்படியெல்லாம் பாயவில்லை.  இதுவரைக்கும் நான் செய்திருப்பதெல்லாம் வெறும் அப்பளமும் ஊறுகாயும்தான்.

கல்கி: நீங்கள் அறுசுவை உணவையே பரிமாறுகிறீர்கள் என்றுதான் நாங்கள் உணர்கிறோம்.

         வெறும் அப்பளம் ஊறுகாய்க்கே இப்படிச்சொல்கிறீர்கள் என்றால் நான் அறுசுவை உணவை நிஜமாகவே பரிமாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள் (சிரிப்பு).  அப்படியெல்லாம் பரிமாறுகிற சந்தர்ப்பம் எனக்கு இன்னும் வரவில்லை.

கல்கி: என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?

         சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப்போன விஷயம்.  இதற்குத்தான் மக்கள் தலையாட்டுவார்கள்.  என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால்தானே நான் அதில் ஏதாவது போட முடியும்? நீங்கள் கொண்டுவருகிறபோதே எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டு வருகிறீர்கள்.  அதற்கு மேலும் அதில் நான் எதைப்போட முடியும்? எல்லா சினிமாவிலும் லவ் சாங் வருகிறது.  கிண்டல் பண்ணுகிற பாடலும் வருகிறது.  இதில் யார் என்ன புதுமை செய்துவிட முடியுமென்று கருதுகிறீர்கள்?

கல்கி: அப்படி ஒரு ஆதர்சமாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கிறதா?

         சினிமா என்பது ஒரு வரையறைக்குட்பட்டதுதான்.  இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடுகிற ஒரு விஷயம்.  அதில் வருகிற ஒரு மூன்று நிமிஷப் பாடலில் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துக் கட்டிப்போடவேண்டுமானால்,  அதற்கான கதையோட்டமும் காட்சியமைப்பும் அந்தப் படத்தில் இருக்கவேண்டும் அல்லவா?

கல்கி: இதுமாதிரியான வரையறைகள் சினிமாவில் எப்போதும் இருக்கும்தானே?

    இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் உங்கள் மனத்தை இழுத்திருக்கிறேனல்லவா?  எத்தனையோ ஆன்மீகவாதிகள் சொல்லியும் கட்டுப்படாத உங்கள் மனது அந்த மூன்று நிமிஷ நேரம் கட்டுப்பட்டிருக்கிறதல்லவா?

கல்கி: அதை இன்னும் பூரணமாகச் செய்யவேண்டும் அல்லவா?

         அதற்கான சாத்தியக்கூறுகள் சரியாக அமையவேண்டும்.  அப்போதுதான் செய்யமுடியும்.  நான் எது போடவேண்டுமென்றாலும் ஒரு பாத்திரத்தில்தான் போடவேண்டியிருக்கிறது.  நான் போடுகின்ற எதுவும் அந்தந்தப் பாத்திரத்தின் வடிவைத்தான் எடுத்துக்கொள்கின்றன.  தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ, அந்தப் பாத்திரத்தின் வடிவையே தானும் எடுத்துக்கொள்கிற மாதிரி… ஊற்றுவது தண்ணீரோ, பாலோ, அமுதமோ.. அதை வாங்கியவனுக்கு அது உடலில் சேரவேண்டும்.

கல்கி: இத்தனை கட்டுப்பாடுகளை மீறி, எது செய்தாலும் அழகாகச் செய்யவேண்டும் என்று தேடித்தேடிக் கொடுக்கிற முத்துக்களையே உங்கள் பாடல்களில் பார்க்க முடிகிறது… அனுபவிக்க முடிகிறது.  ஆனால் சினிமா என்பது எல்லா நேரங்களிலும் அழகாக இருப்பதில்லை.  சில நேரங்களில் கொடுமையாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது.  அழகையே தேடிக்கொண்டிருக்கிற உங்களால் எப்படி இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மனச்சாந்தியோடு செயல்பட முடிகிறது?

         படத்தில் முரடர்கள் வந்தாலும், வன்முறைக்காட்சிகள் வந்தாலும் நான் சப்தஸ்வரங்களோடு மட்டும்தானே பேசிக்கொண்டிருக்கிறேன்?  அவர்களோடு நான் பேசுவதில்லையே..!  அதனால் மனதில் எந்தவிதமான வேறுபாடுகளோ, அழுத்தமோ இல்லை.  எப்போதும் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கிற நதியின் ஓட்டம்தான் என்னில் இருக்கிறது.

கல்கி: அதாவது ஓரளவு விலகியிருந்து செய்வதாகத்தான் சொல்கிறீர்கள்..?

         அப்படியில்லை.  படத்துக்கு என்ன தேவையோ அதை செய்துவிட்டுப்போவதுதானே புத்திசாலித்தனம்?

கல்கி: ஒருவகையில் நீங்கள் தத்துவார்த்தமாக விலகியிருக்கிறீர்கள் இல்லையா?

         அப்படியில்லை.  படத்தின் இறுதியில் படத்தில் என்ன மிஸ் ஆகிறது.. எதைச் சரிபண்ணவேண்டும் என்பது உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும்.  விலகியிருந்தால் ஈடுபாடு எப்படி வரும்?  ஈடுபாடில்லாமல் செய்யும் எந்தக் கலையும் பார்க்கிறவர்களையோ, கேட்கிறவர்களையோ ஈர்க்காது உயிரற்ற உடல்போலாகிவிடும்.  அப்படி ஒரு படைப்பு நமக்குத் தேவையா?  விலகியிருந்தால் வேலை நடக்காது.  ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.  ஆனால் அது பெரிய விஷயமில்லை.  வாழ்க்கை ரொம்ப முக்கியம்.  படைப்பும் ரொம்ப முக்கியம்.  மனதுக்குப் பிடிக்கிறது.. பிடிக்கவில்லை; நன்றாயிருக்கிறது.. நன்றாயில்லை… அது அதுக்கப்புறம்.

கல்கி: எந்தப் படத்திலாவது உங்களுக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது என்று சொல்ல முடியுமா?

         ஆரம்ப காலங்களில் எத்தனை எத்தனையோ..

கல்கி: இப்போது?

         இப்போது பழகிப்போய்விட்டது (சிரிப்பு).

கல்கி: ஏமாற்றம் பழகிப்போய்விட்டதா அல்லது ஏமாற்றம் இல்லாமல் செய்வது பழகிப்போய்விட்டதா?

         ஏமாற்றம் பழகிப்போய்விட்டது (சிரிப்பு)

கல்கி: சினிமா என்கிற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு – உங்கள் சொந்த ஆத்ம திருப்திக்கேற்ப ‘சிம்பொனி’ பண்ணுகிற வாய்ப்பு கிடைத்ததே?

         ஆத்மாவுக்குத் திருப்தி என்பது தேவையில்லை.  திருப்தி அதிருப்திக்கெல்லாம் அப்பாற்பட்டது ஆத்மா.

கல்கி: ரொம்பவும் தத்துவார்த்தமாகப் போகவேண்டாம்.  உங்களுக்கு நிறைவானது என்று வைத்துக்கொள்ளலாம்.

         அதுதான் உயர்ந்த இசை என்பதில்லை.  மட்டமானது, உயர்ந்தது என்று மனிதர்களுக்குண்டான குணாதிசயங்கள் இசைக்குக் கிடையாது.  இசை என்பதே ஒரு மென்மையான் உணர்வு.  அந்த உணர்வை இங்கு கொடுக்கமுடியவில்லையே என்பதில் எனக்கு வருத்தம் இல்லை.  இங்கு அதன் அளவு நிர்ணயிக்கப்பட்டது  என்ன செய்தாலும் அதற்குள்தான்.  இங்கு வருகிற லவ் டூயட்டில் நாற்பது பேர் கூட வருகிறார்கள்.  டூயட் முடிந்ததும் அவர்கள் போய்விடுகிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்; எங்கே போனார்கள் என்பதே தெரிவதில்லை.  கதை நாயகன் க்ளைமாக்ஸில் மாட்டிக்கொண்டிருக்கிற நேரத்தில் அந்த நாற்பதுபேரும் வந்து காப்பாற்றுவதில்லை.  பாடலுக்கு மாத்திரமே அவர்கள் வந்துவிட்டுப்போகிறபோது, அதில் என்ன வெரைட்டி கொடுக்க முடியும்? என்ன புதுமை செய்துவிடமுடியும்? இங்கே ஒரு சிந்தனையாளன் தேவையில்லை.  மெக்கானிக்கல் ரீ-ப்ரொடக்‌ஷன் செய்கிற ஒரு ஆள் போதும்.  இதெல்லாம் தவறு என்றும் நான் சொல்லவில்லை.  தங்கள் சொந்தக் கவலைகளை மறப்பதற்காகத் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களிடம் மேலும் அவர்கள் கவலைப்படுகிற மாதிரியான விஷயங்களைச் சொல்வதைவிட இப்படி கையைக் காலை ஆட்டி டூயட் பாடுவது நல்லதுதானே! (சிரிப்பு).

கல்கி: சினிமாவில் இருந்து இப்படி விலகி நின்று பேசும் உங்களால் எப்படி இதிலேயே தொடர்ந்து இருக்க முடிகிறது?

         வேலை செய்கிறபோது என் கவனமெல்லாம் வேலையில்தானே இருக்கும்?  இதிலெல்லாம் கவனம் இருக்க முடியுமா என்ன? அதெப்படி நான் விலகியிருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்?

கல்கி: உங்கள் இசை சம்பந்தமாகச் சொல்லவில்லை.  சினிமா பற்றி இப்படி நுணுக்கமான ஒரு பார்வையை வைத்துக்கொண்டு..

         ஆரம்பத்தில் இருந்தே எனது பார்வை இப்படித்தான்.  என்னுடைய வேலையில்தான் நான் கண்ணும் கருத்துமாக இருந்துகொண்டிருக்கிறேன்.  ஏனெனில் தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் கிடைக்க வேண்டும் என்கிற நிலை.  அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒரு நம்பிக்கையோடு செய்கிறபோது, நான் அந்த நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது.  அவர்கள் நம்பிக்கைபோலவே படம் சிறப்பாக வரலாமே. யார் கண்டது?  ஆனால் அதற்கும் எனது பார்வைக்கும் சம்பந்தமில்லை. வெளிநாடுகளிலெல்லாம் ஒரு சிறு உணர்வை மையமாக வைத்துக்கூட எவ்வளவு அழகாகச் செய்கிறார்கள். மலையாளப் படங்களில் கூட சிறப்பாகச் செய்கிறார்கள். நான் இசையமைக்காத சில மலையாளப் படங்களைக்கூட அண்மையில் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது.  நன்றாகச் செய்கிறார்கள். அங்கேயும் நமது படங்கள் போல பாடல் காட்சிகளும் வரத்தான் செய்கின்றன.  ஆனாலும் இதையெல்லாம் மீறி கதையும் கதையோட்டமும் கதையமைப்பும் பாத்திரத் தன்மையும் கெடாமல் நன்றாகச் செய்கிறார்கள்.

கல்கி: கலையம்சம் இருக்கிறது… ..

         அந்தக் கலையம்சம் இயல்பாக இருக்கவேண்டும் என்பது ரொம்பவும் முக்கியம்.  படத்தில் வருகிற ஒவ்வொரு கேரக்டரும் அந்தந்தக் கேரக்டர்களுக்கான செயல்களைத்தான் செய்யவேண்டுமே தவிர, நம்முடைய புத்திசாலித்தனம் அந்தக் கேரக்டர்களில் வெளிப்பட்டுவிடக்கூடாது. அப்படி வெளிப்பட்டால், அது அந்தக் கேரக்டர் செய்கிற மாதிரி இருக்காது.  நான் அவனுடைய உடம்பில் ஆவியாகப் புகுந்து கொண்டு செய்வதுபோல்தான் இருக்கும். கலையம்சம் என்பது வேண்டுமென்றே செய்வதுதான் என்றாலும் கூட அதுவும் இயல்பாக இருக்கவேண்டும்.  ஆறு அழகாகத் தெரிவதற்குக் காரணம் அது இயல்பாகச் செல்வதால்தான்.

கல்கி: இசை என்பது மென்மையான உணர்வு என்று சொன்னீர்கள்.  ஆனால் மென்மையான உணர்வுகள் இல்லாத படங்களிலும் எப்படி உங்களால் இசை மென்மையானது என்று வேலை செய்ய முடிகிறது? உதாரணத்திற்கு ஒன்று.. ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பாடலுக்கும், ’நேத்து ராத்திரி யம்மா’ பாடலுக்கும் உணர்வுபூர்வமாக நிறைய வித்தியாசம் இருக்கிறதே?

         இசை மென்மையான உணர்வுதான். படங்கள் அதை வெளிப்படுத்தினாலும், இல்லாதுபோனாலும் இசை மென்மையான உணர்வுதான்.  ஆனால் அதன் அழுத்தம் எதற்கும் இருக்காது. ‘அம்மா என்றழைக்காத’ பாடவேண்டிய சூழ்நிலையில் ‘நேத்து ராத்திரி யம்மா’வைப் பாடவில்லையே..! (சிரிப்பு)

கல்கி: இரண்டு பாடல்களும் இருவேறு உணர்வைத் தூண்டுகிறவை. அப்போது உங்கள் மனோநிலை எப்படியிருக்கும்?

         எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆசாபாசங்கள் உண்டு.  என்னை மாத்திரம் துறவியாகக் கற்பனைபண்ணிக்கொண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று கருதுகிறேன்.  நகைச்சுவை உணர்வு, பாலுணர்வு என்று எல்லாமே எனக்குள்ளும் உண்டு.  எனக்குப் பாலுணர்வின்மேல் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அப்படியொரு சூழ்நிலைக்கு இசையமைக்கிறபோது அதையொரு வடிகால் மாதிரி வெளிப்படுத்தித்தானே ஆகவேண்டும்? இது எல்லோருக்கும் இருப்பதுதானே?

கல்கி:  இருப்பதுதான்.  ஆனாலும் பல நேரங்களில் It is not good taste என்று ஆகிவிடுகிறதல்லவா?

         வெறும் இலக்கியத்தை மட்டும் பார்த்தால் எப்படி பத்திரிக்கை நடத்த முடியாதோ அப்படித்தான் இதுவும்.  எதுவும் இலைமறைவு காய்மறைவாகவும், கொச்சையாக இல்லாமலும் இருக்கவேண்டும்.  கொச்சையாக ஒரு பாடல்வேண்டும் என்று ஒரு சூழ்நிலை உருவாக்கப்படும்போது, அதையும் நான் நூறு சதவீத ஈடுபாட்டுடன்தான் செய்யவேண்டியிருக்கிறது.  அப்படி நான் செய்யவில்லையென்றால், என்னுடைய Creation’ல் தப்பு இருக்கிறதாக ஆகிவிடுமே?

கல்கி: அப்படியொரு சூழ்நிலைக்கு இசையமைக்கவேண்டியிருக்கிறதே என்று நீங்கள் வருத்தப்படமாட்டீர்களா?

         அழகான சிற்பத்தை வடிக்கும் சிற்பி, அம்மி வடிக்கத் தெரியாதவனாயிருப்பானா?  அல்லது அம்மி வடிக்கத்தான் வருத்தப்படுவானா?  அந்தப் பொருள் எல்லோர் வீட்டிலும் உபயோகப்படுகிறதே என்று நினைக்க மாட்டானா?  இருந்தாலும் ஒரு நூறு அம்மி செய்து முடித்ததும் ஒரே ஒரு சிற்பமாவது செய்ய சந்தர்ப்பம் வராதா என்ற வருத்தம்  ஒரு உண்மையான சிற்பிக்கு இருக்கும்.  அதைத்தான் மக்கள் விரும்பிக்கேட்கும்போது என்ன செய்வது?

கல்கி:  எவ்வளவோ நல்ல விஷயங்களை விட்டுவிட்டு இந்த மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்கிற வருத்தமும் வருமே?

         உண்டு.. உண்டு.. உண்டு.. இதைத்தான் பழகிப்போய்விட்டது என்று நான் முன்பே கூடச் சொன்னேன்.

கல்கி: நீங்கள் மிகவும் விரும்பி ரசித்துச் செய்த பாடல் ஏதாவது மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்ட சம்பவம் ஏதும் இருக்கிறதா?

         படங்கள் வேண்டுமானால் ஓடாமல் போயிருக்கலாமே தவிர, நல்ல பாடல்கள் எதுவுமே மக்களால் விரும்பப்படாமல் போனதில்லை.  நல்ல பாடல்கள் இருந்தும் படம் ஓடாவிட்டால் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

கல்கி: ஒரு காலகட்டத்தில் எல்லாப் பிரபல டைரக்டர்களுமே உங்களிடம்தான் வந்தார்கள்.  நீங்கள் இல்லாத படங்களே இல்லை என்று கூடச்சொல்லலாம்.  பிறகு அந்த நிலை மாறி, பிரபல டைரக்டர்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை என்ற நிலையும் வந்தது.  அதுக்குறித்துப் பல்வேறு விதமான வதந்திகளும் வந்தன. ஆனால் உங்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலுமே சொல்லப்படவில்லை. அந்த நிலைக்கு என்னதான் காரணம்?

         இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் போய் கேட்கவேண்டும். அவர்கள்தான் பதிலும் சொல்லவேண்டும்.  என்னிடம் ஒரு காரணமும் இல்லை (சிரிப்பு)

கல்கி:  How to Name it, Nothing But Wind என்று இரண்டு ஆல்பம் கொடுத்தீர்கள். அப்புறம் ஏன் கொடுக்கவில்லை?

         அதற்கான நேரம் ஒதுக்கமுடியாததுதான் காரணம்.

கல்கி:  How to Name it’ல், I met Bach in my House’ பாடலில் ஒருவர் வீட்டுக்குள் வருகிற மாதிரியும், அவரைக் கட்டித் தழுவி வரவேற்கிற மாதிரியும் காட்சி ரூபமான ஒரு விஷயத்தை இசையின் மூலமாகவே கண்முண் கொண்டு வந்திருக்கிறீர்கள்.  அதை எப்படிச் செய்தீர்கள்?

         அது Original Composition of Bach.  அதில் வருகிற Indian Melody மட்டும்தான் என்னுடைய Composition.  அதில் ஒளிந்திருக்கக்கூடிய ராகங்களை மட்டும்தான் நான் வெளியே கொண்டுவந்தேன்.  அந்த ராகங்களுக்கு அந்த வடிவங்கள் இருக்கிறதென்பது மேற்கத்தியர்களுக்குத் தெரியாது.  மேற்கத்திய இசையில் உள்ள ராகங்களை எனக்குத் தெரிந்தவரை வெளியே கொண்டுவந்திருக்கிறேன்.  16ம் நூற்றாண்டில் Bach அதை உருவாக்கியபோதே இருந்ததுதான் அது.  இன்னின்ன இடத்தில் இன்னின்ன ராகங்கள் இருக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக்காட்டிய பணிதான் என்னுடையது.

கல்கி: உங்களுடைய பாடல்களைச் சிலர் வெளிப்படையாகக் காப்பியடிக்கும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கும்?

         இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.  அதுபற்றி என்ன இருக்கிறது? (சிரிப்பு)

கல்கி:  உங்களுக்கு என்று விருப்பமான ராகங்கள் எதுவும் உண்டா? எதன்மீதாவது உங்களுக்கு அதீத லயிப்பு உண்டா?

         அப்படியெல்லாம் எதுவும் இல்லை.  எல்லாமே Music.. Music.. Music.. அதில் எப்படிப் பிரித்துப் பார்க்கமுடியும்?

கல்கி: இசை என்பது ஒரு இனிமையான விஷயம்தான்.  ஆனால் ஒரு சமயத்தில் உங்களுடைய இசை, பாடல் வரிகளை, வார்த்தைகளைக் கேட்க முடியாமல் Dominate செய்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது.  அது உண்மையும் கூட… …

         எந்தப் பாடல் என்று சொல்லுங்களேன்..??

கல்கி:  நிறையப் பாடல்கள்.  இசைதான் கேட்குமே தவிர வார்த்தை புரியாது.

         புரியாததை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்?  அந்த வார்த்தைகள் புரியக்கூடாது. அவ்வளவு மட்டமாக எழுதியிருக்கிறார்கள் என்பதற்காகக்கூட அப்படிச் செய்திருக்கலாமில்லையா? (சிரிப்பு)

கல்கி:  அதுபோன்ற கவிஞர்களை நீங்கள் ஏன் ஊக்குவிக்க வேண்டும்?

         ஏதோ காலம்!

கல்கி:  நீங்கள் நினைத்தால் இதற்கு நான் இசையமைக்க முடியாது என்று சொல்லலாமே?

         அப்படியல்ல… ஒரு பாடல் வரிகளோ, வார்த்தைகளோ கேட்காமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. Original’ல் இருந்து Copy செய்யப்பட்ட Recording சரியில்லாமல் இருக்கலாம்.  நீங்கள் கேட்கும் டேப்போ, டேப் ரிக்கார்டரோகூட சரியில்லாமல் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் இசையமைப்பாளரே காரணம் என்று சொல்லிவிடமுடியாது.  யார் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் மக்கள் கைகளில்தான் இருக்கிறது.  அப்படி நிராகரித்துவிட்டால் அதுபோன்ற பாடல்கள் வராதே..!

கல்கி: சரி. மீண்டும் உங்கள் ஆல்பத்துக்கு வருவோம். யானி, மைக்கேல் ஜாக்ஸன் ஆகியோரது ஆல்பத்தைக் கேட்கும்போதும் உங்களுடையதைக் கேட்கும்போதும், பாமர ரசிகர்களாகிய எங்களுக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை.  அதாவது இசையின் தரத்தைச் சொல்கிறோம்.  ஆனாலும் அவர்களுடைய ஆல்பம் பாப்புலரான அளவுக்கு இசையில் எந்தவிதத்திலும் தரம்குறையாத உங்களுடைய ஆல்பங்கள் பாப்புலராகாததற்கு என்ன காரணம்?  உலகத்தரம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

         அது வெளிப்படுகிற இடத்தைப் பொறுத்து இருக்கிறது. இந்தியாவில் வெளிப்படுகிறபோது அப்படி இருக்கிறது.

கல்கி: எதனால் அப்படி?

        உலகத்தரம் என்று பார்க்கிறபோது, முதலில் ரெக்கார்டிங் தரத்தைத்தான் பார்க்கிறார்கள். அப்படிப்பார்த்தால் என் இரண்டு ஆல்பமுமே அந்தத் தரத்திற்குக் கீழேதான்.. நிறைய தவறு இருக்கிறது.

கல்கி:  நீங்கள் குறிப்பிடுகிற இந்த டெக்னிகலான தவறுகள் எங்களுக்குத் தெரியவில்லையே?

         இந்த டெக்னிக்கல் தவறுகள் இல்லாமல் நான் கொடுக்கிறபோது அந்த இசை இன்னும் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.  இவ்வளவு குறைகள் உள்ள ஒன்றையே இத்தனை நிறைவாக இருக்கிறதென்று நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் இன்னும் fine sound’ல் கொடுத்தால் எப்படி உணர்வீர்கள்!  இதிலெல்லாம் அவர்கள் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர்கள்.  இருபத்து நான்கு மணி நேரத்தில் அவர்கள் பன்னிரண்டு மணி நேரம் சாதகம் செய்கிறார்கள்.  அப்படி சாதகம் செய்பவர்கள் ஒரு ஸட்ஜமம் வாசித்தாலே போதும். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  இங்கு அப்படியில்லை.. Learning’ஐ விட Earning அதிகமாகிவிட்டது.  கர்நாடக சங்கீதத்தில் கூட பத்துக்கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டதுமே கச்சேரி செய்யத்தான் ஆசைப்படுகிறார்கள். மேலும் மேலும் கற்றுக்கொள்வது குறைந்துபோகிறது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாம் டெக்னிக்கலாக அவர்களது தரத்துக்குப் போக முடியும்?

கல்கி: நீங்கள் இசையை எழுதுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படி?

         மனதில் கேட்பதை அப்படியே எழுதுகிறேன்.

கல்கி: அதற்கு ஏதேனும் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?

         இசை, இசை, இசை.. என்று பைத்தியமாகவே ஆகவேண்டும்.. (சிரிப்பு)

கல்கி: ஒரு சீனியர் என்ற முறையில் ரஹ்மானின் இசையமைப்பு எப்படி என்று சொல்லுங்களேன்.

         நன்றாகச் செய்கிறார்.  நானும் உங்களைப்போல இசைக்கு ரசிகன்தானே?

கல்கி: உங்கள் மகன் கார்த்திக்ராஜா?

         அவனும் நன்றாகவே செய்கிறான்

கல்கி:  ’இசை என்பது வெறும் ஏமாற்று வேலை’ என்று நீங்கள் முன்பு சொல்லியிருக்கிறீர்கள்.  ஆனால் இசையின் மூலம் இறைவனை அடைவது சுலபம் என்று கூறுகிறார்கள். இசை, இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு விஷயம் என்கிறார்கள்..

         பக்கத்தில் மட்டுமல்ல.  இறைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பது இசைதான். ஒரு விஷயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு மாறான கருத்தை இன்னொருவர் சொல்லக்கூடாதா? அது ஒரு வேலையாகச் செய்யப்படுகிறபொழுது வெறும் வித்தைக்காரன் வேலைதான். அதிலேயே மூழ்கிவிட்டாலோ…

கல்கி: இசை ஏமாற்று வேலையாக இருந்தால், இறைவனுக்கு அடுத்த நிலையில் அது இருக்க முடியுமா?

         நான் ஏமாற்றுவேலை என்று சொன்னது, இசையை நாம் ஏமாற்றுகிறோமா அல்லது இசை நம்மை ஏமாற்றுகிறதா என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையைத்தான்.  ஏனெனில் நான் முன்பே சொன்ன மாதிரி அது வானம்போல விரிந்தது.

கல்கி: உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?

         வடஇந்தியாவில் எனக்குப் பிடித்தவர்கள்.. ஸ்ரீராமச்சந்திரா, நௌஷாத், எஸ்.டி.பர்மன், மதன்மோகன்.. இவர்களெல்லாம் சினிமாவுக்காகத் தங்களைச் சேதப்படுத்திக்கொள்ளாதவர்கள்.  ‘அனார்கலி’ படத்துக்கு இசையமைக்கவேண்டும் என்று நௌஷாத்தை அணுகினார்கள்.  தமக்கு ஒரு லட்ச ரூபாய் தரவேண்டுமென்றார்.  அப்போது அது பெரிய தொகை. சரி என்றார்கள்.  அந்தப் படத்துக்கு இசையமைக்கத் தமக்கு இரண்டு ஆண்டுகள் ஆகுமென்றார்.  அத்தனை காலம் தங்களால் காத்திருக்கமுடியாது என்பதால், அவர் தரத்துக்கு இசையமைக்கக்கூடிய இன்னொருவரை அவரே சிபாரிசு செய்யவேண்டும் என்றார்கள்.  அவர் ஸ்ரீராமச்சந்திராவை சிபாரிசு செய்தார். அவரை அணுகியபோது, ‘நான் ஒரே மாதத்தில் இசையமைத்துத் தருகிறேன்.  ஆனால் நீங்கள் நௌஷாத்துக்கு ஒரு லட்ச ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதால், எனக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்றாராம்.  அதன்படியே தந்தார்கள். படம் வந்தது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ்..! (’ஜிந்தகி’ என்று துவங்கும் ‘அனார்கலி’ படப்பாடலைப் பாடிக்காட்டுகிறார்)

ரோஷன் ஒரு படத்துக்கு இசையமைக்கும்போது, பாடலில் ஒரு கேள்வியை வைப்பார்.  மதன்மோகன் தமது படத்துக்கு இசையமைக்கும்போது, தமது பாடலில் முன்னவர் வைத்த கேள்விக்கு பதில் சொல்லுவார்.  முன்னவர் இறந்தபோது, பின்னவர் வந்து, “இனி யாருக்கு நான் பதில் சொல்லுவேன்” என்று அழுதார். இசையமைப்பாளர்கள் என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்.

கல்கி: உங்களுக்கு இசை தவிர ஃபோட்டோகிராபியிலும் ஆர்வம் உண்டு என்று கேள்விப்படுகிறோம்.

         ஆமாம். கோயில்களுக்குச் செல்லும்போது கேமிராவையும் உடன் எடுத்துக்கொண்டு போவேன்.. (தாம் எடுத்த படங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்.. அத்தனையும் கோயில்கள், இயற்கைக் காட்சிகள்.. என்று சிறப்பான படங்கள்).

கல்கி: எல்லாப்படங்களுமே சிறப்பாக இருக்கின்றன..

         இன்றைக்கு அருமையான கேமிராக்கள் வந்துவிட்டன. என் பங்கு குறைவுதான்.

கல்கி: கேமிரா படம்தான் எடுக்கும்.  ஆனால் நீங்களோ ஒவ்வொரு படத்தையும் இசை போலவே சிற்பமாகக் கம்போஸ் செய்து எடுத்திருக்கிறீர்கள். பிரசுரத்திற்குச் சில படங்களைத் தரமுடியுமா?

         இந்தப் புகைப்படங்களைக்கொண்டு ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.  அது முடிந்ததும் தருகிறேன்.

அட்டை வண்ணப்படமும் படங்களும்: பிரவீண்குமார்.

நன்றி: கல்கி

பகிர்வு நன்றி: திரு. அலெக்ஸ் & திரு. ரவிசங்கரானந்த் ராமகிருஷ்ணன்

Tuesday, September 4, 2012

நீதானே என் பொன்வசந்தம்


ஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா? எப்போதான் வருது?... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு, சின்னச் சின்ன Teaserகள் வடிவத்தில் பரபரப்பைக் கிளப்பி, உஸ்ஸ்ஸ்... பக்தர்கள் காத்திருந்த அந்தத் திருநாள் நிகழும் தேதியை ஒருவழியாய் அறிவித்தேவிட்டார் இயக்குனர் கவுதம் மேனன்...!
செப்டம்பர் 1 ...!!

Hungary யில் இருந்து Budapest Orchestra வருகிறது, நுழைவுச்சீட்டுடன் ஒலிப்பேழை ஒன்றும் இசைஞானியின் கையெழுத்திப்பட்ட போஸ்டர் ஒன்றும் கிடைக்கும், ‘நீதானே என் பொன்வசந்தம்’ பாடல்களுடன், இசைஞானியின் 80களின் Hitsகளும் இசைக்கப்பட உள்ளன, போன்ற அறிவிப்புகள் உச்சபட்ச எதிர்பார்ப்பலைகளைக் கிளப்பிவிட்டிருக்க.. 5.30 போல ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தைச் சென்றடைந்தோம்.

நுழைவாயிலில், “Tickets Sold Out” பதாகையின் வரவேற்பை ஏற்று, ஒலிப்பேழையையும், ராகதேவன் புன்னகைக்கும் புகைப்படத்தையும் அள்ளிக்கொண்டு உட்சென்றோம்.

1 மணி நேரம் முன்பாகவே உள்ளே நுழைந்திருந்த சக பக்தகோடிகள் சீட் பிடித்து வைத்திருக்க, மேடையின் நேரெதிரே இருக்கை. இசைஞானி ரசிகர்களை இணையத்திலும், இதுபோன்ற திருவிழாக்களிலும், அற்புதமாய் ஒருங்கிணைத்து வரும் திரு. காமேஷ் பவரத்னம் அவர்களின் மேற்பார்வையில், நண்பர்கள் 20-30 இருக்கைகளை பிடித்து வைத்திருக்க, மொத்தமாய் அமர்ந்தோம். அமர்ந்து நிமிர்ந்தால், மேடையை மறைத்து பெரியதொரு வெண்திரை. இதே இடத்தில் டிசம்பர் 2011ல் நடைபெற்ற “என்றென்றும் ராஜா” நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்தவுடனேயே, ஆர்கெஸ்ட்ராவில் என்னென்ன இசைக்கருவிகள் இருக்கின்றன.. யார் யார் வந்திருக்கிறார்கள்.. எந்தப் பாடலுடன் இசைஞானி நிகழ்ச்சியைத் துவக்குவார்.. போன்ற விஷயங்கள் பார்வையாளர்களால் அலசப்பட்டுக்கொண்டிருந்ததற்கு நேர்மாறாய், ஏகத்துக்கும் சஸ்பென்ஸ் வைத்திருந்தார் கௌதம்மேனன். இசைக்கருவிகள் Tune செய்யப்படும் செய்யப்படும் சப்தங்கள்கூட இல்லாததால் மேடையில் வழக்கமான ஒலிப்பேழை வெளியீட்டுவிழாக்கள்போல வரிசையாய் நாற்காலிகள் இருக்குமா அல்லது முதலிலேயே பாடல்களை இசைக்குழுவினர் இசைப்பார்களா என்று எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை, இணையத்தில் வெளிவந்த “நீ.எ.பொ.வ” படத்தின் ஒன்றிரண்டு காட்சிகள் திரையில் அவ்வப்பொழுது தோன்றி மறைந்தவண்ணம் இருந்தன.

மேடையின் முன்னே வி.வி.ஐ.பி.க்களுக்காக வட்டவடிவ மேஜைகளும் அவற்றைச் சுற்றி நாற்காலிகளும் குவிக்கப்பட்டிருந்தன.  இயக்குனர்கள் பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதிராஜா, சமுத்திரகனி, நடிகர்கள் பார்த்திபன், ஜீவா, சமந்தா மற்றும் கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன், என ஒவ்வொருவராய் வந்து தத்தமது இருக்கைகளில் படர்ந்ததைச் சொல்லிக்கொண்டேயிருந்தது மேடையின் பக்கவாட்டில் இருந்த வெண்திரை.

சற்று நேரம் கழித்து, இந்த நிகழ்ச்சிக்கென இசைஞானியின் பாடல்களை பாடகர்கள் பிரத்யேகமாக பாடிய காட்சி திரையில் விரியத்துவங்கியது. பாடகர்களும், இசைஞானியின் இசைக்கலைஞர்களும் அவரிடம் இசைத்த அனுபவங்களை ஒருசில வரிகளில் பகிர்ந்துகொள்ளும் காட்சி முடிந்ததும் ... ..

எல்லோரும் எதிர்பார்த்திருந்த அத்தருணம்..! மாயத்திரை உயர்ந்தது..!!

இந்தியமேடைகளில் இதுவரை பார்த்திராத காட்சி. கறுப்புச் சீருடையில் 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள்...! வயலின்கள் எதிரெதிராய் மூன்று வரிசைகள், அவற்றின் பின்னே Cello, Double Bass இரு வரிசைகள், நடுவே இரண்டு Drums, பக்கவாட்டில் இரண்டு கீபோர்ட்.., Trumpet, Trombone, Sax, Harp.. அதற்குமேல் எந்த இசைக்கருவியின் பெயரும் எனக்குத் தெரியவில்லை. smile

Conductor புருஷோத்தமன், இசைஞானியின் ஆஸ்தான வயலினிஸ்டுகள், தபலா, நாதஸ்வரம், மத்தளம் இன்னபிற இந்திய இசைக்கருவிகள், எதுவும் இல்லாத இசைஞானியின் மேடை..!! பார்க்கவே மிகவும் புதிதாய் இருந்தது. சமீபகாலமாய் இசைஞானியின் குழுவில் காட்சிதரும் Guitarist Attila Lazloவைத்தவிர ஒரு தெரிந்த முகம் கூட இல்லை.

மேடையேறிய கௌதம்மேனன் Conductor Nickஐ மேடைக்கு அழைத்தார். மைக் பிடித்த Nick, “வணக்கம் ச்சின்னை” என்று அழகாகத் துவக்கி, “We’d like to start by taking you away from the songs of this film. We are here to perform a few numbers of the Maestro which you may recognize. Hope you’ll enjoy” என்றுகூறி தன் இசைக்கலைஞர்கள் பக்கம் திரும்ப, “This is the decorum in any Orchestra. Kindly Switch Off your mobiles. This is the respect we show for the Orchestra and Raja Sir” என்ற கவுதம்மேனனின் அறிவிப்பினைத் தொடர்ந்து... அத்தனை இசைக்கருவிகளும் சேர்ந்து ... ... .. எப்படி விவரிப்பது? வார்த்தையில் சாத்தியமில்லை. துவங்கியது சுனாமி. இசைஞானியின் பாடல்கள் வரிசையாய்.. !!

1. எந்தப் பூவிலும் வாசம் உண்டு.
2. தென்பாண்டிச் சீமையிலே.
3. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்.
4. கண்மணி அன்போடு.
5. சுந்தரி கண்ணால் ஒரு சேதி.
6. சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் அந்தப் பிரம்மாண்ட இரண்டு Interludeகள்.
7. ராஜா கையவச்சா.

[ஒவ்வொரு பாடலின் துவக்கத்திலும், இறுதியிலும், இடையிலும், ரசிகர்கள் போட்ட கூச்சல், இசைஞானியின் பாடல்களின் மேல் நமக்கிருக்கும் அன்பின் வெளிப்பாடு என்றாலும், வந்திருந்த இசைக்கலைஞர்களுக்கு நிகழ்ந்த உச்சபட்ச அவமரியாதை. Metal Detectorகள் போல, கூச்சலிடக்கூடியவர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய கருவி ஒன்றை யாரேனும் கண்டுபிடித்தால் தேவலாம். இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்தின் வாயிலில் அதை நிறுவி அப்படிப்பட்டவர்களை அப்படியே அப்புறப்படுத்த வசதியாய் இருக்கும். இனி கனவிலும் கிட்டாத அற்புதமான அந்த இசைவிருந்தின் Raw Footage’ஐ யாரோ ஒரு புண்ணியவான் யூட்யூபில் தரவேற்றியிருக்கிறார். அது இங்கே].

தொடர்ந்து கிட்டாரிஸ்ட் ஒருவர் துணையுடன் கௌதம்மேனன் “உறவுகள் தொடர்கதை” பாடலைத் துவக்கினார்...! பல்லவியை முடித்தவர், ‘நாம் எல்லோரும் இங்கு வந்திருப்பது அந்த ஒரே ஒரு பெயருக்காகத்தான். அந்த ஒருவருக்காகத்தான். நான் பிரித்துப் பேசுகிறேன் என்று நினைக்கவேண்டாம். இங்கே இருப்பவர்களுக்கு (வி.ஐ.பி.க்களைக் காட்டி) அவர் ராஜா சார்..! அங்கே இருப்பவர்களுக்கு (பார்வையாளர்களைக் காட்டி) அவர் ‘இளையராஜா’... என்று கூறி, தேர்ந்த பாடகருக்குரிய Perfection
இல்லாவிடினும், ‘உன் கண்களின் ஓரம்’ சரணத்தை சுத்தமாய்ப் பாடி முடித்தார்.

தொடர்ந்து பேசிய கௌதம்மேனன், “வணக்கம்..! இப்போதெல்லாம் மைக் கிடைத்தாலே பாடத் துவங்கிவிடுகிறேன். கொஞ்ச நாட்களாக, எனக்கு Notation, Pitch, Chord இதுபோன்ற விஷயங்கள்தான் கண்களுக்குத் தெரிகின்றன. காதுகளில் கேட்கின்றன...” எனக்கூறி, அதற்குமேல் தாமதிக்காமல், இசைஞானியை மேடைக்கு அழைக்க, புயல் எழும்பியது அரங்கத்தில்.

ஒட்டுமொத்த ஆடிட்டோரியமும் எழுந்து நின்றது. வந்திருந்த அத்தனை இசைக்கலைஞர்களும், இசைஞானி மேடையில் நுழையும்போது கிடைத்த வரவேற்பினை வியப்புடன் பார்த்தபடி எழுந்திருக்க, கைகளை உயர்த்தி வணங்கி, குனிந்து மேடையினைத் தொட்டு இன்னொருமுறை வணங்கி, தனக்குமுன் வந்து அமர்ந்துவிட்டிருந்தத் தன் ஆர்மோனியப் பெட்டியின் முன் வந்தமர்ந்தார் ராகதேவன். அவருக்கு நேரெதிர் இருக்கையில் கௌதம்மேனன்.

நிசப்தத்தில் இருந்த அரங்கம் “ஷிவஷத்யாயித்தோயதி பவதி” இசைப்பிதாவின் உதடுகளில் இருந்து வெளிப்பட, மீண்டும் அதிரத் துவங்கியது..! “ஷத்தப்ர பவிதும்... ... ... ..” என்று நிறுத்திய ராகதேவன், “நீங்கள் இப்படிச் சத்தம் போட்டால்.. என்னால் பாடமுடியாது” எனக்கூறியவுடன், Pindrop Silence’க்கு வந்த அரங்கம், ‘நசே.. தேவம் தேவோ நக்ஹல..’ எனத் தொடர்ந்த ராகதேவனின் குரலில் மயங்கத் துவங்கிவிட்டிருந்தது [இசைஞானியின் வேண்டுகோளுக்குப் பிறகும் விசிலைப் பறக்கவிட்ட அந்த ஒற்றை பிரகஸ்பதி என் அருகில் அமர்ந்திருந்தால், இப்பதிவினை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்காது. கண்டிப்பாய் ஒருவனின் முகத்தைப் பெயர்த்துவிட்ட வழக்கில் இந்நேரம் ‘உள்ளே’ இருந்திருப்பேன். பின்னர் பார்வையாளர்களில் ஒருவர் எழுந்திருந்து உரக்க அதட்டியதும்தான் அமைதியானது அந்த ஜந்து].

வழக்கமாய் வாத்தியங்களின் துணையுடன் கேட்டுக் கேட்டு பழகிப்போன ‘ஜனனி ஜனனி’யை, முதன்முறையாய் இசைஞானியின் குரலுடன் பயணித்த அந்த ஆர்மோனியத்தின் நாதத்துடன் மட்டும் கேட்டது மிகவும் புதிது.

பல்லவியைப் பாடிமுடித்த ராகதேவன், “நீங்கள் துவக்குவதற்கு முன்னால் நான் துவக்குகிறேன். மற்ற கச்சேரிகளில் நீங்கள் விசிலடிப்பது சரி. (ஆர்கெஸ்ட்ராவைச் சுட்டிக்காட்டி) இதற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையே இனிமேல் நீங்கள் விசில் அடிக்கக்கூடாது. அப்படி அடித்தால் நான் எழுந்து போய்விடுவேன். சப்தம் இல்லாமல் நீங்கள் அமைதியாக இருந்தால் இசையை Enjoy பண்ணலாம். நீங்கள் இசைக்காக வந்திருக்கிறீர்கள். எனக்காக வந்திருக்கிறீர்கள். அந்த மரியாதைக்காக நான் உங்களை request செய்கிறேன். இது கண்டிப்பாய் command இல்லை. இனி விசில் அடிக்கவேண்டாம். தேவைப்பட்டால் கைதட்டலாம். ஓ.கே.வா?’ எனக் கேட்க, அதை ஆமோதித்துக் குரல்கள் கிளம்பின.

தொடர்ந்தது கௌதம்மேனனுக்கும் இசைஞானிக்கும் இடையேயான உரையாடல்.

‘நான் ராஜா சாருடன் கடந்த ஆறு மாதங்களாக நெருங்கிப் பழகியிருக்கிறேன் என்று சொல்லலாம். நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். சார்.. இந்த ஹார்மோனியத்தில் இருந்துதான் இத்தனைப் பாடல்களும் உருவாகியிருக்கின்றன. இல்லையா?

    ‘(ஹார்மோனியத்தைக் காட்டி) இவன் ஒருவனுக்குத்தான் என்னைத் தெரியும். இது வெறும் மரப்பெட்டி அல்ல. உயிருள்ளது. என்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன், கோயம்புத்தூரில் உள்ள எம்.என். பொன்னையா ஆசாரி என்பவரிடமிருந்து எண்பத்தைந்து ரூபாய் கொடுத்து இதை வாங்கி வந்தார். இதை அவர் வாங்கிவரும்போது நான் மிகவும் சிறுவன். இதில் நான் கைவைத்தால் அவர் என்னை கைகளை நீட்டச்சொல்லிப் பிரம்பால் அடிப்பார். ஆனாலும் அண்ணன் இல்லாத நேரத்திலே, ஒரு கள்ளக்காதலனும், கள்ளக்காதலியும் சந்திக்கின்றதைப்போல, நாங்கள் சந்தித்திருக்கின்றோம். இந்த ஹார்மோனியத்திற்கு முதலில் ஒரு மரப்பெட்டி இருந்தது. கச்சேரிகளுக்குப் போய்த் திரும்பும்போது, பஸ் கிடைக்காமல், இதன்மேலேயே படுத்து நாங்கள் தூங்கியிருக்கிறோம். இதே பெட்டியை பாரதிராஜாவும் சேர்ந்து தூக்கியிருக்கிறார். நாங்கள் ஒன்றாக நடந்து வந்தவர்கள்தான். ஆனால் இப்போது அவர் எங்கோ இருக்கிறார். நான் எங்கோ இருக்கிறேன் (சிரிப்பு).

முன் வரிசையில் அமர்ந்திருந்த பாரதிராஜா, இசைஞானி கூறியதை ஆமோதிப்பதுபோல கைகளை இடவலமாக ஆட்ட, கரவொலி..!

“சார்... அன்னக்கிளியில் இருந்து ‘நீதானே என் பொன்வசந்தம்’ வரை, உங்களுக்குள் ஒரு கம்போஸர் ஆக என்ன மாற்றத்தை உணருகிறீர்கள்?

    “மாற்றம் என்று எதுவுமில்லை. இந்த விஷயம் எப்போதோ நடந்திருக்கலாம். எனக்கு முதல் படத்தில் இருந்தே ஒரு பாடல்போல இன்னொரு பாடல் இருக்கக்கூடாது, என்பதுதான் நோக்கமாக இருந்தது. அப்படி இருந்திருந்தால் அது ஒரு ‘மாதிரி’தான். ஒரு பாடல்போல இன்னொரு பாடல் வேண்டும்’ என்று டைரக்டர்கள்தான் என்னிடம் கேட்பீர்கள். ஆனால் நான் தரமாட்டேன். ஆனால், கௌதம் என்னிடம் வருவதற்கு முன்பாகவே என்னை நன்றாகத் தெரிந்துகொண்டு, ‘சார்.. இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் Record செய்யலாம்’ என்று சொன்னார். அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எங்கள் முதல் சந்திப்பில் அவர் அப்படிக்கூறியதுமே எனக்குத் தெரிந்துவிட்டது”.

“சார் உங்கள் குரலில் ஒரு Magic இருக்கிறது. நீங்கள் பாடி நான் நிறையக் கேட்டிருக்கிறேன்... ..

    (ரசிகர்களைப் பார்த்து) “நான் பாடணுமா?”

எழுந்தமர்ந்த பலத்த கரவொலிக்குப்பின், கவுதம்மேனன், “சார்.. ஒரு ஐந்து பாடல்கள் நான் Choose பண்ணியிருக்கிறேன்.

    “அது சரி..!” (சிரிப்பு)

‘ஒருவேளை நீங்கள் மறந்திருந்தால் என்னசெய்வதென்று Lyrics
கூட நானே ரெடி செய்துவிட்டேன். வெங்கட்.. அந்த Sheets..’ என்று கேட்க.. பாடல்வரிகளுடன் கூடிய தாள்கள் வந்து சேர்ந்தன.

‘சார்.. முதலாவது, ‘கோடை காலக்காற்றே’

    “குழந்தைகள் சுற்றுலா செல்லும்போது Backgroundல் வரும் பாடல் இது.’ எனக்கூறி ‘கோடைகாலக்காற்றே.. ...’ பல்லவியைத் துவக்கினார் இசைஞானி. Guitar மட்டும் சேர்ந்து கொள்ள... இசைஞானி சரணத்தையும் பாடித் தாலாட்டி முடித்தார்.

“சார்.. அடுத்து, ‘கண்மணியே காதல் என்பது’.

  “இந்தப் பாடலை Record பண்ணும்போது ஒரே மூச்சில் பாடவேண்டியிருந்தது. பாலுவுக்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடலும் Experimentதான். அப்போது 3 Track Recording facilityதான் இருந்தது. எனவே, முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Trackல் ரெக்கார்ட் செய்து, அதன்பின்னர் அடுத்த Trackல் விட்ட இடங்களைப் பாடி ரெக்கார்ட் செய்தோம். அதன்பின்னர் இரண்டையும் Sync செய்தோம். அப்படிப் பதிவு செய்தபாடல் இது”.

தொடர்ந்து ‘கண்மணியே காதல் என்பது..’ பல்லவியையும், அதன்பின்னர் ‘மேளம் முழங்கிட’ சரணமும் முழுதாகப் பாடி முடித்தார் இசைஞானி.

‘சார்.. ‘அடி ஆத்தாடி’..?

    ‘அடி ஆத்தாடி... (1980களில் கேட்ட அதே குரல் கொஞ்சமும் இளமை மாறாமல்..! இவர் குரலுக்கு வயதே ஆகாதுபோலிருக்கிறது).

‘சார்.. ஒரு Youthfulஆன படம் ஒன்று வந்தது. அக்னி நட்சத்திரம்..!! அதிலிருந்து ‘ஒரு பூங்காவனம்’..!

   இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லவேண்டும். பொதுவாக டைரக்டர்கள் பாடலைக் கேட்கும்போது, “இந்த இடத்தில் பாடல் வரவேண்டும், அதில் Commercial விஷயங்கள் சேர்ந்திருக்கவேண்டும். அதன்பின்னர் இத்தனை ரீல்கள் தள்ளி ஒரு பாடல்வரவேண்டும். அதன்பின்னர் Interval அருகே பாடல் வரக்கூடாது” என்று ஒரு Fixed Ideaவுடன்தான் என்னிடம் வருவார்கள். அவர்களுக்குப் பாட்டை ஹிட்டாக்கவேண்டும்.. அவ்வளவுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நல்ல ட்யூன்கள் கொடுக்கவேண்டும். ஒரு நீச்சல்குளத்தில் பெண் ஒருத்தி குளிப்பதுபோன்ற Situation என்றால், பாடல் Commercialலாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். நான் Reverseல் போய், இதை Slow Songஆகத்தான் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டிருந்தேன். முடிவு செய்துவிட்டு யோசித்துப் பார்த்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஒரு ராகம் நினைவுக்கு வந்தது. (ஆர்மோனியத்தில் வாசித்தபடியே, பூங்காவனம் பாடலையும், பாடலின் ராகத்தையும் இசைஞானி மாற்றி மாற்றிப் பாடிக்காட்டியது அற்புதக் காட்சி. சத்தியமாய் எவ்வளவு முயற்சித்தாலும் அதை எழுத்தில் கொண்டுவரும் ஞானம் அடியேனுக்கு இல்லாததால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது கண்டு மகிழ்க). இந்த ராகத்தில் ஒரே ஒரு Note மட்டுமே Add பண்ணிக்கொண்டேன். அந்த ஒரு Note மட்டும்தான் Chromaticஆக பண்ணினேன். இந்தப் பாடலுக்கு அப்படி ஒரு கதை இருக்கிறது”.

“சார்.. இன்னும் ஒரு பாட்டு.. ‘தென்றல் வந்து தீண்டும்போது’..

  “தந்தனன.. தான.. நான..’ வுடன் துவக்கி, முழுப்பல்லவியையும் தத்தகாரத்திலேயே அமுதூட்டி முடித்தார் இசைப்பிதா.

‘சார்.. உங்களுடைய பாடல்கள் என்று இல்லாமல் வேறு Composerகளின் பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?

   “ஒன்றா? இரண்டா? இந்த நிமிஷத்தில் துவங்கினாலும் எனக்குப் பிடித்த இசையைக் கேட்டு முடிக்க இன்னும் எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் எடுக்கவேண்டும். அவர்களின் Greatnessஐ உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றால்.. ... .. ஒரேவிதமான ஸ்வரங்களை உபயோகித்திருப்பார்கள். ஆனால் அவர்களின் Approach வேறுவிதமாக இருந்திருக்கும்... Presentation வேறுவிதமாக இருந்திருக்கும்...! ஆனால் Tune ஒன்றுதான். உதாரணமாகச் சொன்னால், (Aajaa Re.. பாடலை பாடிக்காட்டுகிறார்..) இதே Notesஐ வேறு கம்போஸர் எப்படி உபயோகிக்கிறார் என்று பாருங்கள் (Maayi Re.. பாடலைப் பாடுகிறார்). இதையே, நம்ம ஆள்... உபயோகிக்கிறார்.. ‘பாலிருக்கும்.. பழமிருக்கும்...’ (மூன்று பாடல்களின் பல்லவியின் முதல் வரியையும் மாற்றி மாற்றிப் பாடி இசைப்பிதா விளக்கியது கண்டிப்பாய் கொஞ்சம் கூட இசைஞானம் இல்லாதவருக்கும் விளங்கியிருக்கும்).

இதன்பின்னர் துவங்கியது “நீ.எ.பொ.வ” பாடல்களின் அணிவகுப்பு.

முதல் பாடலை அறிமுகம் செய்ய மேடையேறிய சந்தானம் “விசிலடிக்காதீங்கப்பா.. என்னைய அடிக்கப் போறாரு” என்று தன் வழக்கமான ஸ்டைலில் துவக்கி, ‘ராஜா சார் பாட்டை லவ் பண்றோமோ இல்லையோ.. கண்டிப்பாய் அவர் பாட்டைக் கேட்டு ஒரு பொண்ணை லவ் பண்ணுவோம்’ என்று துவக்கி, தான் டைப்ரைட்டிங் க்ளாஸ் சென்றகாலத்தில் ஒரு தெலுகுப் பெண்ணைக் கவர எப்படி இசைஞானியின் ‘கொடியிலே மல்லிகப்பூ’ (தெலுகு) பாடல் உதவியது என்று கலாய்த்து முடித்து, தன் வாழ்வில் இசைஞானியின் பாடல்களை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைக் கூறினார். ‘தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரே ஒரு பாடல்தான் கேட்பேன். அது “திருவாசகம்”. காலையில் எழுந்தவுடன், இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் ராஜா சார் தெரியமாட்டார், Music தெரியாது. மாணிக்கவாசகர்தான் தெரிவார்” என்று கூறி இறங்கினார். அந்தக் காணொளியும் யூட்யூபில் கிடைக்கிறது. அது இங்கே.

தொடர்ந்து முதல் பாடலாக “புடிக்கல மாமு” பாடல் இசைக்கப்பட்டது.

மேடையேறினார் சூர்யா..!

அனைவருக்கும் வணக்கம் கூறியவர், “எனக்கு ரொம்ப நாளாக ராஜா சாரின் கைகளைப் பற்றி என் கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும் என்று ஆசை’ என்று சொல்லி, மேடையின் பக்கவாட்டில் சென்று அமர்ந்திருந்த இசைஞானியின் விரல்களைப் பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டு மீண்டும் மைக் பிடித்தார். “இப்போது எனக்கு மறுபடியும் ஒரு ஐந்து வயது ஆனதைப்போல இருக்கிறது. முதன்முதலில் ராஜா சாரின் பாடல்களைக் கேட்ட அனுபவங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ரோசாப்பு ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், மாமன் ஒரு நாள் மல்லிகப்பூ கொடுத்தான், வா மச்சான் வா, இதுமாதிரி அவர் பாடல்கள் வரிசையாக மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. முதன்முதலில் ஒரு பெண்ணைப் பார்ப்பதாக இருக்கட்டும்.. நண்பனைப் பார்ப்பதாக இருக்கட்டும்.. சகோதரனை, சகோதரியைப் பார்ப்பதாக இருக்கட்டும்.. எல்லா விஷயங்களும் இவரின் பாடல்களுடன் இன்னும் அழகாகத் தெரியும். இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல.. நம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் இருக்கும். இப்படிப்பட்ட பாடல்களைக் கொடுத்ததற்கு நன்றி சார்..! உங்கள் பாடல்கள் எங்களுக்கு அப்பா-அம்மா மாதிரி. அது என்றுமே மாறாது.

சின்ன வயதில் ரெக்கார்டிங் தியேட்டர் சென்றிருக்கிறேன். பாடல்கள் உருவாகும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் எனக்கு பக்கத்து வீடு. பொன்னுமணி பாடல்கள் உருவாவதை எல்லாம் பார்த்திருக்கிறேன். நானும் கௌதமும் இரவெல்லாம் விழித்திருந்து “காற்றைக் கொஞ்சம்” படத்தின் பாடலைக் கேட்டிருக்கிறோம். அந்தப் பாடல் உங்களுக்காக...” என்று பாடலை அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து “காற்றைக் கொஞ்சம்” பாடலுக்கான சிச்சுவேஷனை கௌதம்மேனன் இசைஞானியிடம் விளக்கும் காட்சியும், அதற்கு இசைஞானி மெட்டமைக்கும் காட்சியும் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலாக ‘காற்றைக் கொஞ்சம்’ பாடல் கார்த்திக் குரலில் அரங்கேறியது.

முடிந்ததும் பாடலாசிரியர் நா முத்துகுமார் மேடையேறினார். “யாருடைய பாடல்களைக் கேட்டு நாம் வளர்ந்தோமோ, யாருடைய பாடல்களைக் கேட்டு நம்முடைய பதின்பருவத்தில் நாம் பட்டாம்பூச்சியாகப் பறந்து திரிந்தோமோ, யாருடைய இசையைக் கேட்டு நம் வாலிபவயது வானவில்களால் நிறைந்திருந்ததோ, நம் கண்ணீர்ப் பள்ளத்தாக்குகளை யாருடைய பாடல்கள் பூக்களால் நிறைத்தனவோ, அந்த இசைஞானியின் “நீதானே என் பொன்வசந்தம்” படத்திற்கான எட்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும்பாக்கியம். மும்பையில் ஒரு ஐந்து நாட்கள் இந்த எட்டுப் பாடல்களுக்கான மெட்டுகளைக் கேட்டுக்கேட்டு வரிகளை எழுதிய அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. எல்லாப் பாடல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருமுறை கேட்கும்போதும் ஒவ்வொரு பாடலிலும் புதிதாக ஏதோ ஒன்று தெரிகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு தியானம் இருக்கிறது. ஒரு மௌனம் இருக்கிறது.

இந்தப் படத்தில் இசைஞானியின் இசையில் பாடல்கள் எழுத எனக்கு வாய்ப்பளித்த கௌதம்மேனனுக்கும், இசைஞானியின் படத்தில் முதன்முதலாக “ஜூலிகணபதி” படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பளித்த என் குருநாதர் இயக்குனர் திரு. பாலுமகேந்திரா அவர்களுக்கும், தொடர்ந்து என்னைத் தன் ஆசீர்வாதங்களால் வளர்த்துக்கொண்டிருக்கும் இசைஞானிக்கும் என்னுடைய நன்றி. வழக்கமாக ஆண்களுக்காக காதல் தோல்வி பாடல்களைக் கேட்டிருப்போம். இந்தப் படத்தில் பெண்களுக்காக இரண்டு காதல் தோல்வி பாடல்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ‘முதன்முறை பார்த்த ஞாபகம்” என்ற பாடல். அந்தப் பாடலை இப்போது கேட்கலாம் நன்றி”.

இதைத் தொடர்ந்து “முதன்முறை பார்த்த ஞாபகம்” பாடல் அரங்கேறியது.

இதன்பின்னர் ‘சாய்ந்து சாய்ந்து’ பாடலின் Making திரையிடப்பட்டது. “நீங்க இருந்தா என்னால பாடமுடியாது” என்று யுவன் கூற, ‘வரணும்..’ என்ற இசைஞானி, ‘உன் பாட்டு மாதிரி பாடுகிறாயா?’ என்று யுவன் போலவே ‘சாய்ந்து சாய்ந்து’ என்று Stylishஆன Accentல் பாடிக் கிண்டல் செய்யும் காட்சியுடன் நிறைவுபெற்றது.

தொடர்ந்து, கௌதம்மேனன், “ரெக்கார்டிங்கில் அப்பா நீங்க இருந்தால் பாடமாட்டேன் என்று சொன்னார்.. இப்போ.. ராஜா சார்.. இருக்கிறார்.. யுவன் எப்படிப் பாடப்போறார்’னு தெரியல” என்று சிரித்தபடி மேடைக்கு யுவனை அழைத்தார்.

பலத்த கரவொலிக்கிடையே மேடையேறிய யுவனைப் பார்த்து இசைஞானி, “நேற்று இவருக்கு Birthday” என்று சிரித்தபடி சொல்ல, அரங்கில் “Happy Birthday” குரல்கள்..! மைக் பிடித்த யுவன் கௌதம்மேனனைப் பார்த்து, “First of all thank you very much, இதுபோன்ற ஒரு Orchestra’வுடன் ஒரு நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்பது அப்பாவுடைய பெரிய கனவு. அதை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்” என்று சொல்லி “சாய்ந்து சாய்ந்து” பாடலை வழங்கினார். உடன் பாடகி ‘ரம்யா’ (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி) பாடினார்.

பாடல் முடிந்ததும், மேடையை விட்டுக்கீழிறங்கிய கவுதம்மேனன், இயக்குனர் பாரதிராஜாவிடம் மைக்கை நீட்டினார்.

“என் இனிய தமிழ்மக்களே..! வாழ்வில் சில நிகழ்வுகள், பிரம்மாண்டமாகவும் வியப்புக்குரியதாகவும் இருக்கலாம். இந்த நிகழ்ச்சி என்னைப் பொருத்தவரை ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஒரு மனிதனை மரியாதை செய்வதற்குக் கூட ஒரு மரியாதையான மனிதன் வேண்டும். கௌதம்.. நீங்கள் அப்படி ஒரு மரியாதையை இன்று செய்திருக்கிறீர்கள். ராஜாவை எப்போதும் இசைஞானி என்றோ.. அவர்.. இவர்.. என்றோ அழைத்து எனக்குப் பழக்கமில்லை. அவனை நான் இசைஞானி என்று சொன்னாலே அந்நியப்பட்டுப் போய்விடுகிறது. எனக்கு என்றுமே ராஜா..., “ராஜா”தான். அவன் ஆர்மோனியப் பெட்டியை நாங்கள் தூக்கிச் சுமந்த கதையை எல்லாம் அவன் சொன்னான். நாங்கள் பல வருடங்களாக ஒன்றாகப் பயணப்பட்டிருக்கிறோம். எங்கெங்கோ சென்றிருக்கிறோம். சில சமயம் சண்டையிட்டிருக்கிறோம். ராஜா நன்றாகப் படித்து நல்ல ஒரு Academic Qualification உடன் இப்படி வளர்ந்து நின்றிருந்தால்கூட வியப்பாய் இருந்திருக்காது. But He started from Zero. ஒரு பூஜ்யத்தில் தன்னைத் துவக்கி, எத்தனையோ பூஜ்யங்கள் போட்டு கடைசியில் அவற்றின் முன்னால் ஒரு “ 1 “ போட்டான் பாருங்க..! அதுதான் ராஜா.! இன்று ஹங்கேரியில் இருந்து நல்லா வெள்ளைத் தோல் ஆளுக நம் கருப்பன் ஒருவனின் இசையை ரசிக்க வந்தான் பார்த்தீர்களா..? That is a great thing he achieved in his life..! எத்தனையோ பேரிடம் இசை கற்றுகொண்டாலும், அவன் ஒரு சாதாரண மனிதனாக இருந்து ஒரு சுயம்புவாகத் தன்னை வளர்த்துக்கொண்டான். அவன் இசையைப் பற்றி சொல்ல வேண்டும் என்பது இமயமலைக்கு முண்டாசு கட்ட முயற்சிப்பதைப் போன்றது.

கௌதம்... You are a hi-tech man..! ஆனாலும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக இந்த மண், இந்த மக்கள், இந்த மொழி, ஆகியவற்றை தன் இசையில் இரண்டறக் கலந்து எங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறானே.. அந்த மண்வாசனை மனிதனை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்..!

அவனுடைய ஒரு பாடலின் பாணி இன்னொரு பாடலில் வரவே வராது. எங்களுக்கெல்லாம் வாழ்க்கையில் நிறைய பொழுதுபோக்குகள் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் அவன் அர்ஜுனன் வில்லை எடுத்துக் குறிபார்த்ததுபோல, அவன் குறிக்கோள் இசையாக மட்டுமே இருந்திருக்கிறது.

‘டிக் டிக் டிக்’ என்று ஒரு படம் எடுத்தேன். அதில் ஒரு காட்சி வரும். தேங்காய் சீனிவாசன், ஒரு Call Girlன் தொலைபேசி எண்ணை எழுதி கமல்ஹாசனிடம் கொடுப்பார். அதை கமல் தூக்கி எறிந்துவிடுவார். அதன்பின்னர் கமல் படுக்கையில் படுத்திருக்கும்போது சுற்றிலும் ஆங்கிலப்பத்திரிக்கைகள் பெண்களின் அட்டைப்படத்துடன் கிடக்கும். அந்தக் காட்சிக்கு ரீரெக்கார்டிங் செய்யவேண்டும். செய்யச்சொல்லிவிட்டு நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். வீட்டிற்குச் சென்றால், “ஐயோ.. இந்தக் காட்சியில் கோரஸ் வாய்ஸ் வரவேண்டுமே..?? இவன் என்ன வாசித்திருக்கிறானோ” என்று யோசித்து மீண்டும் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வந்து, ‘யோவ்.. அந்தக் காட்சியில்..’ என்று ஆரம்பித்ததும், ‘என்ன...? இங்கு என்ன வாசிக்கவேண்டும் என்று சொல்ல வந்திருக்கிறாயா? அதெல்லாம் சொல்லாதே. நான் ஒரு Background இசை வாசித்திருக்கிறேன். அதைக்கேள் என்று காட்சியைக் காண்பித்தான். பார்த்தால் நான் என்ன யோசித்திருந்தேனோ அதேபோன்றதொரு இசையை அந்தக் காட்சிக்கு அமைத்திருந்தான். அப்படி என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடியவன் அவன்.

அதேபோல ‘முதல்மரியாதை’ படத்தில் ஒரு காட்சி. ஒரு ஐந்து சீன்களில் எடுக்கவேண்டிய ஒரு விஷயத்தை ஒரு பதினெட்டு ஷாட்களில் எடுத்திருப்பேன். அந்தக் காட்சிக்கு அவன் அமைத்திருந்த ஒரு புல்லாங்குழல் இசையைப் போன்றதொரு இசையை அமைக்க இன்று வரை இந்தியாவிலேயே யாரும் இல்லை என்றுதான் சொல்வேன்.

‘காதல் ஓவியம்’ படத்தில் வரும் ‘சங்கீத ஜாதிமுல்லை’ பாடலின் இறுதியில்.. ஒரு காட்சியை அமைத்திருந்தேன். ராதா ஆடிமுடித்து கீழே விழுவதுபோன்ற ஒரு காட்சி. இந்தக் காட்சிக்கான இசை பாடலின் முடிவில் ரெக்கார்ட் செய்யப்படவில்லை. நான் காட்சியை பாடல் முடிந்தவுடன் சேர்த்து ஷூட் செய்தேன்..! Lip Sink இல்லாததால், உதடுகளுக்கு மேல் கண்களை மட்டும் வைத்து ஷாட்கள் எடுத்து கொண்டுசென்றேன். ‘என்னய்யா?’ என்றான். ‘நீ போட்ட பாடலின் முடிவில் ஒரு சின்ன காட்சி வைத்திருக்கிறேன். அதற்கும் இசையமைத்துக் கொடுத்துவிடு’ என்று கூறினேன். ‘என்னய்யா இது..?? நீ பாட்டுக்கு எடுத்துக்கொண்டு வருவாய்.. அதற்கெல்லாம் வாசிக்கமுடியுமா?’ என்றான். ‘நீ வாசிப்பாய் என்று தெரிந்துதான் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்’ என்றேன். அதேபோல அந்தக் கண்களின் அசைவுகளுக்கு ஏற்றவகையில் மட்டும் ரிதம் அமைத்து அற்புதமாக இசையமைத்துக்கொடுத்தான். அவன் என் நண்பன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.

கௌதம்... நீ பெரிய கலைஞன்தான்.. பெரிய இயக்குனர்தான்.. ஆனால் நீ ஒரு நல்ல Singer என்பது இன்றுதான் எனக்குத் தெரியும். இதுவரை இளையராஜாவுக்கு யாருமே செய்யாத ஒரு மரியாதையை நீ செய்திருக்கிறாய். Hats off to you..! அதேபோல, இன்னொரு விஷயம்.. நீங்க என்னதான் Coat போட்டிருந்தாலும், அவன் வேட்டியில்தானே இருக்கிறான்.? (சிரிப்பு) அதனால் எனக்கு கண்டிப்பாய் இன்று ஒரு கிராமியப் பாடல் வேண்டும்’ என்று கேட்க.., Guitar துணையுடன் பாடகர் கார்த்திக் ‘பொட்டுவச்ச மல்லிக மொட்டு’ பாடலின் பல்லவியையும் ஒரு சரணத்தையும் பாடினார். (மொத்த அரங்கமும் பாடலின் முடிவில் வரும் ஸ்டைலில் பாடலுடன் சேர்த்து கைதட்டி Rhythm கொடுத்தது ஜோர்).

மைக் இயக்குனர் பாலுமகேந்திராவின் கைகளைவந்தடைந்தது.

‘இசைஞானியும் எனக்குமான உறவு, என் மூன்றாவது படமான ‘மூடுபனி’யில் இருந்து துவங்கியது. அந்தப் படத்திலிருந்தே என் எல்லாப்படங்களுக்கும் இளையராஜா அவர்கள்தான் இசை. அவருடன் வேலை செய்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். இசைக்காக மட்டுமல்ல. ஆன்மீகத்துக்காக...! தமிழுக்காக..! சினிமாவுக்காக..! அது ஒரு அற்புதமான அனுபவம். மூடுபனி’ படத்தின்போது ஒருமுறை அவர் என்னிடம் ‘சினிமாவுக்கான இசையை யார் தீர்மானிப்பது?’ என்று கேட்டார். அதற்கு உடனடியாக எனக்கு பதில் கொடுக்கத் தெரியவில்லை. கொஞ்சம் யோசித்து “சினிமாவுக்கான இசை என்பது ஒரு ஆற்றின் ஓட்டத்தைப் போன்றது. ஆறு ஒரு சுனையாகத் துவங்கலாம். சில இடங்களில் அருவிகளாகப் பிரியலாம்.. இன்னுமொரு இடத்தில்.. ஒரு பரந்த நீர்பரப்பாக அது விரியலாம்.. வேறொரு இடத்தில் சலசலப்புடன் ஓடலாம். இந்த நதியின் பிரயாணமானது கடலைச் சென்று அடையும்வரை பல்வேறு பரிமாணத்தில் தோற்றத்தில் செல்கிறது. இதை நதியா தீர்மானிக்கிறது? மாறாக அந்த இடத்தின் Geography தான் தீர்மானிக்கிறது” என்று பதில் சொன்னேன். கைதட்டினார். அதுபோல படத்திற்கான இசையை அந்தப் படம்தான் தீர்மானிக்கிறது. அந்தப் படத்தின் தேவை அதை தீர்மானிக்கிறது.

35 வருடங்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். நேற்றுப்போல இருக்கிறது. சமீபத்தில் திடீரென்று ஒருநாள் அவரைப் பார்க்கவேண்டும்போல இருந்தது. ஒரு காரணமும் இல்லை. என்னுடைய பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்த நான் பாடம் முடிந்ததும், நேராக அவருடைய ஸ்டுடியோவிற்குப் போனேன். அவருடைய அறையின் கதவைத் திறக்க முயற்சித்தேன். அதே நேரம் அவர் உள்ளிருந்து அவர் திறக்கிறார். ‘என்ன?’ என்று சிரித்தார். ‘ஒன்றுமில்லை ராஜா..! எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும்போல இருந்தது. அவ்வளவுதான்... Nothing Special.. என்று சொல்லி, உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இதுபோன்ற பல நெகிழ்வான தருணங்கள் எனக்கும் அவருக்கும் இடையில் இருந்திருக்கின்றன.

நான் இயக்கும் எல்லா படங்களுக்கும் அவர்தான் இசையமைக்க வேண்டுமென்பதில் நான் மிகவும் பிடிவாதமாக இருப்பேன். இதுவரை அப்படித்தான். இனியும் அப்படித்தான். அவர் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அவருடைய இசை.. முக்கியமாக.. His Background Score… Something absolutely stunning..! அவருடைய இசையோடு பார்க்கும்போதுதான் .. “ஓஹோ.. நாம் எடுத்த காட்சியில் இவ்வளவு உணர்வு இருக்கிறதா?” என்று வியப்பாக இருக்கும். நான் இன்னும் ஒரு ஐந்தாறு படங்கள் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இப்போதும் ஒரு படம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். அதற்கும் அவர்தான் இசை. என்னுடைய திரைப்படக்கல்லூரியை நான் துவக்கியபோது, அவர்தான் வந்து குத்துவிளக்கேற்றித் துவக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதேபோல வந்து துவக்கிவைத்தார். அந்த மகாமேதைக்கு இந்தத் தருணத்தில் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். என்னுடைய படங்களுக்கு அவர் மறக்க முடியாத பாடல்களை, பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். அவற்றுள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு படம் இருக்கிறது. அது தமிழ்படம் அல்ல.. ‘ஓளங்கள்’ என்ற மலையாளப்படம். அந்தப் படத்திற்கு அவர் கொடுத்த இசை, அற்புதமானது. அந்தப் படத்திற்காக அவர் தந்த ‘தும்பி வா’ என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். This is my favourite of all the songs he has given me..! என்னை நானாக்கிய எல்லா பெண்களுக்கும் இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன். Raja.. Thank you so much. I really feel proud of this moment. We’ve worked together for nearly 22 films over a span of 35 years. I am left with another 5 or 6 films more. So when I come to you.., please accommodate me.” என்று முடிக்க ‘தும்பி வா.. பாடலை கார்த்திக் பாடினார்..!

பாலசந்தர் மைக் ஏந்தினார்..!

“அனைவருக்கும் வணக்கம். ஒரு Spectacular Show ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். கௌதம்மேனனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு ‘லவ்’ மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... என்றவர் எழுதிக்கொண்டுவந்திருந்த குறிப்பை வாசித்தார்..!

“நீதானே என் பொன்வசந்தம்..! திரு. “கௌதம்வாசுதேவமேனன்”. உங்கள் பெயரைச் சிதைக்காமல் போட்டுக்கொள்வதே நீங்கள் முழுமையானவர் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது. “நீதானே என் பொன்வசந்தம்” என்பதை யாரும் யாரைப் பார்த்து வேண்டுமானாலும் சொல்லலாம். இப்படி ஒரு கவித்துவமான தலைப்பைப் படத்திற்குக் கொடுத்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது ராஜாவின் மேடை. ராஜாங்க மேடை. முப்பத்தாறு வருடங்களுக்கு முன் அன்னக்கிளி வெளியானபோது பார்த்த ராஜாவை நான் இப்போதும் அதே வேகத்தோடு பார்க்கிறேன். நாங்கள் கைகோர்த்து பாடறிந்த படிப்பறிந்த கதையை ஊரறியும். பொதுவாகவே இசையமைப்பாளர்கள் மீதும், கவிஞர்கள் மீதும் எனக்கு ஒரு தவிர்க்க இயலாத பொறாமை உண்டு. அவர்கள் தங்கள் படைப்புகளை காற்றில் விதைத்து வைக்கிறார்கள். ஆனால் இயக்குனர்களாகிய எங்களுக்கு ஒரு வெள்ளைத் திரை ஒன்று தேவைப்படுகிறது. ஒரு பாடலை முழுமையான இசைக்கோர்வைகளோடு பதிவு செய்த காலம் அனேகமாக எண்பதுகளோடு முடிந்து போயிற்று. கௌதம்மேனனும், இளையராஜாவும் அந்தப் பொற்காலத்தை திரும்பவும் எடுத்து வந்திருக்கிறார்கள் இந்த நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலமாக. இளையராஜா ஒரு சங்கீத வள்ளல் என்று சொல்லலாம். நம் எதிர்பார்ப்புக்கும் மேலாகவே சங்கீத ஸ்வரங்களை வாரி வாரி வழங்குவார். அவரது இசையைக் கேட்டு வெளிநாட்டுக் கலைஞர்கள் எல்லாம் வியந்து போனார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த இசைச்சக்கரவர்த்தி மூன்று தலைமுறைகளை தன் வசப்படுத்தியிருக்கிறார். ஒருசில ஸ்வரங்களை வைத்துக்கொண்டு பல வர்ணஜாலங்களை உருவாக்குவதில் அவர் ஒரு ஜாம்பவான். அவர் இசையைப் பற்றி ஒருவாசகத்தில் சொன்னால் போதும். அதுதான் அவர் இசையமைத்த திருவாசகம். சங்கீதத்தின் நாடி பிடித்துப் பார்த்து அதிலே Doctorate வாங்கியவர் அவர். இந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் உணர்வுடன் பதிவுசெய்திருக்கிறார். இனி வரும் ஆண்டுகள் 1980களாக இருக்கட்டும். இப்போது கூறுகிறேன். இளையராஜாவும், கௌதம்மேனனும் 2012 தேசிய விருதுகளுக்காக டெல்லி செல்கிறார்கள்”.

தொடர்ந்து ‘பூங்காற்று திரும்புமா’ பாடலை பாலசந்தர் விரும்பிக்கேட்க, பாடல் அரங்கேறியது.

இயக்குனர் ஆர். சுந்தரராஜன்..!

“பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் துவங்கி, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நான் பாடும் பாடல், மெல்லத் திறந்தது கதவு என்று நிறைய படங்கள் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கே.வி. மகாதேவன் அவர்களின் பாடல்களையும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாடல்களையும் கேட்டு நான் தூங்கியிருக்கிறேன். ஆனால் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு நான் தூங்கியதில்லை. ஏன் தூங்கியதில்லை என்றால், தூங்கும்போது ஒரு பாடலைக் கேட்க முடியாது. எங்களுடைய காலம் ஒரு பொற்காலம். ‘இளையராஜாவின் Music கிடைத்தால்.. நீ டைரக்டர்” என்று ஒரு காலம் தமிழ்சினிமாவில் இருந்தது. அப்போதிருந்த படங்களைப் பார்த்து எனக்கு இருந்த அபிப்ராயம் என்னவென்றால், ‘இசை என்றால் Number one இளையராஜா... Number Two இளையராஜா.. Number Three இளையராஜா.. Number Four இளையராஜா.. தூரத்தில் ஒருவர் இருப்பார்.. அங்கேபோய் பார்த்தால் அவரும் இளையராஜாதான். வேறு யாருமே இல்லை என்பதுபோல அவர் இருந்தார்.

இளையராஜா அந்த சமயத்தில் ஒரு ஏழு பாடல்களைக் கம்போஸ் செய்து வைத்திருந்தார். வைத்துக்கொண்டு அந்த ஏழு பாடல்களையும் யார் ஒரே படத்தில் உபயோகிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அவற்றைத் தருவேன்’ என்பதில் உறுதியாக இருந்தார். அப்போது இருந்த நிறைய இயக்குனர்கள், அவரிடம் சென்று ‘எங்கள் படத்தில் இருப்பதே நான்கு பாடல்கள்தான், ஐந்து பாடல்கள்தான்... இப்படி இருக்கும்போது ஏழு பாடல்களையும் ஒரே படத்தில் போடச்சொன்னால் எப்படிப்போடுவது?’ என்று கேட்டனர். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஏழு பாடல்களையும் ஒரே படத்தில் போடுவதென்றால் சொல்லுங்கள். இந்த பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் ஆகும்” என்று மிகவும் பிடிவாதமாக இருந்தார். இந்த விஷயத்தைப் பஞ்சு அருணாசலம் வந்து என்னிடம் கூறினார். நான் அவரிடம் சென்றேன். அவர் கம்போஸ் செய்திருந்த அந்த ஏழு பாடல்களையும் கேட்டேன். அந்த ஏழு பாடல்களையும் கேட்டபிறகு அந்தப் பாடல்களுக்கு நான் எழுதிய கதைதான் “வைதேகி காத்திருந்தாள்” என்று கூறித் தனக்குப் பிடித்த பாடலாக “அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலைக் கேட்க, கார்த்திக் பல்லவியைப் பாடி முடித்தார்.

அடுத்ததாய் இயக்குனர் பி.வாசு எழுந்து நின்று மைக் பிடித்தார்.

“நான் ஏன் எழுந்து நின்றேன் என்றால் அது ராஜா சாருக்காக. நான் முதன்முதலில் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அஸிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றியபோதுதான் ராஜா சாரை முதன்முதலில் சந்தித்தேன். அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு 20 படங்கள் நான் ராஜா சாருடன் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. அதில் குறிப்பிடத்தகுந்தது ‘சின்னத்தம்பி’. அவர் மிகவும் பிஸியாக இருந்த அந்த நேரத்தில் ஒரு மாதம் கஷ்டப்பட்டு அவரிடம் தேதி வாங்கி ஒரு நாள் அவரிடம் அந்தக் கதையைக் கூறினேன். நான் அந்தக் கதையை அவரிடம் கூறத்துவங்கும்போது 3 மணி.. முடிக்கும்போது 4 மணி. உடனே ஆர்மோனியத்தை எடுத்தார். அந்தப் படத்திற்கான அத்தனை பாடல்களையும் முப்பத்தைந்தே நிமிஷத்தில் கம்போஸ் செய்து முடித்தார். அதேபோல ரீரெக்கார்டிங் பற்றிச்சொல்லவேண்டும். கதாநாயகியின் கழுத்தில் ஒரு தாலி இருப்பது அவளது மூன்று அண்ணன்களுக்கும் தெரியவரும் காட்சி. அதுவரை ரீரெக்கார்டிங் சரியாகப் போட்டவர் அந்த இடத்தில் லைட்டாகப் போட்டுவிட்டு விட்டுவிட்டார். எனக்கு பயங்கர ஷாக். “அண்ணே.. கதையே இதுதான்ணே..! அந்த இடத்தில் ரீரெக்கார்டிங்கில் ஒரு Bang
வேணும்ணே..!’ என்றேன். ‘பேசாம இரு’ என்றவர், ‘அந்த இடத்தில் வேறு எந்த சப்தங்களோ Effectsஓ கொடுக்கக்கூடாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அதற்குப் பின் நானும் அப்படியே விட்டுவிட்டேன். அதன்பின் படம் வெளியானது. தியேட்டரில் சென்று பார்த்தேன். முத்தம் கொடுத்துவிட்டு ஓடியவுடன் குஷ்பு கீழே விழும் அந்தக் காட்சியில் ஒரே ஒரு Bell Sound மட்டும்தான் வரும். அந்த இடத்தில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ‘த்ச்சு.. ச்சு.. ச்சு..’ என்ற பரிதாப ஒலி நிறைய கேட்டது. மறுநாள் அவரிடம் சென்று ‘ஏன்ணே அந்த இடத்தில் இசை இல்லாமல் விட்டீங்க?’ என்று கேட்டேன். அந்த இடத்தில் தியேட்டரில் ‘உச்சு.. உச்சு.. Sound கேட்டதா? நான் ம்யூஸிக் போட்டிருந்தால் அந்த சத்தம் கேட்டிருக்குமா? அதனால்தான் போடவில்லை’ என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவருடன் வேலை செய்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று கூறி, ‘ஒரே நாள் உனை நான்’ பாடலைக் கேட்க .. கார்த்திக் குரலில் பாடல்..!

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்..!

‘நான் ஒரு Film Institute மாணவனாக இருந்தபோது, வயலினிஸ்ட் திரு. வி.எஸ். நரசிம்மன், பாடல்கள் எழுதுவதற்காக என்னை ராஜா சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ராஜா சார் என்னை பார்த்தார். ‘தம்பி.. நீ Directionக்குத் தானே படிக்கிறாய்?’ என்றார். ‘ஆமா சார்’ என்றேன். ‘முதலில் அதை படித்துவிட்டுவா. அதன்பின்னர் பாட்டெழுதலாம்’ என்றார். அதையே குறிக்கோளாக வைத்து நான் டைரக்டர் ஆனபிறகு என்னுடைய மூன்றாவது படத்திற்குத்தான் இளையராஜா அவர்களுடைய இசை. கம்போஸிங்கின்போது மிகவும் பயந்துகொண்டே செல்வேன். அவர் நல்ல மூடில் இருக்கும்போது பாடல்கள் வாங்கவேண்டும் என்று காத்திருந்து வாங்கிய ஒரு பாடல் ‘பச்சமலப் பூவு’. அந்தப் பாடலை நான் எழுதி முடித்தபின்னர், ரெக்கார்டிங் நடைபெற்றது. அவர் பிஸியாக இருந்ததால் ஒரு நான்கைந்து நாட்கள் கழித்து என்னைக் கூப்பிட்டார். ‘என்னய்யா இவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கே?’ என்று வாழ்த்தினார். அது எனக்கு மிகப் பெரிய Gift. அதைத் தொடர்ந்து நிறைய பாடல்கள் எழுதினேன்.

ஒருமுறை இளையராஜா சார் ட்யூன் போட்டு பிற இயக்குனர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல்கள் நிறைய இருந்தன. அவர் கொஞ்சம் மூட் சரியில்லாமல் இருந்தார். நான் அவரிடம் கம்போஸிங்கிற்காகச் சென்றபோது, ‘இன்னிக்கி வேண்டாம்யா.. அப்பறம் பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டார். அவருடைய அஸிஸ்டெண்ட் சுந்தரராஜனைப் பிடித்து, ‘அவர்கள் என்னென்ன ட்யூன்கள் வேண்டாம் என்று சொன்னார்களோ, அதைக் கொஞ்சம் காண்பியுங்கள்’ என்றேன். அதில் பொறுமையாக பார்த்துப் பார்த்து நான் தேர்ந்தெடுத்த பாடல்களில் ஒன்றுதான் எஜமான் படத்தில் வரும் ‘நிலவே முகம் காட்டு’. இன்னொரு பாடல், ‘ஒரு நாளும் உனை மறவாத’. ராஜா சார் ரெக்கார்டிங் எல்லாம் முடித்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்.

‘நீ இன்னும் போகலியா?’

‘இல்ல சார்..! நாளைக்கு ரெக்கார்டிங்...’

‘இல்லய்யா.. நாளைக்கு முடியாது..’

‘இல்ல சார்..! ட்யூன் நல்லா இருக்குது சார்’

‘எந்த ட்யூன்?’

‘அவங்க வேண்டாம்’னு சொல்லிட்டு போனாங்களே.. அதிலிருந்துதான் ரெண்டு ட்யூன் எடுத்து வச்சிருக்கேன் சார்.’

‘உனக்குப் பிடிச்சிருக்கா?’

‘ஆமா சார்!’

அப்படிக் கிடைத்ததுதான் அந்த இரண்டு பாடல்களும். அந்தப் பாடலில் வரும் வரிகள்போலவே “ஒரு நாளும் உனைமறவாத இனிதான வரம் வேண்டும். உணர்வாலும் உடல் உயிராலும், மொழியாலும், பிரியாத வரம் வேண்டும்’ என்று அவரைக் கேட்டுக்கொள்ளுகிறேன்”, என்று முடித்தார்.

தொடர்ந்து திரு. ஆர்.வி. உதயகுமாரின் விருப்பப்பாடலாக ‘பச்சமலப்பூவு’ பாடல் அரங்கேறியது.

இதன்பின்னர் இயக்குனர் திரு. சுரேஷ்கிருஷ்ணா தன்விருப்பப்பாடலாக தான் இயக்கிய சத்யா படத்திலிருந்து ‘வளையோசை’ பாடலைக் கேட்க கார்த்திக் பல்லவியைப் பாடினார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி..!

‘எனக்கு ராஜா சாருடன் ஏற்பட்ட அறிமுகம் வித்தியாசமானது. எந்த நடிகர் நடித்திருந்தாலும், ராஜா சாரின் இசை இல்லாவிட்டால் படம் இல்லை’ என்கிற அளவுக்கு அவரின் ஒரு இசைச் சர்வாதிகாரம் நிறைந்த காலம் அது. அது இன்று வரை இருக்கிறது. ‘விசிலடித்தால் எழுந்து போய்விடுவேன்’ என்று சொல்கிற ஒரு ஆளுமை இன்று தமிழ் சினிமாவில் வேறு யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. என்னுடைய முதல் படம் “புலன்விசாரணை”. பாடல்களே இல்லை. ராஜா சார் என்னிடம், ‘என்னய்யா..? பாட்டே இல்லாமல் படம் எடுத்திருக்கிறாய்?’ என்றார். நான் அவரிடம், ‘இல்ல சார்.. எல்லோரும் உங்கள் பாட்டை வைத்துப் படத்தை ஓட்ட நினைக்கிறார்கள். நான் உங்கள் பாடல்கள் இல்லாமலேயே படத்தை ஓட்டவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றேன். என்னுடன் நின்றிருந்த ப்ரொட்யூஸருக்கும் மற்றவர்களுக்கும் பயங்கர ஷாக்..! ராஜா சார் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். ரீரெக்கார்டிங் முடிந்தது. என்னைக் கூப்பிட்டார். ‘நீ இந்தப் படத்தை ரீரெக்கார்டிங்கை எடுத்துவிட்டு தியேட்டரில் திரையிட்டுப்பார்..!” என்றார். நான் முதலில் அவரிடம் அப்படிப்பேசியதற்கு மன்னிப்புக் கேட்டேன்.

‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின்போதும், ராஜா சார் ஒரு பாடல் போட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை. வேறு பாடல் கேட்டேன். ‘என்ன பாடல் வேண்டும்?’ என்றார். சார்.. நான் ஷோலே மாதிரி படம் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு ‘மெஹ்பூபா மெஹ்பூபா’ போல ஒரு பாடல் வேண்டும்’ என்று கேட்டேன். ‘யோவ்.. அது மாதிரி .. இது மாதிரி.. என்றெல்லாம் கேட்காதே’ என்றார். ‘சார்.. எனக்கு சொல்லத் தெரியவில்லை சார்’ என்றேன். அதன்பின்னர் அவர் போட்டுக்கொடுத்த பாடல்தான் ‘ஆட்டமா தேரோட்டமா’. அதன்பின்னர் செம்பருத்தி படத்திற்கு மொத்தம் 9 பாடல்கள். ஒன்பது பாடல்களையும் நாற்பதே நிமிடங்களில் எனக்குக் கம்போஸ் பண்ணிக் கொடுத்தார். ‘இப்போ என்னய்யா? உன் மேல நம்பிக்கை போயிடுச்சா? ஒன்பது பாடல்கள் வச்சு படம் எடுத்திருக்கிறாய்?’ என்று கேட்டார். ‘இல்ல சார்.. உங்கள் பாடல்களின் மேல் காதல் வந்துவிட்டது’ என்று சொன்னேன். அவருடன் நான் பணியாற்றியது ஒரு பாக்கியம்” என்று முடிக்க ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் பாடப்பட்டது.

இத்துடன் இயக்குனர்களுடனான கௌதம்மேனனின் உரையாடல் முடிவுக்கு வந்தது.

படத்தின் நாயகி சமந்தா, ‘சற்று முன்பு’ பாடலை ‘இது படத்தின் க்ளைமாக்ஸ் பாடல்’ என்று கூறி அறிமுகம் செய்ய, பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் ஜீவா மேடையேறி படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசினார். தொடர்ந்து மேடையேறிய யுவன், ‘பெண்கள் என்றால்’ பாடலைப் பாடினார். இதன்பின்னர், ‘என்னோடு வா வா என்று’ பாடலின் Composing-Making திரையிடப்பட்டதைத் தொடர்ந்து, கார்த்திக் பாடலைப் பாடினார். பாடலை கார்த்திக் பாடி முடிக்கவும் மேடையில் மறைவாய் அமர்ந்திருந்த இசைஞானி, கார்த்திக்கை அழைத்து அவர் காதில் ஏதோ சொல்ல, “என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்” என்ற வரிகளை மட்டும் கார்த்திக் பாட, இசைஞானி தன்னையும், ரசிகர்களையும் சுட்டிக்காட்டி அபிநயம் செய்ய, அதிர்ந்து அடங்கியது ஸ்டேடியம்.

இதன்பின்னர் படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. அதன்பின்னர் இயக்குனர் திரு. பாலசந்தர் படத்தின் ஒலிப்பேழையை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.

நிறைவுப் பாடலாக ‘வானம் மெல்ல’ பாடலைப் பாட மேடைக்கு வந்தார் இசைஞானி. திரையில் ஒரு ப்ளஸ் டூ மாணவன் பாடுவதுபோன்ற காட்சி. பதின்வயது இளைஞனின் உணர்வுகளுக்கு 69 வயது சிங்கத்தின் குரல் அப்படியே அற்புதமாகப் பொருந்தியது விந்தை..! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத, வயதே ஆகாத குரல்..!

மேடையேறிய படத்தின் தெலுகு நாயகன் நானி, இசைஞானியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொள்ள, படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வரிசையாய் பெயர் சொல்லி நன்றி கூறினார் கௌதம்மேனன்.

நிறைவாய் பேசிய ராகதேவன் ‘இந்தப் படத்திற்கான இசை சாதாரணமாக நடந்து முடிந்தது கிடையாது. ‘நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ரெக்கார்ட் பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று கௌதம்மேனன் என்னிடம் கூறினார். நான் அவரிடம் எந்தக் Clueவும் கொடுக்காமல் ரெக்கார்டிங்கைத் துவக்கினேன். இந்தப் பாடலின் வடிவம், Orchestration இப்படித்தான் வரப்போகிறது என்று எந்த விஷயத்தையும் அவரிடம் நான் சொல்லவில்லை. ‘நீங்கள் எப்படி செய்தாலும் எனக்கு ஓ.கே.’ என்று அவர் விட்டுவிட்டார். ஆனால் ட்யூன் செலக்ட் பண்ணும்போது மட்டும் கரெக்ட்டான ட்யூன்களை செலக்ட் செய்தார். ‘காற்றைக் கொஞ்சம்’ பாடல், ஒரு சின்ன ‘Bit Song’காக செய்தது. அதை முழுப்பாடலாகக் கேட்டார். அதேபோல ஒரு சிச்சுவேஷனுக்குக் கொடுத்த இரண்டு மூன்று ட்யூன்களில் வேண்டியதை மட்டும் எடுக்காமல், மற்ற ட்யூன்களையும், ‘சார் இது Scriptல் இந்த இடத்தில் உபயோகமாக இருக்கும்’ என்று வாங்கிக்கொண்டார். இந்தப் படத்திற்கு நல்ல இசை வேண்டும் என்று அவர் மெனக்கெட்ட அந்தக் கடின உழைப்பிற்கு நீங்கள் அவருக்கு நன்றி சொல்லவேண்டும். இப்படி ஒரு Orchestraவுடன் இப்படி ஒரு Showவை நடத்துவது சாதாரணமான விஷயம் அல்ல. இந்தப் பாடலின் ரெக்கார்டிங்கின்போதே மூன்று Assistantகள் எனக்காக வேலை செய்தனர். நான் எழுதிய Scoreகளை எல்லோருக்கும் தனித்தனியாக காப்பி எடுத்துக் கொடுப்பதில் இருந்து திரு. செந்தில், கௌதம்மேனனுக்கு மிகவும் உதவியாக இருந்தார். ஆனால் ஒரு சிறிய தவறு நிகழ்ந்தது. செந்திலிடம் நான் ‘செந்தில்... இந்த ரெக்கார்டிங் எல்லாம் முடிந்தவுடன் எல்லா Scoresம் Collect பண்ணி நீங்கள் வைக்க வேண்டும். அது பின்னால் வரும் Generationக்கு ஒரு Record’ என்று சொன்னேன். ஆனால் எனக்கு Recordingகிற்கென வண்டி ஏற்பாடு செய்வதில் இருந்து, எனக்கு உணவு ஏற்பாடு செய்வதில் இருந்து, பற்பல வேலைகள் இருந்ததால், அவற்றுக்கு மத்தியில் அவர் அந்த Scoresஐத் தவற விட்டுவிட்டார். அந்த Scoresஐ அவர் தவறவிட்டுவிட்டதால், Nick, சி.டி.யில் இருந்து இசையைக் கேட்டுக் கேட்டு, ஒவ்வொரு நோட்ஸாக Prepare பண்ணி Orchestraவுக்குக் கொடுத்து, அவர்கள் இங்கே அதை இசைத்தனர். இந்த Show இப்படி சிறப்பாக இங்கு நடைபெற்றதற்கு முக்கியமான ஒரு காரணம் Nick... And the Orchestra… was wonderful..!” என்று கூறி முடிக்க மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்க 10.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

உள்ளே அடித்து ஓய்ந்த இசைமழையில் நனைந்து வெளியே வந்தால் அரங்கத்தின் வெளியே வான்மழையின் தூறல் முடித்திருந்தது. நிகழ்ச்சிக்கான டிக்கெட் அறிவிப்பு ஒரு வாரம் முன்பதாக மட்டுமே நடந்திருந்தும், ஒரு மனிதனைக் காண, அவர் இசையைக் கேட்க அரங்கையே நிறைத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், முகமெல்லாம் புன்னகையுடன் கலைந்து சென்றதைக் கண்டபோது, நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட காணொளி ஒன்றில் இருந்த வாசகம் ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்துபோனது.


“Blessed are those upon whom HE shines”

புகைப்படங்கள் நன்றி: திரு. Anand GK’s Facebook Album, Gautham Vasudev Menon Facebook Page மற்றும் Cinemavikatan Facebook Page.